ஏத்தாளை விபத்தில், முஹம்மது அனீஸ் மரணம் - லொறிச் சாரதி கைது
கற்பிட்டி ஏத்தாளை பகுதியில் நேற்று புதன்கிழமை (04) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி ஏத்தாளை கஜூவத்தை பகுதியைச் சேர்ந்த முஹம்மது அன்ஸார் முஹம்மது அனீஸ் (வயது 20) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் இடம்பெற்ற நேற்று புதன்கிழமை மாலை மஹேந்திரா ரக லொறியொன்றும், குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த இளைஞனை அங்கிருந்தவர்கள் உடனடியாக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், குறித்த இளைஞன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் ௯றினர்.
குறித்த விபத்து தொடர்பான மரண விசாரணையை கற்பிட்டி, புத்தளம் பகுதிகளுக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் முன்னெடுத்தார்.
குறித்த விபத்தால் இளைஞனுடைய கழுத்தில் உள்ள பிரதான நரம்பில் ஏற்பட்ட வெடிப்பினால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, இளைஞனுடைய சடலத்தை தந்தையிடம் ஒப்படைத்தார்.
அத்துடன், விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கற்பிட்டி பொலிஸார் இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment