Header Ads



இலங்கை அரசியலும், முஸ்லிம் சமூகத்தின் இரண்டக நிலையும்

அரசியல் சூழலில் ஒரு மாற்றத்துக்கான கண்டி ஃபோறம் விடுக்கும் வேண்டுகோள்

கடந்த சில தசாப்தங்களாக இலங்கைச் சமூகம் இன மத அடிப்படையில் தீவிரமாகப் பிளவுண்டுள்ளது. கடந்த நவம்பர் 2019ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் இது மிகவும் வெளிப்படையாகத் தெரிந்தது. முஸ்லிம், தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மையினர், வெவ்வேறு காரணங்களுக்காக, சிங்கள பௌத்த சக்திகளால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட இலங்கைப் பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தனர். புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களால் அது வெளிப்படையாகவே ஒப்புக்கொள்ளப்பட்டது. இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் முதன்முறையாக முஸ்லிம் ஒருவர்கூட இல்லாத அமைச்சரவை ஒன்றும் அமைக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் உச்சபட்சம் சிங்கள வாக்குகளைப் பெறும் நோக்கில் அரசியல் மயப்பட்ட தீவிர சிங்கள பௌத்த குழுக்களால் மிக மோசமான முஸ்லிம் எதிர்ப்புப் பிசாரம் முன்னெடுக்கப்பட்டது. அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். தற்போது சில அமைச்சர்கள் ‘அடிப்படைவாதிகளதும்’ ‘தீவிரவாதிகளதும்’ உதவி இல்லாமல் தாங்கள் புதிய அரசாங்கத்தை அமைக்கப் போவதாக வெளிப்படையாகவே பொது மேடைகளில் பேசிவருகின்றனர். இதன்மூலம் அவர்கள் முஸ்லிம் அரசியல் கட்சிகளையே குறிப்பிடுகின்றனர்.

வரலாற்று ரீதியில் நோக்கினால் இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்புணர்வு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தே நிலவிவருகின்றது. இதற்குப் பிரதானமான காரணம் வர்த்தகப் போட்டியாகும். எனினும் பொதுவாக அது சிங்கள சமூகத்தில் உருவாகியிருந்த தீவிர தேசியவாதச் சிறுபான்மையினர் மத்தியிலேயே காணப்பட்டது. ஆனால் இப்போது காணப்படுவதுபோல் தீவிர வார்த்தைகளாலும் வன்செயல்களாலும் அது ஒருபோதும் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படவில்லை. 1915ஆம் ஆண்டுக் கலவரம் இதற்கு ஒரு புறநடையாகும். 

2012ஆம் ஆண்டிலிருந்து இந்த நிலைமை மாறத் தொடங்கியது. 2019 ஏப்ரலில் நடந்த எதிர்பாராத, துரதிஷ்டவசமான உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து இந்த எதிர்ப்ணர்வு அதன் உச்சத்தை எட்டியது. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முன் என்றும் இல்லாத அளவில் அவர்களுக்கு எதிரான ஆத்திரமும் கோபமும் வெறுப்பும் வளர்வதற்கு அது இட்டுச் சென்றது. இந்த உணர்வு தீவிரவாத சிங்களவர்களின் உளவியலை மட்டுமன்றி, நடுநிலைத் தன்மையுடைய சிங்கள மக்களில் பெரும்பான்மையினரின் மனநிலையையும் பாதித்தது. இவர்களும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரப் பொறிமுறையின் செல்வாக்குக்கு உட்பட்டு தீவிர வெறுப்புணர்வை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள்.

இது திடீரென்று ஏற்பட்ட ஒரு நிலைமையல்ல. மிகத் தீவிர இனப்பிளவை நோக்கிய படிப்படியான முன்னேற்றத்தின் ஒரு வெளிப்பாடாகும். சமூக அரசியல் நிலைமையில் ஏற்பட்ட சில மாற்றங்கள் இதை முடுக்கிவிட்டன எனலாம். இன்றைய நிலைமைக்குப் பங்களிப்புச் செய்த அத்தகைய  இரண்டு அம்சங்களை இங்கு  குறிப்பிடலாம். அதில் முதலாவது அம்சம், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தோற்றமாகும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலிலும் பின்னர் அதிலிருந்து பிரிந்த கட்சிகளும் தோன்றின. அதிகரித்துவந்த இனப்பிளவு, தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களால் வட, கிழக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கிய இனப்பாகுபாடு, வன்முறை, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் தாங்கள் கைவிடப்பட்டதான உணர்வு போன்றவற்றின் தவிர்க்க முடியாத ஒரு வரலாற்றுப் பின்விளைவாக 1980களின் நடுப்பகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் தோன்றியது. 1980களின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பிரதான அரசியல் சக்தியாக வளர்ச்சியடைந்தது. ஒரு குறைந்த அளவிலேனும் நாட்டின் தென் பகுதியிலும் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் ரீதியாகச் செல்வாக்குச் செலுத்தியது. இது சிங்கள பௌத்த அரசியல் சமூகத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவைப் பாதித்தது. முஸ்லிம் கட்சியின் வருகையை தங்களுக்கு எதிரான இரண்டாவது சிறுபான்மையினரின்  பிறிதொரு அச்சுறுத்தலாக சிங்கள பெரும்பான்மையினர் நோக்கினர். எம். எச் எம். அஷ்ரப் அவர்களின் மறைவின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்து “முஸ்லிம் அடையாளத்துடன்”பல்வேறு அரசியல் கட்சிகள் உருவாகி, வட, கிழக்குக்கு வெளியே முஸ்லிம் பிரதேசங்களுக்குள்ளும் நகர்ந்தபோது இனப்பிளவின் இந்த விரிசல் மேலும் தீவிரமடைந்தது.

இரண்டாவது அம்சம் 1989ல் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையாகும். இது எல்லாத் தரப்பினருக்கும் மிகவும் சமத்துவமான முறையில் பாராளுமன்ற ஆசனங்களைப் பகிர்ந்தளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திய போதிலும், தேர்தல்களில் இனமேலாதிக்க வாக்குறுதிகளின் மூலம் அடிக்கடி வெற்றிபெற்ற இரண்டு பெரிய அரசியல் கட்சிகளையும் பெரிதும் பாதித்தது. இந்தப் புதிய முறையின் மூலம் சிறு கட்சிகளின் உதவியில்லாமல் போதிய பெரும்பான்மையுடன் இவர்களால் அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை. எப்போதும் அவர்கள் சிறிய கட்சிகளின் உதவியை நாடவேண்டி இருந்தது. இவற்றுள் முஸ்லிம் கட்சிகள் மிகவும் நெகிழ்ச்சித் தன்மை உடையவையாக இருந்தன. 1994ல் இருந்து பெரும்பான்மைக் கட்சிகள் ஆட்சி அமைப்பதில் இவை ஒரு முக்கிய பங்கு வகித்தன. இது சிங்கள அரசியல் சமூகத்தின் மேலாதிக்க சக்திகளுக்கு ஆத்திரமூட்டியது.

2012ஆம் ஆண்டிலிருந்து பிரதான அரசியல் கட்சிகளின் ஒரு பிரிவினர் உட்பட கடும்போகுச் சிங்கள தீவிரவாதக் குழுக்களினால் முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டமைக்கு இவையே பிரதான காரணங்களாகும். முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் தலைவர்களும் இந்த நாட்டின் அபிவிருத்திக்காக ஆற்றிய வரலாற்றுப் பங்களிப்புகளைப் புறந்தள்ளி, வசதியாகவும், நம்பவைக்கும் வகையிலும் அவர்கள் இப்பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

முஸ்லிம்களை சந்தர்ப்பவாதிகளாகவும், எப்போதும் தங்கள் சமூக விடயங்களில் மட்டும் அக்கறை உடையவர்களாகவும், அதிகாரத்துக்குவரும் அரசாங்கங்களிடம் இருந்து எப்போதும் நன்மை பெறுபவர்களாகவும் காட்ட இக்கடும்போக்காளர்கள் முயன்றார்கள். உலகளாவிய ரீதியில் கட்டவிழ்த்து விடப்பட்ட “இஸ்லாமியப் பீதி”(Islamophobia) என்னும் பிரச்சாரங்களைத் தழுவிக்கொண்ட இவர்கள், முஸ்லிம் சமூகம் தங்களின் குடிசனத் தொகையை விரைவாகப் பெருக்குவதன் மூலமும், கற்பனைக்கெட்டாத கற்பத்தடை முறைகளை இரகசியமாகப் பயன்படுத்தி சிங்களவரின் குடித்தொகையைக் குறைப்பதன் மூலமும் இந்நாட்டின் பெரும்பான்மையினராக மாறச் சதிசெய்வதாகவும் நிரூபிக்க முயன்றார்கள். அத்தோடு, உலகமயப்படுத்தப்பட்ட முஸ்லிம் விரோத லேபல்களான “அடிப்படைவாதிகள், “தீவிரவாதிகள்”, “பயங்கரவாதிகள்” போன்றவற்றைப் பயன்படுத்தி, தேசிய பாதுகாப்புக்கும் ஐக்கியத்துக்கும் அச்சுறுத்தல் என்று முஸ்லிம்களை அந்நியப்படுத்தவும் இவர்கள் முயன்றார்கள். 

நாட்டில் நிலைபெற்றிருக்கும் இத் தீவிரமான அரசியல் மற்றும் இனத்துவ விரிசல் தேசத்தைக் கட்டி எழுப்புவதற்கும் தேசிய அபிவிருத்திக்கும் உகந்ததல்ல என்பதை நாம் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம். இந்த நாட்டின் சகல அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் சகல இனத்துவ மற்றும் மத சமூகங்களும் இலங்கை ஒரு பல்லின, பல்மத நாடு என்ற உண்மையை அங்கீகரிக்க வேண்டும். சிங்களவர்களும் பௌத்தர்களும் இந்நாட்டின் பெரும்பான்மையினர் எனினும், சகல சிறுபான்மைச் சமூகங்களும் இந்நாட்டின் குடிமக்கள் என்றவகையில் சம உரிமை உடையவர்கள் என்பதை இந்நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்தின் ஒரு அடிப்படை நியமமுமாகும். சமீபகால வரலாற்றில் நாம் அனுபவித்த சமூதாய அழிவுக்கு நம்மைக் குருட்டுத்தனமாக இட்டுச்செல்லும் வெளிஒதுக்கல் (exclusive) கொள்கையை நிராகரித்து நம்மை வெற்றிகரமான நல்வாழ்வை நோக்கி இட்டுச்செல்லும் இந்த உள்ளடங்கல் (inclusive ) கொள்கையை நாம் பின்பற்றுவது அவசியமாகும்.

இலங்கையில் சுதந்திரத்துக்குப் பின்னர் இனப்பிளவும் மோதல்களும் ஏற்படுத்திய கசப்பான அனுபவங்கள் இருந்தபோதிலும், பல கட்சிக் கூட்டமைப்புகள், பல்லின அமைச்சரவைகள், ஒத்துழைப்பு ஆட்சி தொடர்பான நல்ல அனுபவங்களும் நமக்கு உண்டு. பல அரசியல் கட்சிகளும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறையும் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளபோதிலும், அரசியல் சகவாழ்வு, ஒத்துழைப்பு அரசியல் பண்பாடு ஒன்றை வளர்ப்பதற்கான நல்ல வாய்ப்புகளையும் அவை வழங்குகின்றன. இருப்பினும், துரதிஷ்டவசமாக அதிகாரப் பசிகொண்ட அரசியல் தலைமைகளும் சமூகங்களுக்குள் உள்ள இனவாத சக்திகளும் தமது குறுகிய நோக்குடைய அணுகுமுறைகளால் இன வெறுப்பையும் வெளிஒதுக்கல் அரசியல் பண்பாட்டையும் முன்னெடுத்துச் செல்கின்றனர். இது சமாதான சகவாழ்வுக்கும் சமூக பொருளாதார அபிவிருத்திக்கும் நம் தேசத்தின் கௌரவத்துக்கும் எதிரானதாகும்.

துரதிஷ்டவசமாக இலங்கையில் உண்மையான தேசிய அரசியல் கட்சிகள் எவையும் இல்லை. பெரிய அரசியல் கட்சிகள் எல்லாம் பெரும்பான்மைச் சமூக நலன்களைப் பெரிதும் சார்ந்தவையாகும். இவையே சிறுபான்மைக் கட்சிககளின் தோற்றத்துக்கான அரசியல் வெளியை உருவாக்கிக்கொடுத்தன. இந்த நாட்டிலுள்ள மற்ற எல்லாச் சிறு கட்சிகளும், இடதுசாரிக் கட்சிகள் உட்பட, வெவ்வேறு வகையில் இனத்துவச் சார்புடையனவேயாகும். இந்த இனவாத அரசியல் பிரித்தானிய காலனித்துவத்திடம் இருந்து நாம்பெற்ற வரலாற்று முதுசமாகும். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து நாம் இதை வலுப்படுத்தி வளர்த்து வருகிறோம். அதனால் நாட்டுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். இதனை நாம் இவ்வாறே தொடர முடியாது என்பது வெளிப்படை. இச்சந்தர்ப்பத்தில் இலங்கை அரசியல் ஒரு அடிப்படையான பண்புநிலைமாற்றத்தை வேண்டி நிற்கின்றது.

ஆகவே, இப்பின்னணியில், மற்ற எல்லா நலன்களுக்கும் முன்னர் நாட்டின் நலனை முன்வைக்குமாறும், எதிர்வரும் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் இன, மத வெறுப்பையும் வெளிஒதுக்கும் சார்புநிலை அரசியலையும் பிரச்சாரம் செய்து முன்னெடுத்துச் செல்வதை தவிர்க்குமாறும் சகல அரசியல் கட்சிகளையும், சகல இனத்துவ சமூகங்களையும், சமய மற்றும் சமூகத் தலைவர்களையும், தனித்தனி அரசியல்வாதிகளையும் நாம் வேண்டிக்கொள்கின்றோம். வேவ்வேறு இன, மதச் சமூகங்களுக்கிடையே சமாதான சகவாழ்வை ஊக்கப்படுத்துமாறும், இந்த நாட்டில் நிரந்தர சமாதானத்தையும் நீதியையுத் சமூக நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதற்கும் தேசியரீதியிலும் சர்வதேசரீதியிலும் இந்நாட்டின் பெருமையையும் கௌரவத்தையும் மீள நிலைநிறுத்துவதற்கும் உதவும் வகையில் ஒன்றிணைந்த  ஒத்துழைப்பு அரசியலை மேம்படுத்துமாறும் நாம் அவர்களை வேண்டுகிறோம்.

எல்லா விடயங்களிலும் நாட்டை முன்னிறுத்துவதில் முன்னணியில் நிற்குமாறும், குறுங்கால உடனடி நலன்களை நிராகரித்து, நெடுங்கால நலன்களின் அடிப்படையில் தங்கள் அரசியல் உத்திகளை வகுக்குமாறும் முஸ்லிம் சமூகத்தையும் முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் நாம் விசேடமாக வேண்டிக்கொள்கின்றோம். தேசிய மற்றும் சமூக அபிவிருத்திக்கும் சமூக நல்லிணக்கத்துக்குமான ஒன்றிணைந்த ஒரு கொள்கைத் திட்டத்தை அவர்கள் வகுத்துக்கொள்ளவேண்டும்.

முஸ்லிம் கட்சிகளின் தோற்றத்துக்கு முன்னர் இந்நாட்டு முஸ்லிம்கள் எல்லோரும் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளுடனும் ஈடுபாட்டுடன்  இணைந்து செயற்பட்டார்கள். முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தோற்றத்தின் பின்னரும்கூட பெரும்பாலான முஸ்லிம்கள், இன வெறுப்புக்குத் தாங்கள் முகங்கொடுக்க நேர்ந்த போதிலும், இந்த இரண்டு பெரிய அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவு வழங்கினார்கள். சமாதான சகவாழ்வுக்கு இட்டுச்செல்லும் வகையில் இப்போக்குத் தொடரும் என்று நாம் நம்புகின்றோம்.

ஒரு முக்கியமான பாராளுமன்னறத் தேர்தல் அண்மித்துவரும் இச்சந்தர்ப்பத்தில், இந்த நாட்டில் வெறுப்பு அரசியலையும் இன மோதல்களையும் ஊக்கப்படுத்துவதை நிறுத்துவதற்கும், இன மத வேறுபாடுகள் இன்றி சகல குடிமக்களும் சம உரிமைகளையும், அச்சமற்ற அமைதியான வாழ்வையும் அனுபவிப்பதற்கும் ஏற்ற நல்லிணக்கத்துடன் கூடிய  அமைதியான ஜனநாயக இலங்கையை உருவாக்குவதற்கும் அதற்கான ஒரு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் ஒன்றிணைந்து செயற்பட முன்வருமாறு சகல அரசியல் கட்சிகளையும், அரசியல், சமூகத் தலைமைகளையும் சிவில் சமூக அமைப்புகளையும் நாம் மீண்டும் வேண்டிக்கொள்கின்றோம்.

ஒப்பம்
பேராசிரியர் எம். ஏ. நுஃமான், ஜே. எம். நிவாஸ், பேராசிரியர் எம். ஏ. எம். சித்தீக், 
எம். ஏம் நியாஸ், பேராசிரியர் எம் எஸ். எம் அனஸ், பேராசிரியர் எம். ஐ. எம் மவ்ஜூத், 
ஏ. ஜே. எம். முபாறக், கலாநிதி ஏ. எல் எம் மவ்றூஃப், கலாநிதி எம். இசற். எம் நஃபீல், 
கலாநிதி ஏ. எஸ். எம். நவ்ஃபல், யு. எம். ஃபாசில்

No comments

Powered by Blogger.