Header Adsஇன்றுதான் ஐ.தே.க. மகாநாயக்க தேரர்களையும், பௌத்த தர்மத்தையும் நினைவுப்படுத்துகின்றனர்

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமிழ்க் கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளை எப்போதும் வழங்கமுடியாது என எல்லே குணவங்ச தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாத்திரமே தாயகப் பிரதேசம் என்று அந்த கோரிக்கைகளில் கூறப்பட்டதற்கு தேரர், வன்மையாகக் கண்டத்தையும் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், ஒட்டுமொத்த இலங்கை நாட்டையும் ஏன் தாயகப் பிரதேசம் என்று அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

புதிய அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவையில் ஊடகத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பந்துல குணவர்தன, ஊடகத்துறை அமைச்சில் சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் இன்றைய தினம் தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் விருந்தினர்களில் ஒருவராக அழைக்கப்பட்டிருந்த கொழும்பு எல்லே குணவங்ச தேரர், அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு ஆசியுரை நிகழ்த்தினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“அண்மையில் தேர்தலுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. நான் அந்த கோரிக்கைகளை முழுமையாக வாசித்தேன். உண்மையிலேயே எப்போதும் அந்தக் கோரிக்கைகளை நாங்கள் வழங்கமாட்டோம்.

பொய்யான கருத்துக்கூறத் தேவையில்லை, அவற்றை நாம் கொடுக்க மாட்டோம். நாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருதாயின் பிள்ளைகளான வாழ்கின்றோம்.

தர்மாசோக்க மன்னரின் கடிதத்தில் உள்ளபடி, நாட்டிலுள்ள அனைவரும் ஒருதாய்மக்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைவரும் தமிழ், முஸ்லிம், சிங்களம், மலே, பரங்கியர் உள்ளிட்ட அனைவரும் ஒரே குடும்ப அங்கத்தினர் என எண்ணும்படியே நான் வலியுறுத்துகின்றேன். அதனை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்.

வாக்குகளை அளிக்காவிட்டாலும் பிரச்சினையில்லை, அனைவரும் ஒன்றிணைவோம் என்றே கூறியுள்ளார். எங்களுக்கு சவால் விடுப்பதற்காகத்தானே அவர்கள் வாக்களிக்காமல் இருந்தார்கள்.

ஆனாலும் நாங்கள் சகோதர தமிழ் மக்களுக்கு சவால்விடுப்பதில்லை. அந்தக் கோரிக்கைகளில் ஒன்றாக, வடக்கு, கிழக்குப் பிரதேசம் தமிழ்த் தாயகப் பகுதிகள் என்று கூறப்பட்டுள்ளது.

ஏன் இந்த ஒட்டுமொத்த ஸ்ரீலங்காவும் தாயகப் பிரதேசம் என்று கூறமுடியாதுள்ளது? வடக்கு கிழக்கு மட்டுமா தாயகப் பிரதேசம்? முழு ஸ்ரீலங்காவும் தாயகப் பிரதேசம் எனக் கூறினால் அதனை நாங்கள் ஏற்போம் என்பதோடு அதற்கு ஆசிர்வாதத்தையும் வழங்குவோம்.

அது எமக்கு பலத்தைத் தரும். தமிழ் மக்களுடன் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அரசியல் தலைவர்கள் செய்கின்ற தவறுகளுக்கு மக்கள் பலியாகக்கூடாது. இங்கே சிங்களத் தலைவர்கள் செய்கின்ற பிழைகளுக்கு நாங்கள் பலியாவதில்லைதானே.

எமக்கு சவால்கள் உள்ளன. சர்வதேச ஒப்பந்தங்களின் ஊடாக நாடு பெரும் அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளது. உள்நாட்டு ஒப்பந்தமாயின் பிரச்சினையில்லை, ஆனால் சர்வதேச ஒப்பந்தமானது மிகவும் உன்னிப்பாக அவதானித்து, பக்கச்சார்பற்ற, பொறுமையுடன் செய்துகொள்ள வேண்டும்.

எமக்கெதிராக அரச சார்பற்ற நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை முதலிட்டது. அவற்றை யாரும் கூறமாட்டார்கள். இந்த நாட்டில் இனம்,கலாசாரம், மதமற்ற மக்கள் என்ற கருத்து உருவாக்கப்பட்டது. குறிப்பாக புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்து.

மதமற்ற நாடாக மாற்ற முயற்சித்தார்கள். 09 கட்டங்களாக நாட்டைப் பிரிப்பதற்கு அதில் கூறப்பட்டிருந்தது. ஓரினச்சேர்க்கையை சட்டமாக்கவும் பார்த்தார்கள்.

அவற்றை நாங்கள் மறந்துவிடவில்லை. ஆனால் இன்றுதான் ஐக்கிய தேசியக் கட்சியினர் மகாநாயக்க தேரர்களையும், பௌத்த தர்மத்தையும் நினைவுப்படுத்துகின்றனர்” என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.