கபீர் அரசியலுக்கு வந்தபோது, சௌமியமூர்த்தி தொண்டமான் செய்த உதவி
சௌமிய மூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவராக பதவியேற்ற ஆறுமுகன் தொண்டமான் கட்சியை மிகச் சிறப்பாக வழிநடத்தி மலையக மக்களுக்காக அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காக அரும்பாடுபட்டார். அவரது இழப்பினால் பெரும் கவலையடைவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசிம் தெரிவித்துள்ளார்.
தனது இரங்கல் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :
இலங்கை தொழிலாளர் காங்கரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சரும் எனது நண்பருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவு இந்நாட்டு மக்களை பெரும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கும் இத்தருணத்தில் இந்த இரங்கல் செய்தியை பதிவிடுகின்றேன்.
எனது பாடசாலை நாள் தொட்டு தொண்டமான் குடும்பத்தோடு தொடர்பு இருந்து வந்திருக்கிறது அத்தோடு எனது தந்தை மறைந்த பாரிஸ்டர் ஹாசிம் மறைந்த மாபெரும் தலைவரும் இந்நாட்டு மலையக தமிழ் மக்களுக்கு பிரஜா உரிமை பெற்றுக் கொடுத்து அவர்களுக்கு அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்த சௌமிய மூர்த்தி தொண்டமான் என்போர் மிகச் சிறந்த நண்பர்களாவர்.
1994 ஆம் ஆண்டு நான் அரசியலில் நுழைந்த போது எனது தந்தை சௌமிய மூர்த்தி தொண்டமானிடம் அழைத்துச் சென்று கூறிய போது, அவர் நேரடியாக கேகாலை வந்து தோட்டத் தலைவர்களை ஒன்று கூட்டி எனது வெற்றிக்கு உதவுமாறு பணித்தார்.
அவரின் மறைவிற்குப் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்ற ஆறுமுகன் தொண்டமான் கட்சியை மிகச் சிறப்பாக வழிநடத்தி மலையக மக்களுக்காக அவர்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காக அரும்பாடுபட்டார்.
அத்தோடு தொழிலாளர் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க முன்னிறு உழைத்தவர். அத்தோடு நானும் ஆறுமுகன் தொண்டமானும் சிறுபான்மையின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் என்ற வகையில் பாராளுமன்றத்தின் உள்ளும் வெளியிலும் பொதுவான பிரச்சினைகளின் போது இணைந்து செயற்பட்டிருக்கின்றோம்.
எதிர்பாராத விதமாக ஆறுமுகன் தொண்டமான் என்னும் மாபெரும் விருட்சத்தை தமிழ் மக்கள் இழந்து தவிக்கும் இந்நேரத்தில் நான் எனது மிகச் சிறந்த நண்பனை அரசியல் தலைவரை இழந்திருக்கின்றேன். எனவே அவரது குடும்பத்தினருக்கும் மலையக தமிழ் மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Post a Comment