சஜித்தின் தோல்விக்கு 13 காரணங்களை கூறும் மனோ - பிரதான விடயம் சஹ்ரான், றிசாத்தும் காரணமாம்
ஏன் பின்னடைவு? பின்னர் நிறைய சொல்லலாம். இப்போது கொஞ்சம் சுருக்கமாக...>
1) சின்னம் ஒரு பிரச்சினை அல்ல. இதற்கு முன்னும் “அன்னம்” சின்னம் பயன்படுத்தப்பட்டு வெற்றி பெற்றது. சிலருக்கு தனிப்பட்ட காரணங்களால், சின்னம் தெரியாமல் இருந்திருக்கலாம். இப்படியான நபர்கள் எப்போதும் இருப்பார்கள். சின்னத்தையும் ஒரு காரணமாக சொல்வது தலையை விட்டுவிட்டு வாலை பிடிப்பதாகும் என நினைக்கிறேன்.
2) முதல் கோணல், வேட்பாளர் அறிவிப்பின் தாமதம். இதற்குள் நாடு முழுக்க சுமார் ஆறாயிரம் விகாரைகளுக்கு சென்று, ஒரு சிங்கள-பெளத்த வலை பின்னலை ஏற்படுத்த எஸ்எல்பிபி கட்சிக்கு சாவகாசமான அவகாசம் கிடைத்தது.
3) தேர்தலுக்கு நிதி இல்லை. அரசாங்கமானாலும் தேர்தல் நிதி இல்லை. அப்படியானால், இது “நல்லவரா? கெட்டவரா?” (நல்ல அரசாங்கமா? கெட்ட அரசாங்கமா?) என்ற கேள்விக்கு ஒப்பானதாகும். நிதி இல்லாமல் களத்தில் குதித்து விட்டார்கள். இதுதான் உண்மை.
4) முக்கியமாக, 2009 “யுத்த வெற்றி” க்கு பிறகு, ஒரு “அரசியல் வெற்றி” சிங்கள பெளத்த நிறுவனத்துக்கு (Sinhala Buddhist Establishment) தேவைப்பட்டது. அதற்கு வேட்பாளர் கோடாபய ராஜபக்ச மிக சரியாக பொருந்தி வந்தார். இன்று இதுதான் இங்கே தேசிய யதார்த்தம்.
5) மேலே சொன்ன தேசிய யதார்த்தத்தை சமாளிக்க எம்மால் இந்நேரம் நியமிக்க கூடிய மிக சிறந்த வேட்பாளர்தான் சஜித். உண்மையில் வேறு எவரும் போட்டியிட்டிருந்தால், இதில் பாதி வாக்குகள்கூட சந்தேகமே. நிறைய யூஎன்பி மற்றும் சிறுபான்மையினர் தேர்தலில் வாக்களிக்க சென்றே இருக்க மாட்டார்கள்.
6) பிரதான விடயமாக ஐஎஸ்ஐஎஸ் சஹரான் குண்டுவெடிப்பு, எமக்கு எதிராக பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அமைச்சர் ரிசாத் மீதான எந்த ஒரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்ற தர்க்கரீதியான உண்மையை ஒரு பொருட்டாகவே “சிங்கள-பெளத்தம்” கணக்கில் எடுக்கவில்லை. அமைச்சர் ரிசாத் மூலம், சஜித்துக்கு வரும் சராசரி முஸ்லிம் வாக்குகளை விட, சஜித்துக்கு வரவிருந்த கணிசமான சிங்கள வாக்குகளை, அமைச்சர் ரிசாத்தின் பெயரை பயன்படுத்தி, எஸ்எல்பிபி கட்சி, கவனமாக திட்டமிட்டு, சமூக ஊடக, நேரடி ஊடக பிரசாரங்கள் மூலம், தடுத்து நிறுத்தியது. இது நான் கண்ட யதார்த்தம்.
7) மேலே சொல்லப்பட்ட உத்தியை அல்லது தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டை பயன்படுத்தி, வன்னியிலும், கிழக்கிலும் சஜித்துக்கு வரவிருந்த தமிழ் வாக்குகளை தடுத்து நிறுத்தவும், எஸ்எல்பிபி கட்சி முயன்றது. இந்த திட்டத்துக்கு எதிராக நான் விசேட கவனம் எடுத்து என்னால் இயன்றதை செய்தேன். எப்படி இருந்தாலும் இவையெல்லாம் எஸ்எல்பிபி கட்சியின் “ரியல் பொலிடிகல்” கெட்டிக்காரத்தனம் என்பேன். அவர்கள் எல்லாமே சரியாக திட்டமிட்டு செய்தார்கள்.
8) மற்றபடி, இந்த “ரணிலை மதிக்கவில்லை” என்ற குற்றச்சாட்டு எல்லாம் பெரிய விஷயம் அல்ல. ரணிலுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், நின்று, நிதானித்து, சிந்திக்க கூட நேரம் இல்லாத, தேர்தல் பரபரப்பிலும், சிங்கள வாக்கை தேடிய ஓட்டத்திலும், ரணிலுக்கு இயற்கையான இடம் கிடைக்கவில்லை என்பதால் அவர் ஒதுக்கப்பட்டார் அல்லது ஒதுங்கினார். இந்த யதார்த்தம், மேலே இரண்டாவதில் சொன்ன, “வேட்பாளர் அறிவிப்பின் தாமதம்” என்பதால் வந்த வினை. இதற்கு யார் பொறுப்பு?
9) ஒருவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக ஒரு நிலைப்பாட்டை எடுத்து, பெருங்கூட்டங்களை அதிகாரபூர்வமாக ஊடக ஒளியொலி வாங்கிகளின் முன் நடத்தாமல், தம் தரைமட்ட கட்சி இயந்திரம் மூலம் பிரச்சாரம் செய்து இருக்கலாமோ என யோசிக்கிறேன். (கூட்டமைப்பு பகிரங்க நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்திருந்தால் அது இன்று அவர்களுக்கே நன்மையாக முடிந்திருக்கும் என்பது வேறு விஷயம்!) அதேபோல் அமைச்சர் ரிசாத் வெளியே வராமல், தமது பிரதேசங்களுக்குள் மாத்திரம் செயற்பட்டு இருக்கலாமோ என யோசிக்கிறேன். எஸ்எல்பிபி கட்சி திட்டமிட்டு சாணக்கியமாக செயற்படும் போது, அதற்கு பதில் நாமும் சாணக்கியமாக செயற்பட்டிருக்கவேண்டும். அதற்காக சில விட்டுக்கொடுப்புகளை செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும்.
10) மேலே சொன்னதில் ஒரு பகுதியாக ஒரு விஷயம் சொல்ல வேண்டும். எமது அணியின் முதலாம் கூட்டம், காலி முக திடலில் நடைபெற்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கூட்டம் அதுவாகும். அதில் சிறுபான்மை கூட்டு கட்சி தலைவர்கள் உரையாற்றவில்லை என்பது ஒரு பெரும் விவாதமாக நீண்டநாள் பேசப்பட்டது. அது இப்படிதான் நடந்தது.
அன்றைய கூட்டம் ஆரம்பமாகும் முன், கூட்ட மேடையில் நாம் சென்று அமர்ந்தோம். இது கொழும்பு என்ற காரணத்தால், முதல் வரவேற்பு உரையை சிங்களத்தில் ரவி கருணாநாயக்கவும், தமிழில் நானும் ஆற்ற இருந்தோம். மேலும் அதன் பின் அமைச்சர்கள் ரவுப் ஹக்கீம், ரிசாத் ஆகியோரும் உரையாற்ற இருந்தார்கள். எல்லோர் பெயரும் பேச்சாளர் பெயர் பட்டியலில் இருந்தது.
அப்போது அமைச்சர் திகாம்பரம் என்னை தொலைபேசியில் அழைத்து, அமைச்சர் ரிசாத் பேசும் போது கூட்டத்தின் மத்தியில் இருந்து கூச்சல் எழுப்பப்பட இருப்பதாகவும், ஒரு தனியார் ஊடக நிறுவனம் அதை படம் பிடித்து அதிரடி செய்தியாக வெளியிட உள்ளதாகவும், இதுபற்றி சஜித்துக்கு தகவல் கிடைத்திருப்பதாகவும், எனக்கு சொன்னார். இதன்மூலம் அந்த மாபெரும் கூட்ட செய்தியை தலைகீழாக மாற்றும் உத்தேச சதி திட்டம் அதுவாகும் என தெரிய வந்தது. இதை எப்படி ரிசாத்திடம் சொல்லி, அவரை பேசாமல் இருக்க சொல்வது என சஜித் யோசிப்பதாகவும் சொன்னார்.
உடனே நான்தான், அங்கே மேடையில் இருந்த ரவுப் ஹக்கீம், ரிசாத் ஆகியோரிடம் இதை கூறினேன். ரவுப் ஹக்கீமும் பேசாவிட்டால், நானும் பேசாமல் இருக்கிறேன் என ரிசாத் என்னிடம் கூறினார். அதன்பிறகு நான்தான் அப்படியானால் சரி, நானும் உரையாற்றாமல் இருக்கிறேன், எந்தவொரு கூட்டு சிறுபான்மை கட்சி தலைவரும் உரையாற்றவில்லை என்று போய் விடட்டும் என்று தீர்மானித்தோம்.
கூட்டம் நடைபெறும், கொழும்பு எனது தேர்தல் மாவட்டம். முழு நாடும் கேட்கும் அந்த மேடையில் பேசும் சந்தர்ப்பம் அரியது. யார் பேசினாலும், பேசாவிட்டாலும் நான் பேசியே ஆக வேண்டும் என்று நான் கூறியிருந்தால், எவரும் என்னை தடுத்திருக்க முடியாது. உண்மையில் நான் பேசுவதில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாவிட்டாலும் கூட, நான் அன்று ஒரு விட்டுக்கொடுப்பை செய்தேன். பொது நன்மை கருதி இப்படி நடந்து கொள்வது என் இரத்தத்தில் ஊறியது. ஆனால், நமது அணியில் இருக்கும் பலரின் இரத்த குரூப் வேறு.
11) ரணில், சந்திரிகா, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க போன்றோர், பிரசார பயணத்தில் இம்முறை இலகு பரப்பை (Soft Zone) தேடி, தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கு சென்றார்கள். இவர்கள் சொல்லி தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்கும் நிலையில் இருக்கவில்லை. உண்மையில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் சொல்ல முன்பேயே தமிழ், முஸ்லிம் மக்கள் தயாராகி விட்டார்கள். இதுதான் தரை உண்மை (Ground Truth). உங்களுக்கு உசிதமான சிங்கள பிரதேசங்களுக்கு சென்று சிங்கள வாக்கை தேடுங்கள் என்று பலமுறை தகவல் அனுப்பினேன். எவரும் கேட்கவில்லை. இந்த அரசியல்வாதிகளுக்கு சிங்கள மக்கள் மத்தியில் போக முடியாது என்பதுதான் உண்மை காரணம் என்றால், அவர்கள் இனி அரசியலில் இருக்கவே முடியாதே!
12) உண்மையில் சஜித் மிக கடுமையாக உழைத்தார். ஐதேகவில் ஒரு சில அமைச்சர்கள் மட்டுமே தேசியரீதியாக உழைத்தார்கள். மற்றோர் தம் வட்டத்துக்குள் நின்று விட்டார்கள். சஜித்தை முன்மொழிந்த அமைச்சர்கள் என்ற பக்கத்தையும் இடையில் காணவில்லை.
13) நானும், ஐ.தே. முன்னணியின் ஏனைய கூட்டு கட்சி தலைவர்களும் மிக கடுமையாக உழைத்தோம். எங்களது சிறுபான்மை கட்சிகளின் எம்பீக்களும் கடுமையாக உழைத்தார்கள். என்னை பொறுத்தவரை நான் நாடோடியாக நாடு முழுக்க ஓடினேன். எனது சொந்த தேர்தலுக்கு கூட நான் இப்படி ஓடவில்லை. எனக்கு அப்போது களைப்பே தெரியவில்லை. இப்போது மிகவும் களைப்பாக இருக்கிறது.
14) இறுதி இரண்டு வாரத்தில், ஐதேகவின் சில முன்னணியாளர்கள், மாற்று அணியுடன் இரகசிய கள்ள உறவு கொண்டனர். இவர்கள் வெறுக்கத்தக்க கீழ்த்தர மனித மிருகங்கள். ஒருபுறத்தில் உயிரை கொடுத்து நாம் போராடும் போது உள்ளேயே இருந்தபடி துரோகம் செய்பவர்களை என்னவென்று சொல்வது? என்ன இனம், என்ன மதம் என்றாலும் இவர்கள் ஒன்றுதான். இந்த மனிதர்களை, “நாய்கள்” என்று சொல்ல நான் விரும்பவில்லை. ஏனென்றால் “நாய்” எனக்கு பிடித்த ஒரு “மனிதன்”.
Mano Ganesan
தோல்விக்கு காரணம் சொல்லுகிறீர்.அப்படியானால் ஏற்கனவே சொல்லி இருக்கலாமே.ஐயா வெற்றி தோல்வி சகஜம் இதற்காக தனிப்பட்ட நபர்களை குறைகூற வேண்டாம்.நாளை எதுவும்மாறலாம்....
ReplyDeleteநிதானமாகத்தான் மதிப்பீடு செய்துள்ளார். உங்கள் தலையங்கம் சரியில்லை. இதனைக் தூக்கிப் பிடித்துக்கொண்டு மட்ட ரகமான கருத்துக்களைக்களை யாரும் கூறினால் அது அவர்களின் தகுதியையே காட்டும்.
ReplyDeleteமிகவும் சரியான விஷயங்கள். றிஷாத் போன்றவர்களின் பக்குவமின்மை முழு சிறுபான்மையினரையும் பாதித்துள்ளது. ஹக்கீம் பேசாமல் விட்டால் நானும் பேசாமல் இருக்கிறேன் என்று சொல்லுவது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது. இவ்வாறானவர்களை முஸ்லிம் சமூகம் வைத்திருக்கும் வரை பெரும்பான்மையினர் ஒற்றுமையை சிதைக்க முடியாது. றிஷாத்தின் மடைமைக்கு முட்டுக்கொடுக்கப் போய் அனைத்து முஸ்லீம் தலைவர்களும் பயங்கரவாதிகள் என்ற பழியைச் சுமந்து கொண்டிருக்கின்றார்கள். றிசாட்டுக்கு இது கூட புரியக்கூடிய பக்குவம் இருப்பதாக விளங்கவில்லை.
ReplyDeletede dei dubakoor, ena madri reel viduran dinosaur vayan ne sonna sila visyangal etkanave ellarum unarda nidarsanam, anal ennamo nethan king maker madri pesura dubakkor? enadu podu nanmai karudi vittu kudutiya pinne ne naye katsiyin mootha urupinar velanai veniyan veliya ponaru? ellam un panathasai, padavi asai,ippa aduta election ku evanakuvdu MAMA vela paka plan pani irukka. (your choice is pillayan party) kootani endu iduku peru vera pacha drogi..
ReplyDeleteதோலிவியில் இருந்து கற்றுக் கொண்ட சிறந்த கருத்துக்கள். மீண்டும் எழுந்து நிற்பதற்கு உதவக் கூடியவை என்பதை சிந்திப்பவர்கள் அறிந்து கொள்வார்கள்
ReplyDelete