Header Ads



ஒரு முஸ்லிம் சகோதரர், பிரதமர் மஹிந்தவுக்கு அனுப்பியுள்ள கடிதம்

மாண்புமிகு பிரதமர்,

உங்களதும் உங்களது குடும்பத்தினரதும் நலத்திற்கும் வளத்திற்கும் உளப்பூர்வமாகப் பிரார்த்தித்து ஆரம்பிக்கின்றேன்.

கொரோனா வைரஸிக்கு எதிரான முன்னுதாரணமான செயற்பாடுகளால் உலகச் சுகாதாரத் தாபனத்தினாலும் உலகத்தலைவர்களினாலும் பாராட்டப்படும் இலங்கை நாட்டின் மாண்புமிகு பிரதம ராக இருக்கும் உங்களுக்கும் அதிஉத்தம ஜனாதிபதி உள்ளிட்ட  அரசாங்கத்திற்கும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பாராட்டுக்களையும் கௌரவமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உங்களால்   தெரிவிக்கப்பட்ட'ஈதுல் பித்ர்' பெருநாள் வாழ்த்துச் செய்தியை வேலைப்பளு காரணமாக தாமதித்த நிலையில்லேக் ஹவுஸ் தினகரன் 'ஈ பேப்பர்' வழியாக இன்றே என்னால் முழுமையாக வாசிக்க முடிந்தது.

அரசியல் தலைவர்களால் தெரிவிக்கப்படும் பெருநாள் வாழ்த்துச் செய்திகளை நான் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக தவறாது வாசித்து வருகின்றேன். ஆனால் உங்களால் இம்முறை தெரிவிக்கப்பட்ட வாழ்த்துச் செய்தியை வாசித்தபோது எப்போதும்போல் அல்லாது அது ஒரு இன்ப உணர்ச்சியைத் தந்தது. அதனால் அதனை மீண்டும் மீண்டும் வாசித்தேன்;;,ரசித்தேன்; மனம்பூரித்தேன்... அப்பூரிப்போடு  இம்மடலை அவரமாக வரைகின்றேன்.

குறித்த வாழ்த்துச் செய்தியூடாக முஸ்லிம் சமூகம் மீதுள்ள உங்கள் பார்வையையும் பாசத்தையும் நிறுவியுள்ளீர்கள். அதனால்  இம்மடலை வரையும் அளவிற்கு உங்கள் பாசத்தால்நானும் பிணைக்கப்பட்டுள்ளேன்.

நீங்கள் தெரிவித்த அச்செய்தியில் 'நோற்ற நோன்பு மற்றும் இறைவழிபாடுகளை இறைவன் பொருந்திக் கொள்ள வேண்டுமென' பிரார்த்தித்துள்ளீர்கள். இப்பிரார்த்தனையானது முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் முக்கியமான பிரார்த்தனையாகும். ரமழான் மாதம் முடிந்ததன் பின்பு 'ரமழானில் புரிந்த நற்கிரிகைகளை ஏற்றுக் கொள்ளுமாறு  அல்லாஹ்விடம்  பிரார்த்திக்குமாறு நபி பெருமானார் (ஸல்)அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். இப்பிரார்த்தனையை எங்களுக்காக நீங்கள் மேற்கொண்டதன் மூலம்; முஸ்லிம்கள்மீது நீங்கள் எவ்வளவு பாசம் வைத்துள்ளீர்கள் என்பதை உணர முடிகின்றது.

அத்தோடு '... உலகமும் எமது தாய் நாடும் இந்த அனர்த்தத்திலிருந்து பாதுகாப்பை நாடி சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும்..' அச்செய்தியில் கோரியுள்ளீர்கள். முஸ்லிம்கள் நிலையில்லாத இவ்வுலகம் தொடர்பிலும் நிலையான மறுவுலகம் தொடர்பிலும் நாளொன்றுக்கு ஐந்து நேரத் தொழுகையிலும்  பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கமாகும். பள்ளிவாசல்களில் கூட்டாகத் தொழவேண்டியவர்கள் இக்கால சூழ்நிலையில் வீடுகளில் தொழுதவாறு உலகமும்  தாய் நாடும்  எதிர்நோகியுள்ள கொரோனா அனர்த்தத்தை அகற்றுமாறு தொடர்ந்துசர்வ வல்லமை படைத்த அல்லாஹ்விடம் பிரார்த்தித்த வண்ணமுள்ளனர்.

உங்களது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் முஸ்லிம்களது முக்கியமான பிரார்த்தனைகளை மீள்பார்வைக்கு கொண்டு வந்து  இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கௌரவித்துள்ளதாகவே நான் கருதுகின்றேன். அதனாலேயே உங்கள் வாழ்த்துச் செய்தியினால் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

மாண்புமிகு ஐயா,

நீங்கள் 2004இல்  முதன்முறையாக மாண்புமிகு பிரதம அமைச்சராக இருந்த போது ஒரு முறை உங்களை சந்தித்துப் பேசியிருக்கின்றேன்.அப்போது நீங்கள் எப்போதோ அறிமுகமானவர்போல முகம் மலர்ந்து பேசியதும் கைகுலுக்கியதும் இப்போதும் எனக்கு பசுமையாகவே இருக்கின்றது. அவ்வேளை, என்னிடம் கொடுக்கப்பட்ட  ஒரு வேலையை  உங்களுக்காகவே செய்திருந்தேன்.

நான் தொழில் ரீதியில் சுகாதாரத்துறையில் நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவில் ஒரு உத்தியோகத்தராக இருக்கின்றேன். இதனால்கொரோனாவிற்கு எதிரான செயற்பாட்டிலும்ஈடுபடுத்தப்பட்டுள்ளேன்.

மாண்புமிகு ஐயா,

இந்த இலங்கைத் தாய் நாட்டில்  அன்று(1970இல்)சிறிய வயதில் பாராளுமன்றம் நுழைந்தவர் என்ற பெருமையுடன்   கால் பதித்து,இன்று அரசியல் துறைக்குள் 50 ஆண்டுகளை பெரும் சாதனைகளோடு பூர்த்திசெய்து இந்நாட்டின் தந்தைபோல் இருக்கும் உங்களிடம் இதுவரை என்னால் எவரிடமும் கூறாத, எனதும் எனது சமூகம் சார்ந்ததுமான அவலத்தை  மனம் திறந்து கூற முனைகின்றேன்.

எங்கேயோ ஒருவர் அனர்த்தமொன்றில் சிக்கி மரணமடைகின்றபோது அதற்காக கவலைப்படுபவன் நான். இதேநிலையில் கொரோனாவினால் முதலாவது மரணம் ஏற்பட்டபோதும்  மரணித்தவரின் உடலம் எரிக்கப்பட்டபோதும் எனக்கு கவலையா இருந்தது. பின்புமுஸ்லிம் ஒருவரின் ஜனாஸா எரிக்கபட்டதாக செய்தி கிடைத்தபோது இக்கவலை மேலும் அதிகரித்தது. இடைக்கிடையே இத்தகைய செய்தி வந்ததனால் கவலை மென்மேலும் அதிகரித்தது. மனது நின்மதி இழந்தது. சில நாட்கள்தூக்கம்கூடத் தொலைந்து போனது!

எனது  இத்தகைய நிலைக்கு   மன அழுத்தம்,மரணப் பயம், கொரோனா  பணியில் ஈடுபடுகையில் ஒரு வேளை  தொற்றுக்குள்ளாகி இறந்து விட்டால் எரித்துவிடுவார்கள் என்ற பேரச்சம் அல்லது இதுபோன்ற வேறு எதுவோ  காரணமல்ல. 

காரணம் நான் இஸ்லாத்தில்வைத்துள்ள அதீத நம்பிக்கையாகும். இஸ்லாம் மனித குலத்திற்கு  பூரணமான வாழ்கை வழிகாட்டலை வழங்கியுள்ளது. மனிதன் வாழும் போது வழங்கும் கௌரவத்தை  அவன் மரணித்த போதும் வழங்குகின்றது.ஒருவர் மரணித்தால் மரணித்தவர் தொடர்பில் உயிருடன் இருப்பவர்களுக்கு  சில கடமைகளை அது விதித்துள்ளது. அவற்றில் இறந்தவரை அடக்கம் செய்ய வேண்டும் என்பது இறுதியானதாகும். மரணித்தவருக்குரிய இக்கடமைகளை ஒரிருவர் செய்தால்கூட அப்பகுதியிலுள்ள அனைவரது பொறுப்பும்  நீங்கிவிடும். இறந்தவருக்குரிய கடமையை செய்வதற்கு ஒருவரும் முன்வராத போது அப்பகுதிலுள்ள அனைவரும் குற்றவாளிகளாவர். அவர்களது இக்குற்றம் தொடர்பில் நாளை மறுமையில் சர்வ வல்லமையுள்ள அல்லாஹ்வின் நீதி மன்றில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். இது எமது நம்பிக்கையாகும்.

இதனாலேயே முஸ்லிம் ஜனாஸாவொன்று எரிக்கப்படும்போது இஸ்லாமிய மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்கள் தம்மை உயிரோடு எரிக்கப்படும் ஒரு உணர்வுக்கு உள்ளாகின்றார்கள்.இவ்வுணர்வை வெறும்  வார்த்தைகளால்வடிக்க முடியாது! உவமைகளால் காட்டவும் முடியாது!!

இதுஇவ்வாhறிருக்க,பெற்றோர்- பிள்ளைகள் உறவிலோ கணவன்- மனைவி உறவிவோ, சகோதரன்- சகோதரி உள்ளிட்ட உறவிலோ ஒருவர் திடீரென     மரணிக்கும்போது ஏற்படும் அதிர்ச்சியும் அவலமும் ஏக்கமும் தாக்கமும்  எத்தகையது என்பதை எவரும் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், இதையெல்லாம் விட  அத்தகைய உறவுகளில் உள்ள ஒருவரை அவருக்குச் செய்யவேண்டிய  இறுதிக்கடமையை( அவர்களின் நம்பிக்கைக்கு அமைவாக) செய்வதற்கு இடம்கொடுக்காது     எரிப்பதனால் நெருப்பில் வீழ்ந்த புழு போல் துடி துடிக்கும் அவர்களின் நிலையையும், இன்று வரை இவ்வாறு   எரிக்கப்பட்ட  ஜனாஸாவைநினைந்து நினைந்து ஊண் உறக்கம் மறந்து, கண்ணீரால் நனைந்து கொண்டிருக்கும் உறவுகளின் மாளாத்துயரத்தையும் முஸ்லிம் சமூகத்தின் மீது பாசமும் பற்றுமுள்ள நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டுமென தயவுடன் கோருகின்றேன்.

மாண்புமிகு ஐயா,

கொரோனா வைரஸினால் மரணமானவரது உடலை    அடக்கம் செய்த பின்பு அவ்வுடலிலிருந்து வைரஸானது நிலத்தடி நீர் மூலம் ஏனையவர்களுக்கு  தொற்றுவதற்கான வாய்ப்பு உள்ளதாக நுண்ணுயிரியல் மற்றும் அறிவியலோடு தொடர்பற்ற   ஒரு கருத்து நம் நாட்டில் மட்டும் நிலவி வருவதை அவதானிக்க முடிகிறது.

அடிப்படையில் பிழையான இக்கருத்தை சரியானதென எடுத்துக் கொண்டாலும்கூட கொரோனா வைரஸினால் மரணமானவரது உடலை அடக்கம் செய்வதில் எந்தத் தடையுமில்லை. ஏனெனில், நம் தாய்நாட்டில் 100 அடிக்கு மேலே தோண்டினால்கூட தரைக்கீழ் நீரை காணமுடியாத ஏரர்ளமான பகுதிகள் இருக்கின்றன. அவ்வாறானஒரு பகுதியை தேர்ந்தெடுத்து ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முடியும்.

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதை இலகு படுத்துவதற்காக அதற்கென பயிற்றப்பட்ட  முஸ்லிம்களில்குறைந்தது நால்வரையாவது ஈடுபடுத்த முடியும் என்பதையும்அரசாங்கம் அனுமதிக்கும் பட்சத்தில் இலங்கை அரசாங்கத்தின் சுகாதார  வழிமுறைகளையும் உலக சுகாதாரத் தாபனத்தின் வழிகாட்டுதல்களையும் கற்றுணர்ந்து செயற்படமுடியுமான சுகாதார துறையைச் சேர்ந்த என்போன்ற முஸ்லிம் ஊழியர்கள் இதற்கென தயார் நிலையில் உள்ளனர் என்னும் செய்தியையும் தங்களின் மேலான கவனத்திற்துத் தெரியப்படுத்துகின்றேன்.
மாண்புமிகு ஐயா,

ஜனாஸா எரிப்பு தொடர்பில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் பேரவலத்தை  இக்கடிதத்தின் மூலம் உங்கள் இரக்கமுள்ள இதயத்திற்குச் சற்றுத் தொட்டுக் காட்டியுள்ளேன். எனவே, உலக சுகாதாரத் தாபனத்தின்   வழிகாட்டலுக்கு அமைவாக, முஸ்லிம்களின் ஜனாஸா அடக்கம் செய்யப்படுவதற்கு ஏதுவாக  2020.04.11ஆம் திகதிய 2170ஃ8ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையை திருத்துவதற்கு ஆவன செய்யவேண்டுமென முஸ்லிம்கள் மீது நீங்கள் வைத்துள்ள பரிவையும் கரிசனையையும் உங்கள் மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் அன்பையும் முன்நிறுத்தி முஸ்லிம் சமூகம் சார்பில்  கேட்டுக் கொள்கின்றேன்.

இக்கடிதம் எழுதும் முறையிலும் எழுதும் பொருளிலும் ஏதும் பிழைகள் இருந்தால் பெரும்மனது கொண்டு மன்னித்துக் கொள்ளுமாறு கோருகின்றேன்.

மேலும்,உங்களுக்கும் அதிஉத்தம ஜனாதிபதி உள்ளிட்ட  அரசாங்கத்திற்கும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
                                   மிக்க நன்றி
                                                இவ்வண்ணம்,
                                                உண்மையுள்ள,
                                               மூதூர் முறாசில்






3 comments:

  1. மிக அழகான மடல். முஸ்லிம் சமூகம் சார்பாக நன்றிகள் உரித்தாகட்டும்

    ReplyDelete
  2. சகோதரர் முறாசில் அவர்களுடைய ஆதங்கமும் கவலையும் துயரமும் போன்றே முழு இஸ்லாமிய நெஞ்சங்களும் இது விடயத்தில் எமது நாட்டில் அழுதுகொண்டிருக்கின்றன என்ற உண்மையை எமது அரச தலைவர்கள் தயவு செய்து உணர்ந்து கொள்ள வேண்டும் என வினயமாய் வேண்டிக்கொள்கிறேன்.உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இருந்தும் இது விடயத்தில் அரசாங்கம் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய
    யுமாறு பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தும் அரசோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ இதுவரை எந்த பதில்களும் வழங்கவில்லை என்பதும் ஏமாற்றமாகவே உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.