Header Ads



“நான் இன வெறியாளர் அல்ல” - தனது பேச்சுகளுக்காக வருத்தம் தெரிவித்தார் ஜாகிர் நாயக்

தாம் ஒரு இன வெறியாளர் அல்ல என்றும், அண்மைய தமது பேச்சுக்கள் யார் மனதையேனும் புண்படுத்தி இருப்பின் அதற்காக வருந்துவதாகவும் மத போதகர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, சமூகத்தையோ வருத்தமடையச் செய்வது தமது நோக்கம் அல்ல என்றும், அப்படிப்பட்ட செயல்பாடு இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் செவ்வாய்க்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது எதிர்ப்பாளர்கள் தாம் பேசியதில் இருந்து குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் தேர்வு செய்து திரித்து, விந்தையான முறையில் கட்டுக்கதையாக்கி இருப்பதாகவும் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.

115 புகார்கள்; 10 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த விசாரணை

மலேசிய இந்துக்கள், இந்தியர்கள், மலேசியவாழ் சீனர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஜாகிர் நாயக் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து மலேசியா முழுவதும் அவர் மீது 115 புகார்கள் காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ளன.

இதனால் கடந்த வெள்ளிக்கிழமையும், திங்கட்கிழமையும் மலேசிய போலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். திங்கட்கிழமை அன்று மட்டும் மாலை 3 மணியளவில் துவங்கிய விசாரணை, சுமார் பத்து மணி நேரத்துக்கும் மேலாக நீண்டது.

இதையடுத்து ஜாகிர் நாயக் நாடு முழுவதும் பொது நிகழ்ச்சிகளில் பேச தடை விதிப்பதாக மலேசிய காவல்துறை அறிவித்துள்ளது. முன்னதாக, மலேசியாவில் உள்ள சில மாநிலங்களும் அவர் பொது நிகழ்ச்சிகளில் பேச தடை விதித்தன.

"உலகில் அமைதியைப் பரப்புவதே எனது நோக்கம்"

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், ஜாகிர் நாயக் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி உள்ளார்.

உலகம் முழுவதும் அமைதியை பரப்புவதே தமது நோக்கமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், அந்த நோக்கத்தைச் செயல்படுத்த விடாமல் தமது எதிர்பார்ப்பாளர்கள் தடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

"கடந்த சில தினங்களாக இனவாதம் குறித்து நான் பேசியதாக குற்றம்சாட்டப்படுவதை கவனித்திருப்பீர்கள். எனது எதிர்ப்பாளர்கள் நான் பேசியதில் இருந்து குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றுடன் விந்தையான கட்டுக்கதைகளைச் சேர்த்துள்ளனர்," என்று ஜாகிர் நாயக் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது கருத்துக்கள் இஸ்லாமியர் அல்லாதவர்களை, தாம் ஒரு இனவெறியாளர் என்று நினைக்க வைத்திருப்பது வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தம்மால் காயப்பட்டதாக கூறுபவர்கள் இதுவரை தமது உரையை கேட்டதே இல்லை என்பது கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

"இனவெறி எனும் தீய விஷயத்தை குர் ஆன்னில் குறிப்பிட்டதைப் போல் நான் கடுமையாக எதிர்க்கிறேன். ஒரு மத போதகராக இனவெறிக்கு எதிரான அனைத்தையும் செய்கிறேன்.

"மலேசியர்கள், குறிப்பாக இஸ்லாமியர் அல்லாதவர்கள் எனது உரைகளைக் கேட்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த வேளையில் எனக்கு ஆதரவாக இருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று ஜாகிர் நாயக் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சுமார் 10 மணி நேரம் நீடித்த விசாரணையை அடுத்து, திங்கட்கிழமை நள்ளிரவுக்கு மேல் கோலாலம்பூரில் உள்ள மலேசிய காவல்துறை தலைமையகமான புக்கிட் அமானில் இருந்து புறப்பட்டுச் சென்றார் ஜாகிர் நாயக்.

இதையடுத்து அவர் நாடு முழுவதும் பொது நிகழ்ச்சிகளில் பேசிய தடை விதிக்கப்பட்டுள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இன நல்லிணக்கத்தை பேணும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாகிர் நாயக் இனவாத அரசியலைத் தொட்டுப் பேசியதன் மூலம் எல்லைமீறி விட்டதாக மலேசிய பிரதமர் துன் மகாதீர் மொஹமத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜாகிர் நாயக்கின் அறிக்கை வெளியாகி உள்ளது. இதன் மூலம் அவரை மையப்படுத்தி எழுந்துள்ள சர்ச்சையின் வீச்சு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:

  1. தனது இனவாதி-மதவெறி பேச்சுகளை சீனரகளிடமும் இந்தியர்களிடமும் காட்டி மூக்குடைந்தார்

    ReplyDelete
  2. அஜான் உங்களைவிட ஜாகிர் நாயக் மோசமான இனவாதியல்ல

    ReplyDelete

Powered by Blogger.