Header Ads



தரித்திரம் வாய்ந்த அரசாங்கத்திடமிருந்து, நாட்டை காப்பாற்றுவதே எமது இலக்காகவிருந்தது


கடந்த ஆட்சிக்காலத்தில் இராணுவம் மற்றும் கடற்படையின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்படுவதற்கு காரணமான இன்னும் இரண்டு அதிகாரிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்ல முயற்சித்து வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த இரண்டு அதிகாரிகளையும் வெளிநாடு செல்லவிடாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்திருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணவர்ன தமக்கு கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவையில், அமைச்சராக நியமிக்கப்பட்ட விமல் வீரவன்ச இன்றைய தினம் முற்பகல் தனது கடமைகளை அமைச்சில் பொறுப்பேற்றார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

2015ஜனவரி 08ம் திகதி மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர் அவரை மீண்டும் இந்த நாட்டுத் தலைவராக்குவோம் என்கிற வாக்குறுதியை தேர்தலுக்கு அடுத்த தினம் வழங்கியிருந்தோம்.

கடந்த நான்கரை வருடங்களாக இருந்த தரித்திர அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் 2015ம் ஆண்டு பெப்ரவரி 18ம் திகதி நுகேகொடையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை வெற்றியை நோக்கிக் கொண்டுசெல்ல எம்மால் முடிந்தது.

தரித்திரம்வாய்ந்த அரசாங்கத்திடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றுவதே எமது இலக்காகவிருந்தது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிஷாந்த டி சில்வா என்கிற அதிகாரி சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற குடும்பத்தோடு சென்றிருக்கிறார்.

அவர் ஊடாகவே கடந்த ஆட்சிக்காலத்தில் கோட்டாபய ராஜபக்சவை அரசியல் பழிவாங்கல் செய்யவும், ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலிருந்த தலைவர்களை அரசியல் ரீதியாக வேட்டையாடவும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அவருக்கு எவ்வாறு சீக்கிரமாக நாட்டை விட்டுச்செல்வதற்கான வீசா கிடைத்தது என்பதிலிருந்து தரித்திர அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே அவர்கள் பணியாற்றியிருப்பது தெளிவாகிறது.

அந்த தரித்திர அரசாங்கத்திடம் இருந்து நாட்டை தற்போது காப்பாற்றியுள்ளோம். வேறு வரப்பிரசாதங்களுக்காக அல்ல, இந்த நாட்டு பெரும்பான்மை மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையை அரசாங்கம் மீது வைத்துள்ளனர்.

இதனிடையே, குற்றப் புலனாய்வுப் பிரிவிலுள்ள இன்னும் இரண்டு அதிகாரிகள் குடும்பத்தோடு வெளிநாட்டிற்குச் சென்று அரசியல் தஞ்சம் கோருவதற்கு முயற்சித்து வருவதுபற்றி தகவல் கிடைத்துள்ளது.

கடந்த காலங்களில் அநீதியான முறையில் இராணுவம் மற்றும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டபோது குற்றச் செயல்களுக்கான கட்டளையை கோட்டாபய ராஜபக்சவே விடுத்தார் என்று சொன்னால் வெளிநாடு சென்று பாதுகாப்புடன் சொகுசாக வாழக்கூடிய வசதிகளை ஏறபடுத்தித்த தருவதாக அந்த இரண்டு அதிகாரிகளும்தான் கூறியிருக்கின்றனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் நாட்டிலிருந்து வெளியேற முயற்சிப்பது குறித்து பாதுகாப்புச் செயலாளரிடம் கூறியபோது, அதனைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக பதிலளித்தார்” என கூறியுள்ளார்.

1 comment:

  1. இனி நாட்டிலிருந்து வௌியேற நீதிமன்ற கட்டளை அவசியமில்லை. மேலிடத்திலிருந்து வரும் ஒரு கட்டளை போதும் அனைத்தையும் தடுத்து நிறுத்த. இந்த நாடு எங்கே போகிறது?

    ReplyDelete

Powered by Blogger.