Header Ads



இலங்கையின் எந்தச் சட்டத்தில் 'சாரி அல்லது ஒசாரி' மரபு ஆடை எனும் ஆதாரம் உள்ளது...?

 By : அபூ அத்னான் 

பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் கடந்த 2019.05.29 ஆம் திகதி “அரசாங்க அலுவலகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்” எனும் தலைப்பில் 13/2019 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கை ஒன்று வெளி விடப்பட்டது யாவரும் அறிந்ததே.

இது முஸ்லிம் பெண்களினை பாதித்திருக்கிறது என்பது அனேகரின் கருத்தாகும். ஏனெனில், பாராளுமன்றத் தெரிவுக் குழு விசாரணையில் அமைச்சின் செயலாளரிடம் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் வெளிப்படையாகவே இதனைக் கேட்டிருந்தார்.

சட்டவல்லுனரான பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் கடும் தொனியில் தனது கேள்விகளைத் தொடுத்திருந்தார். குறித்த விசாரணையின் பொது செயலாளரின் உடல் மொழி, விடை பகர்ந்த பாங்கு என்பன அவ்வளவு திருப்திகரமானதாக இருக்கவில்லை.

செயலாளரிடம் மேலும் சில கேள்விகள்.

1.     ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் நடத்தியவர்கள் என்ன ஆடை அணிந்திருந்தார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொடுத்த வினாவுக்கு உங்களுக்குத் தெரியாது எனக் கூறினீர்கள். “அரசாங்க அலுவலகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்” எனும் தலைப்பில் சுற்று நிருபம் வெளியிட்ட பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள், பாதுகாப்பு தொடர்பில் முழுமையாக ஆராய்ந்தல்லவா அதனை வெளியிட்டிருக்க வேண்டும். அடிப்படை கூட இல்லாமல் இதனை ஏன் இதனை செய்தீர்கள் ?

2.     மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யாமல் உங்களுக்கு முறைப்பாடு செய்ய வேண்டும் எனக் கூறினீர்கள். உயர் நீதி மன்றத்தில் வழக்கிடுவதோ அல்லது மனித உரிமைகள் ஆணைக்குழுவிடத்தில் முறைப்பாடு செய்வதோ ஆட்சித்துறை அல்லது நிர்வாக நடவடிக்கை மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டமை அல்லது உடனடியாக மீறப்பட உள்ளமை தொடர்பிலாகும். உங்கள் மூலம் மீறப்பட்ட அடிப்படை உரிமைக்கு உங்களிடத்தில் எப்படி முறைப்பாடு செய்வது ?

3.     இதில் 1989.02.01 ஆந் திகதிய சுற்றறிக்கையை (8/89) குறிப்பிட்டீர்கள். அந்த சுற்றறிக்கையில் ஆண்களின் ஆடை பற்றி மட்டுமே கவனம் செலுத்தப்படுள்ளது. அப்படியிருக்க நாடு முழுவதும் பின்பற்றப்படப் போகும் சுற்று நிருபம் தொடர்பில் நீங்கள் வினாக்கொத்து வழங்கி தகவல் திரட்டி ஆராய்ந்திருக்க வேண்டும். அதுவே இயற்கை நீதியாகும் (Natural Justice). பொறுப்பான பதவியில் இருந்து இப்படி அவசரப் படலாமா ?

4.     மனித உரிமைகள் ஆணைக்குழு உங்களது சுற்று நிருபத்தை இரத்துச் செய்யக் கோரி 2019.06.03 ஆம் திகதி விரிவான கடிதமொன்றை அனுப்பியுள்ளது. தாங்கள் இதனைப் பின்பற்றப் போவதில்லையென பிரதமர் அலுவலகம் உங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. ஒரு சுற்று நிருபம் தொடர்பில்,  அது வெளியிடப்பட்டு இரண்டு வாரங்களில் பாராளுமன்றத் தெரிவுக் குழு முன்னிலையில் விசாரணை செய்யப்பட்ட முதலாவது செயலாளர் என்ற நிலையை அடைந்திருக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் தவறிழைத்திருப்பது உங்களுக்கு  புரியவில்லையா ?

5.     மேலைத்தேய நாடுகள் வானளாவ வளர்ந்து உச்சம் தொட்டு விட்டார்கள். அவர்கள் ஆடை தொடர்பில் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. அப்படியிருக்க “சாரி அல்லது ஒசாரி” அணிவதைக் கட்டாயமாக்கி இருக்கிறீர்கள். இலங்கையின் எந்தச் சட்டத்தில் அல்லது எந்த ஒழுங்கு விதியில் அல்லது ஏதாவது ஒரு ஆவணத்தில் “சாரி அல்லது ஒசாரி” இலங்கையின் கலாச்சார அல்லது மரபு ஆடை அல்லது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஆடை எனும் படியான ஆவண ஆதாரம் தாங்களிடம் உள்ளதா ?

எப்படி இருப்பினும், காலச்சக்கரம் மிக வேகமானது. மிகவும் அசாத்தியமானது. மிகவும் வினோதமானது. பொறுத்திருந்து பார்ப்போம்.

2 comments:

  1. பொல்லைக் கொடுத்து அடி வாங்குற மாதிரி இருக்கு இந்த ரட்ணசிறி ஐயா பார்த்த வேலை.

    ReplyDelete
  2. குய்ப்ப்பிட்ட அமைச்சின் செயலாளர் ஒரு இனவாதி என்பது அவருடைய செயல்பாட்டிலிருந்து விளங்குகிறது.
    Naseer

    ReplyDelete

Powered by Blogger.