Header Ads



கொரோனா வைரஸ் தொற்றுக்கும், தங்கத்தின் விலைக்கும் என்ன தொடர்பு ?

கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.32,800 யைத் தொட்டுள்ளது. விண்ணை முட்டும் தங்கத்தின் விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்தியாவில், ஒரு ஆண்டுக்குள் சுமார் 26 சதவீதம் விலை உயர்ந்த ஒரே பொருளாக தங்கம் இருக்கிறது. மியூச்சுவல் பண்டு, நிரந்தர வைப்பு நிதி மற்றும் பங்குச்சந்தை என விதவிதமான முதலீடுகள் செய்தவர்களை விட, தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் அதிக லாபம் பெற்றுள்ளனர்.

தங்கத்தின் விலையேற்றத்திற்கான காரணம் என்ன, கொரோனா வைரஸ் எவ்வாறு தங்கத்தின் விலையை அதிகரித்தது என்றும், தங்கத்தில் தற்போது முதலீடு செய்வது எப்படி என சென்னையை சேர்ந்த பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்.

தங்கத்தின் விலை உயரக் காரணம் என்ன?

''தற்போது உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொருளாதாரத்தில் சரிவு ஏற்படும் என மக்கள் கருதுகிறார்கள். குறைந்த காலத்தில் தங்களது பணத்தை பாதுகாப்பாக வைக்கவேண்டும் எனில் அதனை தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது''

''மேலும், அமெரிக்காவில் ஏற்றுமதி குறைந்து, முதலீட்டில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், அங்கு பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. முதலீடுகளை அதிகரிக்க, அமெரிக்காவின் மைய வங்கி, ஒரு நிதி ஆண்டிற்குள், மூன்று முறை வட்டிவிகிதத்தை குறைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் டாலரின் மதிப்பிலும் ஏற்றம் உள்ளது. இந்த இரண்டு காரணிகளால் தங்கத்தின் விலை ஏறுமுகம் கண்டுள்ளது'' என்று கூறினார்.

''ஒவ்வொரு ஆண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. தங்கத்தின் இருப்பு குறைவாக இருப்பதால், அந்த பொருள், மற்ற எந்தவித முதலீடுகளைக் காட்டிலும் அதிக லாபத்தைத் தரும் முதலீடாக இருக்கிறது. சர்வதேச சந்தையில், தங்கத்தில் முதலீடு செய்வதுதான் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால், தங்கத்திற்கான சந்தை பெரும்பாலும் சரிவைச் சந்திப்பதில்லை' என்று அவர் தெரிவித்தார்.

''டாலர் மதிப்பும், தங்கத்தின் விலையும் தொடர்புடையவை. டாலர் மதிப்பு ஏறும்போது, தங்கத்தின் மதிப்பு குறையும். அதேபோல, டாலர் மதிப்பு குறையும்போது, தங்கத்தின் விலை அதிகரிக்கும். ஆனால் இந்த முறை டாலர் மற்றும் தங்கம் என இரண்டின் மதிப்பும் ஏறியுள்ளது.தற்போது உள்ள சூழலில், தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கமுடியாது''

நடுத்தர மக்கள் தங்கத்தை பெரும்பாலும் தங்கநகை சீட்டு கட்டி சேமிக்கிறார்கள். தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற சீட்டு கட்டி சேமிக்கும் முறை சரியான தேர்வா?

''ஒவ்வொரு குடும்பமும் சுமார் 400 கிராம் தங்கம் அதாவது 50 பவுன் தங்கத்தை சேமித்து வைக்கவேண்டும். அதுவும் நகையாக வாங்கி வைத்துக்கொள்வது சிறந்தது. வங்கி, அடகு கடை மற்றும் தங்க நகைக்கு கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்களில், நகைகளுக்குதான் உடனடியாக கடன் கிடைக்கும். உங்களின் உடனடி தேவைக்குக் கடன் வேண்டும் என்ற நேரத்தில் தங்க நகை மட்டும்தான் கைகொடுக்கும்'' என்று அவர் கூறினார்.

''நகைச்சீட்டில், பணம் கட்டி சேமிப்பதில் சிக்கல் உள்ளது. பல நகைக் கடைகளில் 11 மாத திட்டம் என்ற பெயரில் நகை சீட்டு நடத்துகிறார்கள். அரசாங்கத்திடம் பதிவு செய்து சீட்டு நடத்தும் கடைகள் மிகவும் குறைவு. அதாவது, செபி(SEBI-Securities and Exchange Board of India) என்று அறியப்படும், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் விதிமுறைகளின்படி, நகைச்சீட்டு திட்டம் பெரும்பாலும் நடைபெறுவதில்லை''

''இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகத்தில் 50 ஆண்டு காலம் கடை நடத்திய முன்னணி நிறுவனம் ஒன்று, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, தமிழகம் முழுவதும் இருந்த தனது நகைக்கடைகளை மூடிவிட்டது. நீங்கள் சீட்டு கட்டும் நிறுவனம், அரசாங்க விதிகளைப் பின்பற்றி நடத்துகிறதா என்பதை கவனமாகப் பார்க்கவேண்டும்'' என்று அவர் தெரிவித்தார்

''11 மாதங்கள் நீங்கள் பணம் செலுத்தி, 12வது மாதம் தங்க நகைவாங்கும்போது, சலுகை தருவதாக பல நகைக்கடைகளில் ஏமாற்றுகிறார்கள். உண்மையில், நகைக்கடை நிறுவனங்கள், உங்களை போல பல வாடிக்கையாளர்களிடம் குறைந்த வட்டிக்கு பணத்தைக் கடனாகப் பெறுகிறார்கள் என்பதுதான் உண்மை. 12வது மாதம் உங்களுக்குத் தருவதாக சொல்லும் சலுகை என்பது, உங்கள் பணத்திற்குக் கிடைக்கும் குறைந்த வட்டி. இதற்கு பதிலாக நீங்கள் வங்கியில் டெபாசிட் செய்து அந்த பணத்திற்கு உரிய வட்டியைப் பெறலாம்'' என்றார்.

சீட்டு கட்டுவதற்குப் பதிலாக முதலீடு செய்ய நினைக்கும் பணத்தை நிரந்தர வைப்பு நிதியில் சேமித்து,வங்கி தரும் வட்டியோடு சேர்த்து, பின்னர் நகை வாங்கிக்கொள்ளலாம்.

அதைவிட, தங்கத்தைத்தான் வாங்க வேண்டும் என்று நினைத்தால், நிப்பிடி கோல்ட் என்ற பாண்டு பத்திரமாக (NIFTY GOLD BOND) வாங்கலாம். பங்குச்சந்தையில், நகையை பாண்டு பத்திரமாக வாங்குவதால் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு தங்கத்தை வாங்கி வைப்பதால், தங்கத்தின் விலை ஏறும்போது, அந்த முதலீடு லாபம் பெற்றுத்தரும்.

தங்க நகையை வாங்குவது என்பது நம் நாட்டில் ஒரு கலாசாரமாக உள்ளது. விலை அதிகரித்துள்ள நிலையில், நகை வாங்கும்போது நாம் கவனமாக இருப்பது எப்படி?

''தங்கம் என்பதை பணமாக பார்த்தால், அதில் முதலீடு செய்வது எவ்வளவு நன்மை என்பது புலப்படும். உங்கள் குடும்பத்தில், உங்கள் தாத்தா, பாட்டி தங்கம் வாங்கியபோது இருந்த விலையை விட தற்போது, தங்கத்தின் விலை, பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதை கவனியுங்கள். அவர்கள் வாங்கிய தங்கத்தை இன்றும் நீங்கள் வங்கியில் வைத்து கடன் பெறலாம்''

''தங்கம் என்ற பணத்திற்கு மதிப்பு உயர்ந்துகொண்டேதான் இருக்கும். அதிலும், நீங்கள் எந்த நாட்டிற்கு சென்றாலும், நகையை அணிந்து கொண்டு செல்லலாம். நீங்கள் அங்குச்சென்று, தங்கத்தை நல்ல விலையில் பணமாகப் பெற்றுக்கொள்ளலாம். உங்கள் பணத்தை வங்கியில் சேர்ப்பதைவிட, தங்க நகையாக வாங்கி சேர்த்துவைப்பதால், நீங்கள் செய்யும் முதலீடு பெரிய லாபத்தைத் தரும்'' என்று தெரிவித்தார்.

இந்தியாவில் தங்கம் கிடையாது, அதனை இறக்குமதி செய்யவேண்டும். அதுவும் டாலரில் பணத்தை செலுத்தித்தான் தங்கத்தை இறக்குமதி செய்யமுடியும். தங்கநகை வாங்குவது என்பது பெரிய முதலீடு. இதற்கு அரசாங்கம் பல விதமான வரிகளை விதிக்கிறது. அதோடு, செய்கூலி செலவு அதிகம் என பல விதமான இடர்பாடுகள் இருப்பதால், உங்கள் பணத்திற்கான தங்கத்தை வாங்கும்போது கவனமாக இருக்கவேண்டும்.

''வங்கிகளில் தங்கக் காசுக்கு நகைக்கடன் தருவதில்லை என்பதால் தங்கத்தை நகையாக வாங்கலாம். குறிப்பாக, ஹால்மார்க் உள்ள தங்கத்தை வாங்கவேண்டும். நகைகளை வாங்கும்போது, முடிந்தவரை, கல் வைத்த நகைகளை வாங்குவதைத் தவிர்க்கலாம். வங்கிகளில் அடகு வைத்தால், கல் நகையில், கல்லின் எடைக்கு மதிப்பு இல்லை. வைர கற்களுக்குக் கூட மதிப்பில்லை என்பது பலருக்குத் தெரிவதில்லை. நகைச்சீட்டு கட்டி நகை வாங்காதீர்கள்'' என்று அவர் ஆலோசனை கூறினார்
பிரமிளா கிருஷ்ணன்

No comments

Powered by Blogger.