Header Ads



ஆனந்தசங்கரியின் தாராள மனசு - தனது 20 ஏக்கர் காணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்கிறார்

சுதந்திர புரம் பகுதியில் அமைந்துள்ள தனக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியை மக்களிற்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வீ.ஆனந்த சங்கரி பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சுதந்திர புரம் பகுதியில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரிக்கு சொந்தமான காணியையே இவ்வாறு மக்களிற்குப் பகிர்ந்தளிக்கப் பிரதேச செயலாளரிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த காணியில் 1988ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியிலிருந்து சுமார் 20 குடும்பங்களிற்கு மேல் வாழ்ந்து வருகின்றன. எனினும், குறித்த காணியின் உரிமம் அவர்களிற்குக் கிடைக்காமையினால் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

குறித்த காணியில் மக்கள் குடியிருக்கின்றமையை அறிந்த வீ.ஆனந்த சங்கரி இதுவரை குறித்த காணியை மீளப் பெற்றுத்தருமாறு அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருக்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் குறித்த காணியில் குடியமர்ந்துள்ள மக்கள் வீ.ஆனந்த சங்கரியைச் சந்தித்துப் பாதிக்கப்பட்ட தமக்குப் பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இவ்விடம் தொடர்பில் பிரதேச செயலகத்திற்கு வீ.ஆனந்த சங்கரி காணியை மக்களிற்குப் பகிர்ந்தளிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த மக்கள் வேறு காணிகள் இன்றி எனது காணியில் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் சட்ட ரீதியாகக் குறித்த காணியில் ஆட்சி செய்யாவிடினும் அவர்களின் பாதிப்பு நிலையைத் தான் உணர்வதாகவும் வீ.ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் எனது காணியில் குடியிருக்கும் மக்களில் ஒரு பகுதியினர் தன்னை சந்தித்து காணிகளைப் பகிர்ந்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அவர்களின் இந்த துன்பமான நிலையில் வேறு இடங்களிற்கு அனுப்பி காணியைப் பெற்றுத்தரக் கோரும் மனநிலை எனக்க இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், எனக்குச் சொந்தமானதெனக் குறித்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள காணியை, அங்குக் குடியிருக்கும் மக்களிற்கே வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிற்கு ஆனந்த சங்கரி ஆலோசனை வழங்கியுள்ளார்.

காணி அற்றோர்கள் என உண்மையாக அடையாளம் காணப்படும் நபர்களிற்கே குறித்த காணியை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் கோரியுள்ள ஆனந்த சங்கரி, அடையாளம் காணும் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் கோரியுள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் எழுத்து மூலமான ஆவணத்தை ஓரிரு நாட்களில் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் பிரதேச செயலாளரிற்கு தெரிவித்துள்ளார். மக்களின் நிலையை உணர்ந்து எனக்குரித்தானது என கூறப்படும் குறித்த காணியைப் பகிர்ந்தளிக்க முன்வந்துள்ள நிலையில், அங்கு குடியமர்ந்துள்ள மக்களிற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் பிரதேச செயலாளரிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.