மிகத் தெளிவான நிலைப்பாட்டில், மர்ஜான் பளீல் ஹாஜியார் - சந்திரிக்கா சொன்ன 2 விசயங்கள்
சனிக்கிழமை (06.06.2020) காலையில் சில நண்பர்களின் அழைப்பை ஏற்று எமது உயர்கல்விக் கோட்டை பலராலும் மாணிக்கக் கோட்டை ஷாதுலிய்யா தரீக்காவின் கோட்டை என அழைக்கப்படும் சீனன் கோட்டைக்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டேன்.
காமில் முக்தார் ஹாஜியார் மற்றும் நண்பர் அஸ்ஹர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பல பிரமுகர்கள் நண்பர்களையும் சந்தித்த எமக்கு பிரபல சமூக சேவகர் மாணிக்க கல் வியாபாரி, முஸ்லிம் சமய கலாசார விவாகாரங்களுக்கான பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசகர் மற்றும் பொதுஜன பெரமுண தேசியப்பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல் அவர்களுடன் ஒரு சினேக பூர்வமான சந்திப்பும் ஏற்பாடாகி இருந்தது.
தற்போதைய நாட்டு நடப்புகள், அரசியல் கள நிலவரங்கள், சமூகம் எதிர் கொண்டுள்ள சவால்கள், அவற்றின் பின்புலங்கள், தேசிய வாழ்வில் எமது பங்களிப்புகள், எதிர்கால நடவடிக்கைகள் என பல விடயங்களையும் நாம் கலந்துரையாடினோம்.
முட்டை வியாபாரிகளை உதாரணம் காட்டி "எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதீர்கள்" என கலாநிதி பதியுத்தீன் அவர்கள் வலியுறுத்தியது போல அவரது பாசறையில் அரசியல் பயணம் செய்த மர்ஹும் பழீல் ஹாஜியார் அவர்களின் புதல்வர் மர்ஜான் பழீல் அவர்களும் பல விமர்சணங்கள் அசெளகரியங்களுக்கு மத்தியிலும் மிகத் தெளிவான அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதனைக் காண முடிந்தது.
சமகால தேசிய அரசியலிலும் சமூக அரசியலிலும் நாம் கடந்து செல்கின்ற சுனாமி அலைகளாக திரண்டுவரும் சவால்களுக்கு மத்தியில் தனிமையாக பொறுப்புக்களை அமானிதங்களை சுமப்பது குறித்து அச்சம் கொண்டுள்ளதாகவும் சகலரும் தனக்கு தேவையான ஆலோசனைகளை ஒத்துழைப்புகளை வழங்கி பயணத்தில் பங்காளர்களாக வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அரசியலில் மக்களது வரிப்பணத்தில் வாழ்க்கை நடத்த எத்தகைய அவசியம் தனக்கு இல்லை என்பதனையும் அல்லாஹ் தனக்களித்துள்ள செல்வங்களை செல்வாக்குகளை தேசத்திற்கும் சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் தான் எவ்வாறு இக்லாஸுடன் பயன்படுத்த வேண்டும் என சிந்தித்து செயலாற்றுவதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை இன்று சமூகம் எதிர்கொண்டுள்ள சவால்களில் பெரும்பாலானவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதிலும், அவற்றிற்கு சாதகமான களநிலவரங்களை எமது சமூகத்தின் கடந்த ஓரிரு தசாப்த கால அரசியலும் காரணமாக அமைந்திருப்பதனை சில உதாரணங்களுடன் தனது அவதானங்களாக முன் வைத்தார்.
இரண்டு அரசியல் பிரமுகர்களைப் பற்றி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தன்னிடம் எடுத்துக் கூறி சில அறிவுரைகளை சொன்னதாக கூறிய நண்பர் மர்ஜான் பழீல் இவ்வாறு சொன்னார்:
முதலாமவர் மிகவும் முதிர்ச்சியான சாதுரியமான சாணக்கியமான அரசியல் ஆளுமை எனது அரசில் இருக்கும் பொழுது சமூகம் சார் பிரச்சினைகளை கோரிக்கைகளை சுமுகமாக ஜனாதிபதி என்ற வகையில் என்னுடன் கதைத்து வாதித்து தன்பக்க நியாயங்களை எடுத்துக் கூறிவிட்டுத் தான் பாராளுமன்றம் அமைச்சரவை ஊடகங்கள் என குரல் எழுப்புவார், ஆனால் இரண்டாமவர் ஊடகங்களில் குரல் எழுப்பி வேண்டப்படாத அசெளகரியங்களை எமக்கு ஏற்படுத்தி விடாடுத்தான் எம்மிடம் வருவார், நீங்கள் முதலாமவர் போன்று நிதானமாக சாமர்த்தியமாக அரசியல் செய்ய வேண்டும் என்று கூறினாராம்...
அந்த வகையில் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ, பிரதமமந்திரி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் தமது குடும்பத்திற்கு இருக்கும் பாரம்பரிய நட்பினை தாம் எவ்வளவு சாமர்த்தியமாக கையாள்கிறோம் கையாள வேண்டும் என சில திருப்திகரமான விடயங்களை அணுகுமுறைகளை என்னிடம் எடுத்துக் கூறினார்.
மிகவும் பணிவாகவும், எளிமையாகவும் தான் எல்லாவகையான நிபுனத்துவங்களும் கிடைக்கப் பெற்றவனல்ல என்றும் சமூகத்தின் எல்லா துறை சார்ந்தவர்களும் தனது தேசிய அரசியல் பயணத்தில் தத்தமது பங்களிப்பை செய்து தன்னை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார், அவ்வாறு தேசிய சமூகப் பணிகளில் கரிசனை கொண்டவர்களுக்காக தனது செயலகம் எப்போதுமே காத்திருக்கிறது திறந்திருக்கிறது என்பதனை வலியுறுத்திக் கூறினார்.
எமக்கு பகல் போசனத்தை ஏற்பாடு செய்திருந்த மர்ஜான் பழீல் ஹாஜியார் தானாகவே ஏற்பாடுகளை பார்த்து கவனித்த விதமும் பரிமாறி உபசரித்த விதமும் அவரது உயர்ந்த குணாதிசியங்களை மட்டுமல்ல அந்த ஊர்மக்களின் உபசரிக்கும் மனப்பான்மையை உணர்த்தி நின்றன.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

Post a Comment