Header Ads



மோப்ப நாயுடன், பள்ளிவாசலில் தேடுதல் - மக்கள் எதிர்ப்பு


- பாறுக் ஷிஹான் -

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 2 துப்பாக்கி 2 வாள்கள்  6 றம்போ கத்திகள் மீட்கப்பட்டுள்ளன.

அதிகாலை முதல் இரகசிய தகவல் ஒன்றை அடுத்து நற்பிட்டிமுனை பகுதியில் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை  இராணுவம் பொலிசாருடன் இணைந்து மேற்கொண்டிருந்தது.இதன் போது வீடுகள் பல சல்லடை போட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஒருவரது வீடும் தேடுதலுக்குள்ளானது.பின்னர் குறித்த பகுதியில்  வீடு ஒன்றில் இருந்து மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் மேற்கொண்டவர் என அடையாளப்படுத்தப்பட்ட  ஒருவரது வீட்டில் இருந்து இரு வாள்கள் 6 ரம்போ கத்திகள் குர்ஆன் பிரதிகள் என்பன  மீட்கப்பட்டன.இவ்வாறு பொருட்கள் மீட்கப்பட்ட போதிலும் சந்தேக நபர் வீட்டில் இருக்கவில்லை.ஆனால் விசாரணைக்காக அந்த வீட்டில் இருந்த இரு பெண்களை கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு  அழைத்து செல்லப்பட்டனர்.

இதே வேளை கம்முனைக்குடி ஹூதா திடலுக்கு அருகாமையில் உள்ள கல்முனை 8 இல் அமைந்துள்ள கடற்கரை வீதியில் கைவிடப்பட்டிருந்த ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது.விசேட தகவல் ஒன்றை பெற்ற இராணுவ அணி ஒன்று அப்பகுதியில் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்ட நிலையில் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.மீட்கப்பட்ட துப்பாக்கியானது பாதுகாப்பாக பொலித்தீனினால் சுற்றப்பட்டு கிறீஸ் பூசப்பட்டிருந்தது.

மேலும் கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட பகுதியில் கல்முனை பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மதியம்  சொட்கண் ரக துப்பாக்கியின் பாகம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.இயங்கு நிலையில் காணப்பட்ட இத்துப்பாக்கி பாகத்தினை அவ்விடத்திற்கு கொண்டு வந்தவர் தொடர்பாக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதே வேளை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் கடற்கரை   வீதி பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினை மோப்பநாய் உதவியுடன் தேடுதலை மேற்கொண்டிருந்தனர்.ஆனால் அங்கு எந்த சந்தேகத்திற்கிடைமாக பொருளும் அகப்படாமையினால் மக்களின் சிறு எதிர்ப்புடன் திரும்பி சென்றனர்.

மேற்குறித்த தேடுதல் நடவடிக்கை யாவும் அதிகாலை  4.30 மணி முதல் பின்னேரம் 3 மணி வரை இடம்பெற்றிருந்தது.

இத்தேடுதலில் நூற்றுக்கணக்கான படையினர்   பங்கேற்றதுடன் கனகர வாகனங்களும் வந்து   குவிக்கப்பட்டிருந்தன்.

மேலும்   நாளையும்  பல்வேறு பகுதிகளிலும்   தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இராணுவம் தெரிவித்தது.

No comments

Powered by Blogger.