Header Ads



தலைமைத்துவத்திலிருந்து விலக ரணிலுக்கு, ஒருவார கால அவகாசம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு வாரகால அவகாசத்தைக் கட்சியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று வழங்கியுள்ளது. தலைமைத்துவம் அதனைச் செய்யத் தவறினால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உறுதியான தீர்மானத்தை எடுக்கவிருப்பதாக அந்த அணியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். 

ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சிவேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தோல்விக்குத் தனியே யார்மீதும் குற்றம் சுமத்த முற்படவில்லை எனவும் கட்சிக்குள் உருவாகி இருக்கும் நெருக்கடி நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ரணில் விக்கிரமசிங்க விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். 

கட்சியின் ஒரு தரப்பு தனி வழி சென்று புதுக்கட்சியை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தி வரும் நிலையில், 15 பேருக்கும் அதிகமான சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சி துண்டாடப்படும் எண்ணத்தில் காணப்படவில்லை.

அவர்கள் உள்ளிருந்தே போராடி கட்சியை பலப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்ஹ இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கட்சித்தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

தலைமைத்துவம் மாற்றப்படாவிட்டால், எதிர்காலத் தேர்தல்களில் எம்மால் வெற்றியடைய முடியாது. நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சியிலிருந்து வெளியேறித் தனிக்கட்சி அமைக்கும் எண்ணத்தில் செயற்படவில்லை.

தலைமைத்துவத்திலிருந்து வெளியேறுவதற்கு தாம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒருவார கால அவகாசம் வழங்கி இருக்கின்றோம். அவர் கௌரவமாகத் தனது முடிவை வெளிப்படுத்துவார் என நம்புகின்றோம்.

அவர் எமது கோரிக்கையை நிராகரிப்பாரானால் காலக்கெடு முடிந்ததும் நாம் எடுக்கவிருக்கும் முடிவை வெளிப்படையாக அறிவிக்கவிருக்கின்றோம்.

அதேசமயம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு கோரும் கடிதத்தை சபாநாயகருக்கு கையளித்திருப்பதாகவும் கட்சித் தலைமை அதற்கும் முட்டுக்கட்டை போடுமானால், நாம் ஜனநாயக வழிப் போராட்டத்தில் குதிக்கும் தீர்மானத்தை எடுக்கவிருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இது இவ்விதமிருக்க கட்சித்தலைமைத்துவத்திலிருந்து வெளியேறாமல், ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பிடிவாதமாக செயற்படுவாரானால், அடுத்து வரக்கூடிய தேர்தல்களைப் பகிஷ்கரிப்பதற்குக் கட்சியின் மற்றொரு தரப்பினர் தீர்மானித்திருப்பதாகவும் அறியவருகின்றது.

அவ்வாறான நிலை உருவானால் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்படலாமென கட்சியிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.

இன்றைய நிலையில் கட்சியை பாதுகாப்பதற்குள்ள ஒரே வழி ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவப் பதவியை இராஜினாமாச் செய்வதுதான் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர்கள் புதிய தலைமுறைக்கு வழிவிட்டு ரணில் விக்கிரமசிங்க ஒதுங்கிக் கொள்ளவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

எம்.ஏ.எம். நிலாம்   

2 comments:

  1. ஒரு வாரம் அல்ல ஒரு தினத்தில் கூட கட்சியின் தலைமைக்கு லாயக்கிலாத,ஆழுமையில்லாத,ஒரு நபர்.வீட்டுக்கு போய் ஓய்வெடுப்பது மிகவும் சிறப்பானது.

    ReplyDelete
  2. அவரு கட்சியின் தலைமையத்துவதில் இருந்து Zimbabe Robert Mugabe மாதிரி செல்லமாட்டாரு ஆனால் அவரை வீசி ஏறிய வேண்டும்.ஒரு கட்சியின் தலைவர் அந்த கட்சியில் இரண்டு முறைக்கு மேல் கட்சி தலைமைத்துவத்தில் இருக்க கூடாது என்ற சட்டமும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.