Header Ads



திருமணம் நடக்கும்வரை பொருத்திருக்க வேண்டாமா..? பொதுஜன பெரமுனவிடம் கேட்கிறார் தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைக்குமாயின் நிபந்தனைகளை பாதுகாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த எவராலும் முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணியை ஏற்படுத்துவது எப்படி. அனைத்து இடதுசாரிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதை கிராமத்தில் உள்ளவர்கள் எதிர்பார்ப்பு. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதனை மீண்டும் இணைக்க முயற்சிக்கின்றனர். மீண்டும் இணைப்பது மிகவும் சிரமமானது.

சம்பிக்க ரணவக்கவின் கட்சியையும் உதய கம்மன்பிலவின் கட்சியையும் இணைப்பது எவ்வளவு சிரமமோ அது போன்றே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் பொதுஜன பெரமுனவையும் இணைப்பது சிரமமானது.

மக்கள் விடுதலை முன்னணியையும் தேசிய சுதந்திர முன்னணியையும் இணைக்க முடியாது போன்றே இந்த இரு கட்சிகளையும் இணைக்க முடியாது. கட்சிகள் பிளவுபட்டால் இதுதான் பிரச்சினை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பொதுஜன பெரமுனவினர், காலையில் இருந்து மாலை வரை சுதந்திரக் கட்சியை திட்டுகின்றனர். நாங்கள் அப்படி செய்வதில்லை. நான் உண்மையே பேசுவேன்.

உண்மையை பேசும் போது திட்டுகின்றனர். கூட்டணியை ஏற்படுத்த இறுதியாக நாங்கள் பசில் ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் பேசினோம். திருமணம் முடிவாகி, நடக்க போகும் நேரத்தில் மணமகளை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகினால், அந்த திருமணம் நடக்குமா?.

எஸ்.பி.திஸாநாயக்கவையும் டிலான் பெரேராவையும் பொதுஜன பெரமுனவில் இணைத்துக்கொண்டு அங்கத்துவத்தை வழங்கினர். திருமணம் நடக்கும் வரை பொருத்திருக்க வேண்டாமா?.

திருமணம் நடக்கும் முன்னர் மணமகளை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதை போன்றது இந்த நடவடிக்கை. அப்படி செய்யும் எமக்கு வலிக்காதா?. இந்த பக்கம் எம்முடன் பேசிக்கொண்டு மறுபக்கமாக எமது கட்சியினரை தமது கட்சியில் இணைத்துக்கொள்கின்றனர்.

இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க முயற்சிக்கின்றனர் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியாதா?. நாங்கள் முட்டாள்கள் என நினைத்தார்களா?.

நாங்கள் இருக்கின்றோம் பயப்பட வேண்டாம். அவர்களும், நாங்களும் இணைய வேண்டுமாயின் நிபந்தனைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.