Header Ads



‘இடம்பெயர்ந்த மக்களுக்கும் கொரோனா இடர் கொடுப்பனவு கிடைக்க வழி செய்யுங்கள்’ - பிரதமரிடம் ரிஷாட் கோரிக்கை

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு, இதுவரைக்கும் வழங்கப்படாமல் இருக்கின்ற 5000 ரூபா கொடுப்பனவினை, அம்மக்கள் பெற்றுக்கொள்வதற்கு தடையாக இருப்பவர்கள் தொடர்பில் உரிய கவனத்தினை செலுத்தி, அதனை அம்மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டியுள்ளார்.

பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது
 
கொரோனா தொற்றினால் நாட்டில் நிர்வாக முடக்கல் ஏற்பட்டதினால் மக்கள் பெறும்  சிரமங்களை எதிர்கொண்டனர். இதன்போது அரசாங்கம் நாட்டு மக்களுக்கு  5000 ரூபா கொடுப்பனவை முதற்கட்டமாக வழங்கியது. இந்த கொடுப்பனவை வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம், கல்பிட்டி, முந்தல், வண்ணாத்தவில்லு உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவில் வாழும் மக்களுக்கு வழங்குவதில் இழுபறி நிலை காணப்பட்டது.

அதனையடுத்து, ‘வடக்கு இடம் பெயர்ந்த மக்களின் அமைப்பு’ எடுத்துக்கொண்ட முயற்சியினால், வடக்கில் இந்தக் கொடுப்பனவை பெறாத நிலையில், புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு இதனை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், இது தொடர்பில் இன்னும் எதுவும் இடம்பெறாத நிலையில், பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு இந்த கொடுப்பனவை, தற்போது அவர்கள் வாழும் பகுதிகளில் வழங்குவதற்கு தேவையான உத்தரவினை உரிய அதிகாரிகளுக்கு விடுக்குமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்மக்களது இந்தப் பிரச்சினை தொடர்பில், அரசாங்க அதிபர்களுடன் பேசியுள்ளதாகவும், இதற்கான நிதி இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்ற பதிலையே அவர்களால் கொடுக்க முடிந்துள்ளதாகவும், இந்த நிதியினை வழங்காமல் தடுக்கும் செயற்பாடுகள் ஏதும் இடம்பெறுமெனில் அதனை கவனத்திற்கொண்டு, இடம்பெயர்ந்த நிலையில் வாழும் இம்மக்களுக்கு அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட இந்த உதவித் தொகையினை பெற்றுக்கொடுக்க, நாட்டின் பிரதமர் என்ற வகையில், தேவையான பணிப்புரையினை அரச அதிகாரிகளுக்கு வழங்குமாறும் அவர் மேலும் கேட்டுள்ளார்.

இதேவேளை, இடம்பெயர்ந்த இம்மக்கள் கடந்த தேர்தலில் ஜனநாயக ரீதியில் வாக்களிக்க செல்வதிலும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், இதற்காகவேண்டி ‘வடக்கு இடம் பெயர்ந்த மக்கள் அமைப்பினரால்’ மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளையும்  அரசியல் காழ்ப்புணர்வுடன் சிலர் நோக்கிய நிலையில், இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்த 5000 ரூபா உதவித்தொகை கிடைக்காமல் இருப்பதன் பின்னணி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இடப்பெயர்வுக்குள்ளான நிலையில் அரசினால் வழங்கப்படும் இந்த உதவித் தொகையினை தடுத்து நிறுத்தாமல், அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையினை எடுப்பதன் அவசியத்தையும் பிரதமரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

1 comment:

  1. He should not use the word “Idam peyarntha”. Instead he should use the term “Thurathappatta”. These people in question didn’t move to Puttalam willingly but chased out by Tigers.

    ReplyDelete

Powered by Blogger.