Header Ads



கராபிட்டியில் சுனாமியில், உயிரிழந்த 300 பேரின் உடற்பாகங்கள்

சுனாமி ஆழிப்பேரலையின் போது உயிரிழந்தவர்களில், அடையாளம் காணப்படாத நிலையிலான 300 பேரின் உடற்பாகங்கள், குறித்த அனர்த்தம் ஏற்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும், காலி - கராபிட்டிய வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை அதிகாரி பீ.ருவன்புர தெரிவித்துள்ளார்.    

2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி  ஆழிப்பேரலையின் பின்னர், 1,200 பேரின் சடலங்கள் கராபிட்டிய  வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டன.    

இதன்போது, 200 பேரின் சடலங்களை, அப்பகுதி கிராம அலுவலர்  அடையாளங்கண்ட பின்னர், உறவினர்களால் அந்தச் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.  பின்னர், மேலும் 500 சடலங்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும், 450 சடலங்களை  அடையாளம் காண்பதற்கு எவரும் முன்வரவில்லை.    

இதனையடுத்து, சடலங்களைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தியதன்  பின்னர், உடற்பாகங்களின் மாதிரிகள், கராபிட்டிய வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளன.    

இவ்வாறு ஆவணப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களில் 150  சடலங்கள், உறவினர்களின் ஆதாரங்களுடன் அடையாளம் காணப்பட்டமை  குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே, எஞ்சிய சடலங்களின் உடற்பாகங்கள், தொடர்ந்தும் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

15 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் உயிர்நீத்த நம் நாட்டு உறவுகளை நினைவுகூர்ந்து, நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில், இன்று (26) அஞ்சலி செலுத்தப்பட்டன.    

சுனாமியில் உயிரிழந்த உறவுகளுக்காக, நேற்றுக் காலை 9.25 மணியளவில், இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தவாறு, அஞ்சலி செலுத்தியிருந்தார்.    

சுனாமியை நினைவுகூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதான நிகழ்வு, ஹிக்கடுவ - தெல்வத்த, பேரெலிய பகுதியில் நடைபெற்றது.    

தென்மாகாண ஆளுநர் விலி கமகே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சர்வமதத் தலைவர்கள், முப்படையினர், உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் எனப் பலர் பங்கேற்றிருந்தனர்.   

சுனாமி ஆழிப் பேரலையில், இலங்கையில் 30,000 பேர் வரை உயிரிழந்ததுடன், ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் காணாமல் போயிருந்தனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.    

No comments

Powered by Blogger.