Header Ads



நீதிபதிகளுடன் 63 முறை தொலைபேசியில் உரையாடிய ரஞ்சன், பெப்ரவரி 26 வரை விளக்கமறியல் நீடிப்பு

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க, பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதவான் தம்மிக்க ஹேமபால ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த காலங்களில் 63 தடவைகள் தொலைபேசியூடாக தொடர்புகொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நுகேகொடை மேலதிக நீதவான் ஹாரிஸ் பெல்பொலவிடம் தௌிவுபடுத்தியுள்ளார்.

நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்கவிற்கு 33 தடவைகளும் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவிற்கு 10 தடவைகளும் நீதவான் தம்மிக்க ஹேமபாலவிற்கு 20 தடவைகளும் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் கூறியுள்ளார்.

நீதிமன்ற செயற்பாடுகளுக்குள் அநாவசியமாக தலையீடு செய்த குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு பிணை வழங்கும் பட்சத்தில், விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மன்றுக்கு அறிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய தொலைபேசி கலந்துரையாடல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள குரல் மாதிரிகளின் அறிக்கை கிடைக்கும் வரையும் விசாரணைகள் நிறைவு பெறும் வரையும் சந்தேகநபருக்கு பிணை வழங்க வேண்டாம் என பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கமைய, சந்தேகநபர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதவான், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.