Header Ads



ராஜித்தவுக்கான விளக்கமறியல் ஜூன் 10 வரை நீடிப்பு

விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்னவின் பிணை மனுவை பரிசீலிப்பதை, மற்றுமொரு நீதிமன்றிற்கு மாற்றும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கிணங்க, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (27) இவ்வுத்தரவை வழங்கினார்.

இன்று (27) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ராஜித சேனாரத்ன நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பதோடு, அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா பிணை மனுவை சமர்ப்பித்தார்.

இவ்வழக்கு தொடர்பில் கடந்த காலத்தில் ஏற்பட்ட நிலைமைகளை கருத்திற் கொண்டு, குறித்த பிணை மனு பரீசீலனையை மற்றுமொரு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு, சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

சட்டமா அதிபர் விடுத்துள்ள இக்கோரிக்கை தொடர்பில் தமக்கு வருத்தமளிப்பதாக, இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா தெரிவித்தார்.

சுயாதீன எண்ணம் கொண்ட நீதிபதியொருவர் முன்னிலையில் இந்த பிணை விண்ணப்பத்தை பரீசீலிப்பதற்காகவே தாம் இக்கோரிக்கையை முன்வைத்ததாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அதற்கு பதிலளித்தார்.

இதன்போது திறந்த நீதிமன்றத்தில் அதற்கு பதிலளித்த கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, நீதிபதிகளுக்கு சுதந்திரமான மனதுடன் முடிவெடுக்கும் திறன் உள்ளது என்று கூறினார்.

ஆயினும், நீதிபதி ஒருவரால் எந்தவொரு தரப்பினரும் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக தப்பெண்ணம் கொள்ளும் நிலையில், இப்பிணை மனு விண்ணப்பத்தை மற்றுமொரு நீதிபதிக்கு அனுப்ப தாம் தயாராக உள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

அதற்கமைய, குறித்த பிணை மனுவை கொழும்பு இலக்கம் 02, மேலதிக நீதவான் பிரியந்த லியனகேவிற்கு மாற்றுவதாக அறிவித்தார்.

No comments

Powered by Blogger.