Header Ads



சுகாதார படிமுறைகளை உரிய வகையில் கடைப்பிடியுங்கள் -இராணுவத் தளபதி

- க.கமல் -

கொரோனா வைரஸ் பரவலை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதெனத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இந்த நிலைமைகளுக்கு மத்தியில் டயஸ்போரா (புலம்பெயர்ந்த தமிழர்கள்) குழுவினர் நாட்டுக்குள் நுழைய முடியாதெனவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், 

தற்போது சமூகத்துக்குள் தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்த அவர், கடற்படையினர், தனிமைப்படுத்தப்படுத்தல் முகாம்களுக்குள் உள்ளவர்கள் மாத்திரமே தொற்றுள்ளவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர் என்றார்.

அக்குரணை, புத்தளம், உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தது தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள், தற்போது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இவ்வாறு 6,340 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மேலும், 37 தனிமைபடுத்தல் முகாம்கள் தற்போதும் உள்ளனவெனத் தெரிவித்த அவர், வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களும் கடற்படையினருமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

இந்நிலைமைகளுக்கு மத்தியில் வெளிநாட்டுகளில் இருக்கும் டயஸ்போரா குழுவினர் நாட்டுக்குள் நுழைவதாகக் கூறப்படும் தகவல்கள் உறுதியாகவில்லை எனத் தெரிவித்த அவர், வெளிநாட்டுகளிருந்து வருவோர் தொடர்பாக விஷேட அவதானம் செலுத்தப்படுவதாகக் கூறினார்.

அதனால், நாட்டுக்கு எதிரான குற்றங்களை செய்தவர்கள் நாட்டுக்குள் நுழைந்தால் அவர்களை அடையாளம் காண முடியும் எனத் தெரிவித்த அவர், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விமான நிலையப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறான, நிலைமைகளுக்கு மத்தியிலேயே நாட்டின் பல பகுதிகளில் இன்று வழமைக்கு திரும்ப உள்ளனவெனவும், அதன்போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பாக உரிய தரப்பினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

எனவே, சுகாதார படிமுறைகளை உரிய வகையில் கடைப்பிடிப்பது அவசியம் எனத் தெரிவித்த அவர்,  இந்த நிலைமைகளை தலைகீழாக மாற்ற ஒரு நபர் போதும் என்பதை கவனத்தில் கொண்டு செயற்படுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

No comments

Powered by Blogger.