Header Ads



ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபயவை மாற்றும் முயற்சியை சு.க. கைவிட வேண்டும்

(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை மாற்றி தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என சுதந்திர கட்சியினர்  முன்னெடுக்கும் முயற்சிகளை திருத்திக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பரந்துப்பட்ட கூட்டணியின் ஊடாக  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், சுதந்திர கட்சியும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் எதிரணியினர் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றோம். ஆனால்  சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினர் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதை பிரதான இலக்காக கொண்டுள்ளார்கள்.

பொதுஜன பெரமுனவின்  ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபய ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.எதிரணியின் தேசிய மாநாடுகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரை மாற்றி தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சிகளை சுதந்திர கட்சி மறைமுகமாக முன்னெடுத்து வருகின்றமை அவதானிக்க முடிகின்றது.

 உத்தேச ஜனாதிபதி தேர்தலில்   ஐக்கிய தேசிய கட்சிக்கும்,  பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலே பிரதான போட்டி காணப்படும்.சுதந்திர க்சி எம்முடன் இணைந்து இணக்கமாக செயற்பட வேண்டும் என்பதே பிரதான எதிர்பார்ப்பாக  காணப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியிடம் நாட்டு மக்கள் இனியொரு போதும் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கமாட்டார்கள் என்றார்.

No comments

Powered by Blogger.