Header Ads



ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது, முல்லைத்தீவில் அலைமோதிய மக்கள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு சட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் காலை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அதிகளவான மக்கள் நகர்புறங்களில் ஒன்று கூடுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. 

ஜனாதிபதியினால் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் அவை மக்களை சென்று அடைந்து விட்டனவா என்கின்ற கேள்விகளுக்கு மத்தியில் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதற்காக மக்கள் அதிகளவில் முண்டியடித்துக் கொண்டு நிற்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது 

குறிப்பாக வங்கிகளில் பணத்தை பெறுவதற்காக மிக நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பதோடு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பல்பொருள் வாணிபங்களில் மிக நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது 

அதிலும் குறிப்பாக சந்தை வளாகங்களில் அதிகளவான மக்கள் மரக்கறி வகைகளை கொள்வனவு செய்வதற்காக ஒன்றுகூடி இருக்கின்ற அதே வேளையில் புதுக்குடியிருப்பு பகுதியில் பிரதேச சபையினர் விசேடமாக வர்த்தக நிலையங்களை நடாத்துவதற்கு ஒழுங்குகளை மேற்கொண்டு இருந்தாலும் வர்த்தகர்கள் புதுக்குடியிருப்பு சந்தை வளாகத்திற்குள்ளேயே அவர்களது கடைகளை நடத்துவதால் அதிகளவான மக்கள் அங்கு கூடுவதாகவும் சந்தை வியாபாரிகளை வெளியேற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் பயனளிக்காத நிலையில் அதிகளவில் மக்கள் வருகை தந்திருக்கும் நிலைமையில் நேரத்தை கருத்தில் கொண்டு குறித்த இடத்தில் (சந்தை வளாகத்தில் ) பரவலாக விற்பனைக்கு வியாபாரிகளை அனுமதித்துள்ளதாக அறியக்கூடியதாக இருக்கிறது. 

குறித்த விடயம் தொடர்பில் வர்த்தகர்கள் குறித்த நடவடிக்கைக்கு ஒத்துழைக்காமை மக்களது நோய் தொற்று நிலைமைகள் தொடர்பில் அக்கறை கொள்ளாது வியாபாரத்தை மட்டும் இலக்காக கொண்டு செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது 

இவ்வாறான நிலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்த அளவிலே பல்வேறு இடங்களிலும் அதிகளவான மக்கள் ஒன்று கூடுகின்றமை பாரிய ஒரு சவாலாக இருக்கிறது இதனை கட்டுப்படுத்துவதற்காக பொலிசார் முப்படையினர் களத்தில் நின்ற போதும் அதனை எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதே நிலைமை. 

இந்த மக்களுக்கு கிருமித் தொற்றுகள் ஏற்படாத வகையில் குறித்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதை கண்கூடாக காணக்கூடியதாக இருக்கின்றது. 

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

No comments

Powered by Blogger.