Header Ads



தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முன், கோட்டாபயவிடம் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை

சமூர்தி உதவுத் தொகை திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை ´ஜனசவிய´ உணவு முத்திரை கூப்பன் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

வெல்லவாய நகரில் இன்று (13) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், உள்நாட்டு உணவு உற்பத்தியில் தன்னிரைவு அடைந்த அரசாங்கம் ஒன்றை உருவாக்க உள்ளதாக கூறினார். 

மேலும் கிராமம், நகரம், நாடு என்ற அடிப்படையிலேயே தமது அபிவிருத்தி பணிகள் இடம்பெறும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

குடும்ப அரசியலுக்கு எந்தவகையிலும் வாய்ப்பில்லை எனவும் மாறாக இலங்கையர்களுக்கே முதலிடம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் இலங்கை முழுவதும் தொழிற்பேட்டைகளை அமைத்து தகுதியான இளைஞர்களுக்கு தொழில்வாய்புகளை பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். 

விசேடமாக தான் ஜனாதிபதியாக தெரிவானால் இரண்டு பிரதான காரியங்களை செயற்படுத்த உள்ளதாகவும் அதற்கமைய அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் ஜனாதிபதி செயலணி பிரிவொன்றை அமைத்து மக்களின் அபிவிருத்தி குறித்து இரவு, பகலாக கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்தார். 

எந்தவித பாகுபாடும் காட்டாது ஜனாதிபதி செயலகத்தின் பணிகளை முன்னெடுப்பதாகவும், முதலீட்டாளர்களை இந்தியா, பங்களாதேஸ் நாடுகளுக்கு செல்லவிடாது தொழில்வாய்புகளை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும் 19 ஆம் திருத்தத்தின் பின்னர் பொம்மையாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் ஜனாதிபதி முறைமையின் ஊடாக முதுகெலும்புள்ள மக்கள் சேவை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

மொத்ததில் குரல் அற்ற மக்களுக்கு குரல் கொடுக்க தயார் எனவும் உலகம் வியந்து பார்க்கும் இலங்கையை கட்டியெழுப்புவதாகவும் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். 

இங்கு உரையாற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னர் தனது பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறு கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆலோசனை வழங்கினார். 

மேலும் யுத்தத்திற்கு பயந்து அமெரிக்காவுக்கு ஓடி ஒழிந்த கோட்டாபய இன்று நாட்டை ஆட்சி செய்ய மக்கள் ஆணையை கேட்பதாகவும் தெரிவித்தார். 

எவ்வாறாயினும் அனைத்து சவால்களையும் முறியடித்து சஜித் பிரேமதாச 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.