Header Ads



முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் இனவாத, அமைப்புக்கு வழங்கிவரும் பொய்யான தகவல்கள்

இலங்கையில் முஸ்லிம் சிறார்களுக்கு அல் குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் அல் குர்ஆன் மத்ரஸாக்களைப் பொது பல சேனா அமைப்பு அடிப்படை வாதத்துடன் இணைத்து குற்றம் சாட்டியுள்ளது. அவ்வமைப்பு வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக (18.06.2019) வீரகேசரியில் செய்தி வெளியடப்பட்டிருந்தது.

அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ள குற்றச் சாட்டுக்கள் உண்மைத் தன்மை கொண்டவை அல்ல என்பதுடன், மக்தப் மத்ரஸாக்களின் பாடத் திட்டத்தையோ அதன் நோக்கத்தையோ  தெளிவாக அறியாத முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலரே இவ்வாறான பிழையான கருத்துக்களையும் தகவல்களையும் தொடர்ந்தும் மேற்படி இனவாத அமைப்புக்கு வழங்கி வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

உண்மையில் மேற்படி மத்ரஸாக்கள் பாக்கிஸ்தான் அடிப்படை வாதத்தைப் போதிப்பவை என்பது இட்டுக்கட்டப்பட்ட அவதூறாகும். பாரம்பரிய முஸ்லிம் பள்ளிவாசல்களிலேயே மேற்படி மக்தப்கள் நடைபெறுகின்றன. இது வஹாபிஸத்தையோ அடிப்படை வாதத்தையோ எந்த வகையிலும் போதிக்கவில்லை. பாரம்பரிய முஸ்லிம்கள் என்று பொது பல சேனா எவர்களைச் சுட்டிக்காட்டுகின்றது என்பதை தெளிவாகச் சொல்ல வேண்டிய கடமை அதற்குண்டு.

முஸ்லிம் சிறார்கள், ஏனைய மதச்சிறார்கள் தமது சமயக் கல்வியை தமது மதஸ்தளங்களில் கற்றுக் கொள்வதைப் போன்று, அல் குர்ஆனைக் கற்றுக் கொள்வதற்கான ஒரு சிறந்த முயற்சியே மக்தப் பாடத் திட்டமாகும். இதனால் மாணவர்களிடத்தில் ஆத்மீக வலுமை காணப்படுகின்றது. நற்பண்புகள் மேலோங்கி வருகின்றன. அதனால் அவர்கள் எதிர் காலத்து நற்பிரஜைகளாகவும் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் நலன் செய்யக்கூடியவர்களாகவும் உருவாக்கப்படுகின்றனர் என்பதே யதார்த்தமாகும்.

பாரம்பரிய முஸ்லிம் பள்ளிவாசல்களில் எத்தகைய ஆடையை வேண்டுமானாலும் அணிந்து, இலவசமாகக் கற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்த தஃலீமுல் குர்ஆன் கல்வி முறையை உலமா சபைத் தலைவர் தடை செய்துள்ளார் என்று மற்றுமொரு வீண் பலி சுமத்தப்பட்டுள்ளது.

பாரம்பரிய முஸ்லிம் பள்ளிவாசல்கள் என்று வேறுபடுத்தப்பட்ட பள்ளிவாசல்கள் இருப்பதாக நாம் காணவில்லை, மாறாக எல்லாப் பள்ளிவாசல்களும் முஸ்லிம்கள் தொழுவதற்காகப் பயன்படுத்தப்படும் இடங்களாகவே பொது முஸ்லிம் சமூகம் நோக்குகின்றது. அப்பள்ளிவாசல்களிலேயே மக்தப்கள் நடைபெறுகின்றன.

உலமா சமை எந்தக் கல்வி முறையையும் எப்போதும் தடை செய்ததும் கிடையாது, கட்டாயப்படுத்தியதும் கிடையாது. இன்று வரை விரும்புவோர், தஃலீமுல் குர்ஆன் மற்றும் தத்ரீஸுல் குர்ஆன் போன்றவற்றைக் கற்றுக் கொள்கின்றனர். இன்று வரை அது பல இடங்களில் அமுலில் உள்ளது. அவரவர் விரும்பும் ஆடையை அணிந்து செல்கின்றனர். தஃலீமுல் குர்ஆன் போன்றவற்றைக் கற்றுக் கொள்வதை எவரும் எப்போதும் தடை விதித்தது கிடையாது. 

மாறாக,  ஒருமுகப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் ஒன்று  தேவை என்பதை சமூக ஆர்வளர்கள் நீண்ட நாட்களாக உணர்ந்து கொண்டிருந்த போதுதான், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இப்பாடத் திட்டத்தினை நாடு முழுவதிலுமுள்ள பல பள்ளிவாசல்கிளேயே முதன் முதலில் அறிமுகம் செய்து, பலருக்கும் இது பற்றிய பூரணமான தெளிவு கொடுக்கப்பட்டது. அதன் பின்;னர் சிறிது சிறிதாக நாடு முழுவதும் மக்களின் ஆதரவுடனும், வேண்டுதலுடனுமே ஆரம்பிக்கப்பட்டன.

நான் அறிந்த வரையில் இந்தியாவில் இருந்தும், தென்னாபிரிக்காவில் இருந்துமே இதற்கான முன்மாதிரிகள் பெறப்பட்டன. பாகிஸ்தானுக்கும் இப்பாட நெறிக்கும் எவ்வகையான தொடர்பும் கிடையாது.

அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பாரம்பரிய முஸ்லிம்களை சமூகத்தில் இருந்து பிரித்து சமூகப் பிளவை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உண்மையில் சமூகத்தில் காலூன்றியுள்ள சமூகப் பிளவுகளை களைவதற்கு ஜம்இய்யத்துல் உலமா பாரியளவிளலான நிகழ்ச்சித் திட்டங்களை தேசிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றமை எவராலும் மறுக்க முடியாத ஒரு பேருண்மையாகும். 

சான்றாக, 'சமூக ஒற்றுமை காலத்தின் தேவை சன்மார்க்கக் கடமை' 'சமூக ஐக்கியம்' போன்ற நூல்கள் வெளியிட்டு சமூகங்களுக்கடையில் பிளவுகள் உண்டாவதைக் கட்டுப்படுத்த உச்சகட்ட முயற்சியை ஜம்இய்யா செய்து கொண்டிருக்கிறது எனலாம். 

அடுத்த குற்றச்சாட்டு கட்டணம் அறவீடு செய்து இதன் மூலமாக உலமா அமைப்பிற்கு மாதாந்தம் மில்லியன் கணக்கான நிதி வருமானம் பெறப்படுவதுடன், அந்நிதி எதற்காக உபயோகப் படுத்தப்படுகின்றது என்ற பாரிய சந்தேகம் சமூகத்தின் மத்தியில் எழுந்துள்ளது என்பதாகும்.

இக்குற்றச்சாட்டாதனது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் தமக்கிருக்கும் வேண்டா வெருப்பையே காட்டுகின்றது.

மாணவர்களிடம் பெறப்படும் நிதியானது மக்தப் மத்ரஸாவில் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்;களுக்கான கொடுப்பனவு, மேற்பார்வையாளர்களுக்கான கொடுப்பனவு, காரியாலய செலவு, நிர்வாகக் கொடுப்பனவுகள் போன்ற செலவினங்கள் உள்ளமையினால் அவற்றை மேற்படி அறவீடுகளில் இருந்தே நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மக்தப்கள் இருக்கின்றன என்பது முழு முஸ்லிம் சமூகத்திற்கும் தெரிந்த பரகசிய உண்மையாகும். இந்நிதியில் இருந்து எதுவும் ஜமஇய்யாவுக்குக் கிடைப்பதில்லை. எனவே, சமூகத்தின் மத்தியில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

நாட்டில் பல்வேறு கல்வி நிறுவணங்கள் செயற்படுகின்றன. அவை எவற்றிலும், இலவசமாக எச்சேவையையும் எவரும் எதிர்பார்ப்பதில்லை, காரணம் மேற் சொல்லப்பட்ட பல் வேறுபட்ட செலவினங்கள் உள்ளன என்பதால். அது போன்று மக்தப்களும் எந்தக் கட்டணங்களும் இல்லாது செயற்படுவது சாத்தியமற்றதாகும்.

அஷ் ஷைக் நாகூர் ளரீஃப்


No comments

Powered by Blogger.