Header Ads



ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் எதிர்பார்ப்பு உள்ளது, இது நியாயமான எதிர்பார்ப்பு

ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் வேட்பாளரை தெரிவு செய்ய முடியாமல் ராஜபக்ச குடும்பம் முட்டி மோதிக்கொள்வதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், கட்சியின் இளைஞர் முன்னணியில் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக எந்த பிரச்சினையும் இல்லை. தகுதியான, திறமையான, வெற்றி பெற கூடிய வேட்பாளர் கட்சிக்குள் இருக்கின்றார்.

அத்துடன் எமது இளைஞர் அமைப்பின் வலையமைப்பு செயற்பாட்டு மட்டத்தில் இருக்கின்றது. தேர்தல் நடக்கும் போது அது மேலும் விரிவுப்படுத்தப்படும்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தற்போது பெரிதாக பேசப்பட்டு வருகிறது. எமது நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாசவின் பெயர் முன்வைக்கப்பட்டது.

எனினும் அது ஆரம்ப கட்ட பேச்சு மாத்திரமே. கட்சிக்குள் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் பெயர்கள் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டியவர்களின் பட்டியலில் உள்ளது.

இது குறித்து கட்சிக்குள் கலந்துரையாடி சிறந்த வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார். திடீரென தீர்மானிக்க முடியாது. ஜனாதிபதி யார், பிரதமர் யார் என்பது குறித்து நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் எதிர்பார்ப்பு உள்ளது. இது நியாயமான எதிர்பார்ப்பு. எனினும் கட்சியின் செயற்குழுவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுமே தீர்மானிக்கும். இந்த தீர்மானம் ஒரு குடும்பத்திற்கு வரையறுக்கப்படாது. கட்சியில் உள்ள அனைவரும் கூட்டாக தீர்மானம் எடுக்கப்படும்.

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் ராஜபக்ச குடும்பங்களுக்கு இடையில், பாரிய மோதல் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 11 ஆம் திகதி கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனக் கூறப்பட்டாலும் அது குறித்து எமக்கு சந்தேகம் உள்ளது. அதேபோல் அவர்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன.

மக்கள் ஒரு குடும்பத்தின் அரசியலை விரும்பவில்லை. ஒரு சகோதரர் ஜனாதிபதி மற்றுமொரு சகோதரர் பிரதமர் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாரில்லை.

அவர்கள் தமது பிரதமர் வேட்பாளரை பெயரிட வேண்டும். எமக்கு ஒரு குடும்பத்திற்குள் வரையறுக்காமல் ஜனாதிபதி வேட்பாளரும் இருக்கின்றனார். பிரதமர் வேட்பாளரும் இருக்கின்றார் எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.