Header Ads



"அதிகாரம் கிடைத்தால் கோத்தபய எவ்வாறு, செயற்படுவார் என்று மக்கள் சிந்திக்க வேண்டும்"

“இலங்கைக் குடியுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய தப்பியிருந்தாலும் இன்னும் பல வழக்குகளில் நீதிமன்றத்துக்குப் பொறுப்புக்கூறுவதிலிருந்து அவரால் தப்பிக்க முடியாது."

இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் சுஜீவ சேனசிங்க. ஐக்கிய தேசியக் கட்சி கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான நீதித்துறைசார் விடயங்களில் தலையிடாது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று -05- சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஏனைய அரசியல் விவகாரங்கள் தொடர்பிலும் ஊடகங்கள் சுதந்திரமாகச் செயற்பட முடியும். ஆனால், வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஜனாதிபதி அல்லது பிரதமர் உள்ளிட்டோருக்கு எதிராக செய்தி வெளியிடப்பட்டால் வெள்ளை வான் கடத்தலோ, ஊடகவியலாளர்கள் கொலையோ இடம்பெறாது.

கோத்தபாய ராஜபக்சவின் இலங்கைப் பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து அவர் தப்பியிருந்தாலும் இன்னும் பல வழக்குகளில் நீதிமன்றத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டியிருக்கிறது.

தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, கோத்தபாய ராஜபக்சவின் தந்தையின் நினைவுத் தூபி விவகார பண மோசடி உள்ளிட்ட பல வழக்குகள் எஞ்சியுள்ளன. இவற்றின் காரணமாகவே மாற்றுவழிக்குத் தயார் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சமல் ராஜபக்ச கட்டுப்பணம் செலுத்தியிருக்கின்றார்.

எனினும், கோத்தபாய ராஜபக்சவுடன் தொடர்புடைய நீதித்துறைசார் விடயங்களில் ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் தலையிடாது. இவ்விடயம் தொடர்பில் எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ எமக்கு நேரடியாக அறிவுறுத்தியுள்ளார்.

நீதித்துறை சுயாதீனமாக தமது கடமையைச் செய்யும். அதில் அநாவசியமாக எமது தலையீடு இருக்காது. எனினும், மக்கள் இவை குறித்து விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

கடந்த 2010ஆம் ஆண்டு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். கோத்தபாய ராஜபக்சவைப் போன்று அவர் மீது எவ்வித கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகள் இல்லாத போதிலும், இராணுவத்தளபதியாகச் செயற்பட்டவருக்கு நாட்டின் தலைவராக முடியாது என்று தீர்மானித்து மக்கள் அவரைத் தோல்வியடைச் செய்தனர்.

அவருடன் ஒப்பிடும்போது கோட்டாபய ராஜபக்சவை எந்தளவுக்கு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று ஊகிக்க முடிகின்றது. மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அவருக்கு எதிராகச் செயற்பட்டவர்களுக்கும், செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

லசந்த விக்கிரமதுங்கவினுடைய கொலை விவகாரத்தில்கூட இவர்களது பெயரே அதிகம் அடிபடுகின்றது. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை பட்டப்பகல் வேளையிலேயே இடம்பெற்றது.

சம்பவ இடத்துக்கு நான் நேரடியாகச் சென்று பார்வையிட்டேன். லசந்த குண்டுவைத்துக் கொல்லப்பட்டதாகக் கூறினார்கள். ஆனால், அவர் அவ்வாறு கொலை செய்யப்படவில்லை. சரத் பொன்சேகா லசந்தவைக் கொலை செய்ததாக கோட்டாபய குற்றஞ்சாட்டினார்.

ஆனால், பொன்சேகாவுக்கும் லசந்தவுக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. கோட்டாபயவுடன் மாத்திரமே அவருக்கு சில முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

தன்னிடம் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் இல்லாதபோதே கோட்டாபய இவ்வாறு செயற்பட்டிருக்கின்றார் என்றால், அதிகாரம் கிடைத்தால் எவ்வாறு செயற்படுவார் என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

நாட்டில் இதே போன்றதொரு நிலைமை மீண்டும் ஏற்படுவதற்கு மக்கள் வாய்ப்பளிக்க மாட்டார்கள் என்று நம்புகின்றோம். போலியான தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருக்கும் ஒருவரை நாட்டின் தலைவராக மக்கள் தெரிவு செய்யமாட்டர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியிலிருந்து தொடர்ந்து 52 நாட்கள் அரசியல் நெருக்கடி நிலவியபோது கூட மஹிந்த தரப்பு தாம் கூறும் செய்திகளையே ஒலிபரப்ப வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது.

ஆனால், இவை அனைத்தையும் மறைத்து கோட்டாபய தன்னை அஹிம்சாவாதியாகக் காண்பிக்க முயற்சிக்கின்றார். இடியமீன், ஹிட்லர் போன்றவர்களும் மிகவும் அமைதியான அஹிம்சாவாதி போன்றே பேசுவார்கள்.

ஆனால், உண்மையில் அவர்களின் குணம் எவ்வாறு இருந்தது என்பதை மக்கள் நன்கு அறிவர். அதேபோன்று கோத்தபாய யார் என்பது பற்றியும் மக்கள் நன்கு அறிவார்கள்.

எவ்வாறிருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மீது இவ்வாறான எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. மாறாக அவரால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப்பணி, ஒழுக்கம், விசேடமாக மக்களின் அன்பு என்பவையே அவரின் பலமான பின்புலமாகக் காணப்படுகின்றன.

எனவே, கோத்தா - சஜித் இருவரையும் மனதால் அல்லாமல் அறிவைப் பாவித்து ஒப்புநோக்கி சிறந்த தலைவரை மக்கள் தெரிவுசெய்ய வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

நாட்டில் யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம். ஆனால், உரிய ஆதாரங்களுடன் முறையாக அதனைச் செய்ய வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மீது கூட வழக்குத் தொடரலாம்.

ஆனால், அதனை ஆதாரத்துடன் உறுதிப்படுத்த முடியுமா என்று சிந்திக்க வேண்டும். நீதிமன்றம் ஆதாரத்தைக் கோரினாலும் மக்கள் உண்மை என்ன என்பதை அறிவார்கள். கோத்தபாய ராஜபக்ச விவகாரமும் இது போன்றதே.

ராஜபக்சக்கள் ஸ்ரீலங்கன் விமான சேவையை தமது தனிப்பட்ட சொத்து போன்று பாவித்தமையால் அரசுக்கு சுமார் 450 பில்லியன் நட்டம் ஏற்பட்டது.

இது அனைவரும் அறிந்த விடயம் என்றாலும் மஹிந்த ராஜபக்ச பணமோசடி செய்துள்ளார் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என்பதே எமது கேள்வியாகும்.

எனவே, ஆதாரத்தை மறைத்துப் பல குற்றங்கள் செய்துள்ள ராஜபக்சக்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமா? அதிகாரம் அவர்களுக்குக் கிடைத்தால் நாட்டின் நிலைமை என்னவாகும் என்பது அனைவரும் அறிந்த விடயமே.

எனவே, மீண்டும் ஒருபோதும் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது என்று எம்மால் உறுதியாகக் கூற முடியும்" - என்றார்.

No comments

Powered by Blogger.