Header Ads



பள்ளிவாசல்கள் மீள்திறப்பின் போது, கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்கள்

- முஹம்மத் பகீஹுத்தீன் -

கொரோனா தொற்று நோய் காரணமாக உலகமே முடக்கப்பட்ட நிலையில் இருந்தமை யாவரும் அறிந்ததே. வழிபாட்டுத் தளங்களும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. தற்போது சில நாடுகள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புவதை அவதானிக்க முடிகிறது. மூடப்பட்ட பள்ளிவாசல்களும் மீண்டும் திறக்கப்படுகின்றன. இடைநிறுத்தப்பட்ட கூட்டுத் தொழுகைகள் மற்றும் ஜும்மா தொழுகைகள் மீண்டும் வழமைக்கு வருகிறது. பள்ளிவாசல் மீள்திறப்பு என்பது மனக் கஷ்டத்துடன் பொறுமை காத்த முஸ்லிம்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாகும். இது ஏங்கித் தவித்த உள்ளங்களை குளிரச் செய்யும் சுபசோபனமாகும்.

பள்ளிவாசல்கள் மீள்திறப்பின்போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் குறித்த வழிகாட்டல்களை அரசாங்கம் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்கள் தந்துள்ளன. அவற்றை கண்டிப்பாக முஸ்லிம்கள் கவனத்திற் கொண்டு செயற்படுவது அவசியம் என்பதை கலாநிதி அக்ரம் கஸ்ஸாப்b அவர்கள் ஷரீஆவின் நிழலில் விளக்கிக் கூறியுள்ளார்கள். அவருடைய வாசிப்பில் இருந்து முக்கியமான சில பகுதிகளை வாசகர்களுக்காக இங்கு தருகின்றோம்.

1) வணக்க வழிபாட்டுத் தளங்கள் மீள்திறப்பின் போது அரசாங்கம் வழங்கும் வழிகாட்டல்களையும், சட்ட ஒழுங்குகளையும், விதிக்கப்படுகின்ற கட்டுப்பாடுகளையும் மக்கள் முறையாக பின்பற்றுவது அவசியமாகும்.

2) கோவிட் 19 வைரஸ் வயோதிபர்களை விரைவாக தொற்றும் என்றும் அவர்களுக்கு உயிராபத்தும் அதிகம் என்பதையும் துறை சார்ந்த வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். எனவே முதியோர்கள் சனத்திரள் உள்ள இடங்களை தவிர்ப்பதில் மிகுந்த கவனம் எடுக்க வேண்டும். சமூகத் தரப்பில் இருந்தும் இது குறித்து மிகுந்த கரிசனை எடுக்கப்பட வேண்டும். இஸ்லாமிய சட்டப் பரப்பில் நோயாளிகளுக்கும் வயோதிபர்களுக்கும் விதிவிலக்கான சட்டங்களும் சலுகைகளும் உள்ளன. 

3) சேர்த்து தொழுவதற்காக உள்ள சலுகையை கடைப்பிடித்தல்: 

இறை தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களுடன் பயணங்கள் மேற்கொண்ட சந்தர்ப்பங்களில் மழை, கடும் குளிர், தேவை போன்ற காரணங்களுக்காக தொழுகைகளை அவர்கள் முகாமிட்ட இடங்களிலேயே தொழுது கொள்ளுமாறு வழிகாட்டியுள்ளார்கள். மேற்படி காரணங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் பயணங்களில் சேர்த்து தொழுத சம்பவத்தை இப்னு உமர் ரழி அவர்கள் அறிவித்துள்ளர்கள். (புகாரி 632, முஸ்லிம் 697) 

எனவே நோய் தொற்றும் என்ற அச்சம் நிலவும் போது ளுஹரையும் அஸரையும் சேர்த்து தொழலாம். அவ்வாறே மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து தொழுலாம். இது நோய் தொற்றும் என்ற பயம் உள்ள பகுதிகளில் தேவை நிமித்தம் கடைப்பிடிக்க முடியுமான ஒழுங்காகும். ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது மினாவில் தரிப்பது வாஜிபாகும். மினாவில் தரிக்கும் அந்த நாட்களில் ஹஜ்ஜாஜிகளுக்கு நீர்புகட்டும் பணிக்காக மக்காவில் தங்குவதற்கு அப்பாஸ் ரழி அவர்கள் அனுமதி கேட்டார்கள். அந்த தேவையை கருத்திற் கொண்டு நபிகளார் அவருக்கு அனுமதி கொடுத்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

4) தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அல்லது பாதிக்பப்பட்டிருக்காலாம் என்ற சந்தேகம் உள்ள ஒருவர் அல்லது தன்னால் அடுத்தவருக்கு தீங்குவரலாம் எனக் கண்டால் அவர் ஜமாஅத் தொழுகைக்கோ அல்லது ஜும்மா தொழுகைக்கோ பள்ளிவாசலுக்கு வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 

அடுத்த வருக்கு ஒரு தீங்கு ஏற்படும் செயலை தெரிந்து கொண்டே செய்வது பாவமான காரியமாகும். வெள்ளைப்பூண்டு, வெங்காயம் சாப்பிட்ட ஒருவர் பள்ளிவாசலுக்கு வருவதையே நபிகாளார் தடுத்துள்ளார்கள். அடுத்த மனிதனுக்கு துர்நாற்றம் தீங்காக அமையும் என்று கருதியே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. (புகாரி)

5) கொரோனா ஆபத்து முற்றாக நீங்கும் வரை உள்ள காலம் சலுகைகளுக்கான காலமாகவே கருதப்படுகிறது. எனவே ஒரு பள்ளிவாசலில் பல ஜும்மா தொழுகைகள் நடாத்தப்பட முடியும் அல்லது ஒரு உரில் உள்ள பல பள்ளிவாசல்களில் ஜும்மா நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட முடியும். இது பாரியளவில் சனத்திரள் கூடுவதை தவிர்க்க உதவும். இது குறித்து அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான். ஆனால் இது போன்ற அசாதாரண சூழ்நிலைகள் அதற்கு இடம் கொடுக்கிறது. 

மக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள ஊர்களிலும், ஒரு இடத்தில் அனைவரும் ஒன்று கூடுவது கஷ்டம் என்ற நிலையிலும் ஒன்றுக் மேற்பட்ட ஜும்மா நடைபெறுவது ஆகுமாகும் எனவும் அதுவே சரியான சிந்தனையாகும் எனவும் இமாம் நவவி அவர்கள் தனது மஜ்மூஃ என்ற கிரந்தத்தில் பதிவு செய்துள்ளர்கள்.(4:585)

6)  தொழுகைக்காக வரிசையில் இருக்கும் போது நெருக்கமாகவும் தோளோடுதோள் சேர்த்து நிற்பதே சுன்னாவாகும். அவ்வாறே வரிசையில் தனித்து நிற்பது மக்ரூஹ் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் அபிப்பிராயமாகும். ஆனால் நியாயமான காரணம் இருக்கும் போது தனித்து நிற்பது தவறாகாது என்பதே அறிஞர்களின் கருத்தாகும். இந்நிலையில் கொரோனா காரணமாக வரிசையில் இடைவெளி பேணுவது துறை சார் வைத்தியர்களின் வழிகாட்டலாக இருப்பதால் தொழுகையின் போது இருவருக்கிடையில் தூரமாகி இருப்பது தவறல்ல.

பொதுவான சில வழிகாட்டல்கள்

1) வீட்டில் வுழுசெய்து கொண்டு பள்ளிவாசல்களுக்கு செல்வதை வழக்கமாக்குதல். 

2) நிலைமை சீராகும் வரை நிர்வாகிகள் பள்ளிவாசல் கழிவறைப் பகுதியை மூடிவைக்க நடவடிக்கை எடுத்தல். 

3) பள்ளிவாசலுக்கு நுழையும் போதும் வெளியேரும் போதும் கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகளை செய்தல். 

4) பள்ளிவாசல்களில் தரிக்கும் நேரங்களில் முகமூடிகளை அணிந்த நிலையிலேயே இருத்தல். 

5) பள்ளிவாசலுக்கு வரும்போது முடியுமாக இருந்தால் தனக்கென ஒரு முஸல்லாவை கொண்டு வருதல். 

6) கைலாகு செய்வதையும் கட்டித்தழுவதையம் தவிர்த்தல். 

7) முன்பின் சுன்னத் தொழுகைகளை வீட்டில் தொழுதல். 

8) பள்ளிவாசலுக்குள் நுழையும் போது வெப்பமாணிகள் மூலம் உஷ்னத்தை அளவிட ஏற்பாடு செய்தல். 

9) மஸ்ஜித் நிர்வாக பொறுப்புதாரிகள் தேவையான அரச திணைக்ககளங்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதை பேணி வருதல்.

No comments

Powered by Blogger.