Header Ads



"நாங்கள் எல்லாவற்றையும் முஸ்லிம்களுக்கு, வழங்குவதாக கூறுகிறார்கள்" - ரணில்

பிள்ளையான் மீதுள்ள விருப்பத்தின் காரணமாக கிழக்கு மாகாணத்திற்கு அவரை முதலமைச்சராக்க நினைக்கும் மஹிந்த ராஜபக்ச, தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதை நீங்கள் ஏன் எதிர்த்தீர்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து மட்டக்களப்பு - செங்கலடியில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நாங்கள் பிள்ளையானுக்கு விருப்பமாக இருக்கின்றோம் அதனால் தமிழ் மக்களை விரும்புகின்றேன் என கூறும் மொட்டு அணியினர் அவர்களுக்கு விருப்பம் இல்லாததன் காரணமாகவா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொன்றார்கள்.

2015இல் நீங்கள் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி இன ஒற்றுமைக்கான வழியினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள். அதேபோன்று நவம்பர் 16ஆம் திகதி அதனை முன்கொண்டு செல்லப்போகின்றோமா அல்லது அதனைச் சீரழிக்கப் போகின்றோமா என்று உறுதி செய்ய வேண்டும்.

தமிழர்களுடனும், முஸ்லிம்களுடனும் சேர்ந்து இருக்கும் போது தான் சிங்களவர்கள் பலம் பெறுகின்றார்கள். எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டும்.

கறுப்பு சிங்களவன் என எல்லோராலும் அழைக்கப்படும் எமது கட்சியின் தலைவர் டி.எஸ்.சேனாநாயக்க அன்று கூறியுள்ளார். அந்த பயணத்தை நாங்கள் 2015 ஜனவரி 8ஆம் திகதி ஆரம்பித்தோம்.

மொட்டு இனவாதத்தை எதிர்பார்க்கின்றது. கிழக்கு மாகாணத்துக்கு ஒரு தமிழ் முதலமைச்சர் வேண்டும் நாங்கள் பிள்ளையானை முதலமைச்சராகுவேன் என இனவாதம் பேசும் மஹிந்த ராஜபக்ஷ கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் கூறுகிறார்கள்.

பிள்ளையானுக்கு இங்கு ஆதரவு கிடையாது. தேர்தல் வந்தவுடன் தமிழ் மக்கள் தங்களுக்கு ஒரு முதலமைச்சரை தெரிவு செய்து கொள்வார்கள்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் வசிக்கிறார்கள். இங்கு முதலமைச்சராக வருவதற்கு எந்த இனமாக இருந்தாலும் செயற்திறன் மிக்கவர்களாக இருக்க வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாக பணியாற்றக் கூடிய ஒருவரை முதலமைச்சராக்குங்கள்.

மொட்டு கட்சியினர் மாகாணசபை முறைமையை உடைத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி பிள்ளையானை பலவந்தமாக முதலமைச்சராக்க முயற்சிக்கிறார்கள். நான் பிள்ளையானுக்கு விருப்பமாக இருக்கின்றேன். ஆகவே நான் தமிழ் மக்களை விரும்புகின்றேன் என அவர்கள் கூறுகிறார்கள்.

அவர்களுக்கு விருப்பம் இல்லாததன் காரணமாகவா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொன்றார்கள். இவ்வாறு பொய்ப் பிரசாரம் செய்யாமல் உண்மையைப் பேசுங்கள் என கேட்டுக் கொள்கின்றேன்.

நாங்கள் எல்லாவற்றையும் முஸ்லிம்களுக்கு வழங்குவதாக கூறுகிறார்கள். நாங்கள் ஹிஸ்புல்லாவை வேட்பாளராக நிறுத்தவில்லை. இரண்டாவது விருப்பு வாக்கினை கோத்தபாயவுக்கு வழங்குமாறு வேட்பாளர் ஹிஸ்புல்லா முஸ்லிம் மக்களிடம் கூறுகிறார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக இங்குள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர்களுடன் பேசி அபிவிருத்தி செய்வேன். நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் ஒன்றாக இருக்க வேண்டும். இனவாதத்தால் எதையும் செய்ய முடியாது.

ஒற்றையாட்சிக்குள் அதிகார பரவலாக்கலை வழங்கி அரசியல் தீர்வினை வழங்குவோம் என்பதை உறுதியாக கூறுகின்றேன். ஜனாதிபதிகளாக பதவி வகித்த ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது காலத்தில் இருந்த அறிக்கைகளை காரணிகளாக எடுத்துக் கொள்ள போகின்றோம்.

இந்த யோசனைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோத்தபாய ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்தியாவின் ராஜசபை போன்று மாகாண சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் இங்கு செனட் சபையை உருவாக்கவுள்ளோம். வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் மொனராகலை பிரதேசங்களை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இன்னும் அபிவிருத்தியடையாத பகுதிகளாக கருதி அதிக நிதியுதவி வழங்குமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

மாவட்டத்தில் பாரிய நீர்ப்பாசன திட்டமாக உறுகாமம், கித்துள் இணைப்பானை பிரான்ஸ் நாட்டு உதவியுடன் ஆரம்பித்துள்ளோம். 98 எம்.சிம்.எம் வரை நீரின் கொள்ளளவை அதிகரிக்கச் செய்வோம். அதனூடாக 20 ஆயிரம் ஏக்கர் காணியில் மேலதிகமாக வேளாண்மை செய்கை பண்ண முடியும் என்றார்.

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்க, ராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ,கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோகித போகல்லாகம உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.