சஜித்திடம் எதுவும் இருக்கவில்லை, கோட்டாபயவிடம் இருந்தது - எனவே அவர் ஜனாதிபதியானார்
இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் நெருக்கமானதாக இருக்கும் என்றும் வெற்றி பெறுபவர் எவராக இருந்தாலும் பெரும்பான்மை வாக்குகள் மிகச் சொற்பமாகவே இருக்கும் என்றும் தேர்தல் பிரசார காலத்தில் எதிர்பார்க்கப்பட்டது.
இருவரில் எவராவது 50 % + 1வாக்குகளைப் பெற முடியாமல் போகுமேயானால், இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையை செய்ய வேண்டியிருக்கும் என்று கூட முதற் தடவையாக ஊகிக்கப்பட்டது. இருவருமே முதன்மை நிலையான அரசியல்வாதிகள் இல்லை என்பதால் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கைக்கான சாத்தியப்பாடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
கோட்டாபய ஒரு இராணுவ அதிகாரியாக இருந்து பிறகு பாதுகாப்புச் செயலாளராக உயர்மட்ட அதிகாரி பதவிக்கு வந்து, இறுதியில் அரசியல்வாதியாக வந்தவர். ஆனால், அவர் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியானதன் பின்னர்தான் அரசியல்வாதியானர். அதனால், அவரின் அரசியல் அனுபவம் குறைவானது.
மறுபுறத்தில், சஜித் பிரேமதாச அரசியலை தொழிலாகக் கொண்டவர் என்ற போதிலும், பரபரப்பானவரோ சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவரோ அல்ல. பெயரளவில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர். ஆனால் கட்சியின் கொள்கைகளை வடிவமைப்பதில் அவருக்கு எந்தப் பாத்திரமும் இருக்கவில்லை. கொள்கைகளை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அவருக்கு நெருக்கமான ஒரு குழுவினருமே தீர்மானிக்கிறார்கள்.
சஜித் தேசியப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவது அரிது. விரும்பித் தெரிந்தெடுத்துக் கொண்ட அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தனது பணிகளுடன் அவர் திருப்திப்பட்டுக் கொண்டார் போலத் தெரிகிறது.
தேர்தல் முடிவுகளை எதிர்வுகூற முடியாமல் இருந்ததால் நெருக்கமான போட்டி, இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை பற்றியெல்லாம் பேசப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தையும் வடக்கு , கிழக்கு மாகாணங்களின் ஏனைய மாவட்டங்களையும் தவிர, பெரும்பாலான மாவட்டங்களில் மிகவும் உயர்ந்தளவு சதவீதமான வாக்குகள் பதிவாகியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது இரு பிரதான வேட்பாளர்களுமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவசரமாக தீர்வு காண வேண்டிய பிரச்சினைகள் தங்களுக்கு இருந்ததால் வாக்களிப்பில் தீவிரமாக பங்கேற்க வேண்டிய தேவையை வாக்காளர்கள் உணர்ந்தார்கள் என்பது தெளிவானது.
ஆனால், வாக்காளர்களின் அக்கறைகள் வர்க்கத்துக்கு வர்க்கம், பிராந்தியத்துக்கு பிராந்தியம், இனக்குழுக்களுக்கு குழுக்கள் வேறுபட்டவையாக இருந்தன. அரசாங்கத்திடமிருந்தும் வேட்பாளர்களிடமிருந்தும் தங்களுக்குத் தேவையானவை எவை, தேவையில்லாதவை எவை என்பதைப் பற்றிய தெளிவான சிந்தனையை வாக்காளர்கள் கொண்டிருந்தார்கள். வேட்பாளர்கள் எவற்றைச் செய்யக் கூடிய ஆற்றல்களைக் கொண்டவர்கள் என்பதைப் பற்றிய தெளிவும் வாக்காளர்களுக்கு இருந்தது.
அவசரமாக தீர்வு காண வேண்டிய குறிப்பிட்ட சில குறைபாடுகளும் அக்கறைகளும் இருந்த காரணத்தினால்தான், ஆரம்பத்தில் உத்தியோகபூர்வமற்ற பகிஷ்கரிப்பு ஒன்று குறித்து மக்கள் சிந்தித்த ( தமிழர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட) வடமாகாணத்தில் மக்கள் வாக்களிப்பில் பங்கேற்றார்கள். வடமாகாணத்தில் வாக்களிப்பு வீதம் இலங்கையின் தெற்கையும் மேற்கையும் மத்தியையும் போன்று உயர்வானதாக இல்லாவிட்டாலும் கூட, கணிசமான வீதத்தில் அவர்கள் வாக்களித்தார்கள்.
அதேசமயம் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஆதரவை வலுப்படுத்திக் கொள்ளும் கரிசனை கொண்டிருந்த கோட்டாபயவுக்கு அம்மக்கள் பெருமளவில் வாக்களித்தனர். கொழும்பு, கண்டி, நுவரேலியா போன்ற ஐக்கிய தேசிய கட்சியின் செல்வாக்குப் பகுதிகளில் கூட கோட்டாபயவுக்கு உயர்வான வாக்குகள் கிடைத்தன. தனது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் கூட சஜித் பிரேமதாசவினால் கணிசமான வாக்குகளைப் பெற முடியாமல் போய் விட்டது. அந்த அளவுக்கு அவர் பொருத்தமற்றவராகப் போய் விட்டார்.
இரு பிரதான அக்கறைகள் மீது கோட்டாபய கவனத்தைச் செலுத்தினார். முதலாவதாக, சோம்பலான அரசாங்கம் ஒன்றுக்குப் பதிலாக செய்நோக்கமும் ஆற்றலும் கொண்ட அரசாங்கம் ஒன்றுக்கான தேவை.
இரண்டாவது, பயங்கரவாதம் மீண்டும் தலைகாட்டும் போக்கிற்கு எதிராக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை. உள்நாட்டு முஸ்லிம் தீவிரவாதிகள் குழுவொன்றினால் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று (ஏப்ரல் 21) மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் பயங்கரவாதம் மீண்டும் தீவிரமடையக் கூடிய சாத்தியம் குறித்த பீதியை மக்களுக்கு ஏற்படுத்தியிருந்தன.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் விடயத்தில், சஜித் பிரேமதாசவும் முக்கிய உறுப்பினராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முன்கூட்டியே கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பரிதாபகரமான முறையில் தவறியதனால், 250இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மறுபுறத்தில், கோட்டாபய பிரிவினைவாத விடுதலைப் புலிகளுக்கு எதிராக பாரம்பரியமான போரையும் பாரம்பரியமுறையில் அல்லாத போரையும் வழிநடத்திய அனுபவம் காரணமாக தீவிரவாதிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஆற்றலைக் கொண்டவராக விளங்குகிறார்.
எனவே, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அவர் வாக்குறுதி அளிக்கும் போது அவரின் கூற்றுக்கு ஒரு நம்பகத்தன்மை இருந்தது.
ஆனால், சிவில் சமூகம் மற்றும் ஊடகத்துறை உட்பட இலங்கைச் சமூகத்தின் உயர்குழாம் கோட்டாபய வெற்றி பெற்றால் போர்க்காலத்தின் போது எடுக்கப்பட்டதைப் போன்ற கடுமையான நடவடிக்கைகளுக்கு மீண்டும் முகங்கொடுக்க வேண்டி வரும் என்று அஞ்சியது. இந்த வர்க்கத்தினர் வெள்ளை வான்களில் ஆட்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட யுகம் திரும்பி வரும் என்று பீதியைக் கிளப்புவதற்கு சமூக ஊகங்களைப் பயன்படுத்தினர். ஆனால், இந்த பிரசாரம் பாதுகாப்புக்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கின்ற மக்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
எடுக்கின்ற சொந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தயங்குகின்ற அல்லது தடுமாறுகின்ற ஒரு அரசாங்கத்தை அல்ல உறுதியான- பலம் பொருந்திய ஒரு அரசாங்கத்தை விரும்பினார்கள். மைத்திரிபால சிறிசேன_ ரணில் -- விக்கிரமசிங்க அரசாங்கம் அதன் பதவிக் காலம் முழுவதும் தடுமாறிக் கொண்டிருந்ததனால் மக்கள் பெரும் விரக்திக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளாகியிருந்தனர். கோட்டாபய விடுதலை புலிகளை தோற்கடித்தது மாத்திரமல்ல, நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் என்ற வகையில் கொழும்பு நகரை மீளக்கட்டியெழுப்பியதையும் கண்ட மக்கள் அவரை ஒரு செயல்வீரராக நோக்கினார்கள்.
உள்நாட்டுப் போரின் காரணமாக 30வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் ராஜபக்சக்களின் வருகையுடன்தான் மீண்டும் தொடங்கப்பட்டன. போரின் முடிவுக்குப் பின்னரான ராஜபக்சவின் இரண்டாவது பதவிக் காலத்தின் போது இந்தியாவும் சீனாவும் ரயில்வே பாதைகளையும் நெடுஞ்சாலைகளையும் துறைமுகங்களையும் இலங்கையில் நிர்மாணிக்கத் தொடங்கின.
இதற்கு மாறாக, இந்தியாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைத் தவிர, தனது சாதனைகள் என்று காண்பிப்பதற்கு சஜித் பிரேமதாசவிடம் பெரிதாக எதுவும் இருக்கவில்லை. சமூகத்தின் அடிமட்ட மக்களின் தலைவன் என்று தன்னை அவர் வர்ணித்தார். ஆனால்,அந்த அடிமட்டத்தில் தன்னால் செய்யப்பட்ட பணிகள் என்று எதையும் காண்பிக்க முடியவில்லை. பிரேமதாசவின் மரபைப் பற்றி சஜித் பேசினார். ஆனால், அத்தகைய மரபு எதுவும் இருப்பதை காட்டுவதற்கு அவரிடம் எதுவும் இருக்கவில்லை.
வளர்ச்சியடைந்து வரும் ஒரு இலங்கைச் சமூகத்துக்கு, குறிப்பாக தென்னிலங்கை சிங்கள சமூகத்துக்கு பொருத்தமில்லாத வாக்குறுதிகளை சஜித் பிரேமதாச பிரசாரங்களின் போது அள்ளி வீசினார். தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் தொழில் வாய்ப்பொன்றைப் பெறுவதற்கோ அல்லது வர்த்தகத்தைச் செய்வதற்கோ அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இலவசங்களை வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அவர்களைக் கவரவில்லை. பெருந்தோட்டங்களில் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளினால் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புக்களை ஏற்றுக் கொள்ள மறுத்த பெருமைக்குரிய மக்கள் அவர்கள். அதன் காரணத்தினால்தான் பிரிட்டிஷ் தேயிலை, இறப்பர் மற்றும் கோப்பி கம்பனிகள் வறுமையினால் பீடிக்கப்பட்டிருந்த இந்தியாவில் இருந்து சுமார் பத்து இலட்சம் தொழிலாளர்களை அழைத்து வர நிர்ப்பந்திக்கப்பட்டன.
பெண்களுக்கு ஆரோக்கியத் துவாய்களை இலவசமாக வழங்குவதாக தேர்தல் பிரசாரங்களின் போது வாக்குறுதியளித்த சஜித்தை நகைப்புக்கிடமாக்கி, சமூகவலைத்தளங்களில் கண்டனக் கணைகள் தொடுக்கப்பட்டன. இலங்கைப் பெண்கள் அவற்றை பணம் கொடுத்து வாங்க முடியாத அளவுக்கு வறியவர்கள் அல்ல என்பதை தெரியாதவராக அவர் நடந்து கொண்டார்.
சிங்கள தென்னிலங்கையில் சஜித் பெற்றுக் கொண்ட வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சியின் உறுதியான ஆதரவாளர்களின் வாக்குகளும் ராஜபக்ச குடும்பத்தினரின் ஆட்சியை விரும்பாத சக்திகளின் வாக்குகளுமேயாகும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளை விடவும் வேறுபட்டவையாகும். இவ்விரு மாகாணங்களிலும் தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களின் பிரச்சினைகளில் இருந்து வேறுபட்ட பிரச்சினைகளைக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினால் இறுதி நேரத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளினால் ஊக்கம் பெற்ற தமிழர்கள் கோட்டாபயவை தோற்கடிக்க உறுதி பூண்டார்கள். சஜித்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை தமிழர்கள் நம்பவில்லை, ஆனால் அவருக்கு அளிக்கும் வாக்குகள் கோட்டாபயவுக்கு எதிரானவை என்று அவர்கள் கருதினார்கள்.
தங்கள் வாக்குகள் வீணாக்கப்படுவதை தமிழர்கள் விரும்பவில்லை. அதன் காரணத்தினால்தான் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரும் அவரின் உறவுக்காரருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தை அவர்கள் அலட்சியம் செய்தார்கள். கிழக்கு மாகாணத்திலும் கூட தமிழர்கள் சஜித்தையே ஆதரித்தார்கள். முஸ்லிம்களுடனான குரோதத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு அவர்களுடன் சேர்ந்து சஜித்தை ஆதரித்தார்கள் தமிழர்கள்.
முஸ்லிம்கள் நெருக்கடிக்குள்ளான வேளைகளில் அவர்களுக்காக சஜித் குரல் கொடுக்கவில்லை என்ற போதிலும், தங்களுக்கு எதிரான செயற்பாடுகளுடன் சஜித்தை அவர்கள் தொடர்புபடுத்தியது கிடையாது.
பெரும்பான்மை மக்களின் அக்கறைகள் மீது கவனம் செலுத்திய கோட்டாபயவிடம் அவற்றுக்கான தீர்வொன்றும் இருந்தது. அதனால்தான் அவர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்று கூற முடியும். சஜித்திடம் அவ்வாறு எதுவும் இருக்கவில்லை.
(நியூஸ் இன் இந்தியா)
தமிழில்: சேந்தன்...
During my July 2019 visit I noticed that the revenge support of Tamils against and saved the country from the Tamils's terrorists feeling amongst Sinhalese and I have come to my believe that Gotabaya will come to power with 60percent of Sinhalese votes, TNA is using revenge politics in the election canvassing and Gotabaya insisting that election should be decided by Sinhalese votes , both communities must unite in the future and forget their past activities
ReplyDeleteDuring my July 2019 visit I noticed that the revenge support of Tamils against Gotabaya and the support of Gotabaya among Sinhalese saved the country from the Tamils's terrorists and I have come to my believe that Gotabaya will come to power with 60percent of Sinhalese votes, TNA is using revenge politics in the election canvassing and Gotabaya insisting that election should be decided by Sinhalese votes , both communities must unite in the future and forget their past activities
ReplyDeleteமுஸ்லீம்களுடனான குரோதம் யாருக்கு?
ReplyDeleteமுஸ்லீம்களுடன் நெடுங்காலம் ஒன்றுக்குள் ஒன்றாக பழகிய தமிழ் மக்களுக்கா அல்லது கருணா, வியாழேந்திரன் போன்ற அரைகுறைகளுக்கா?
இந்த அரைகுறைகளின் பிதற்றல்களை கவனித்துவிட்டு அவைதான் கிழக்கு தமிழ் மக்களின் உணர்வுகள் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள்...
கேடுகெட்ட உங்கள் அரசியல் வியாதிகளை சாதாரண மக்களுக்குள் திணிக்க முயலாதீர்கள்