Header Ads



இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால், 9 வயது சிறுவனின் உயிர்போனது

வேறு நோயாளிக்கு ஏற்ற வேண்டிய இரத்தத்தை தனது மகனுக்கு மாற்றி ஏற்றியதால் அவர் உயிரிழந்து விட்டதாக மட்டக்களப்பில் தந்தையொருவர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அண்மையில் உயிரிழந்த ஏறாவூர் - வந்தாறுமூலை, பலாச்சோலையை சேர்ந்த ஒன்பது வயது சிறுவனின் தந்தையே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குணமடைந்த சிறுவன் திடீரென நோய்வாய்ப்பட்டதால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் சிறுவனின் சிறுநீரக பகுதியில் கசிவு ஏற்பட்டுள்ளது என வைத்தியர்கள் தெரிவித்ததாக தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பின்னர் கடந்த 17ஆம் சிறுவன் அசைவற்ற நிலையில் காணப்பட்டமையை அவதானித்த நிலையிலேயே அவருக்கு தவறான முறையில் இரத்தம் ஏற்றப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் உயிரழந்த சிறுவனின் தந்தை மேலும் கூறுகையில், விபத்தில் காயமடைந்த எனது மகனுக்கு இரத்தம் வழங்கப்பட வேண்டிய தேவை இருக்கவில்லை.

எனினும் வேறு நோயாளிக்கு ஏற்ற வேண்டிய இரத்தம் எனது மகனுக்கு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் சிறுநீரகத்தில் ஏற்பட்ட பாதிப்பால் மகன் உயிரிழந்துள்ளார்.

இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் மகன் மரணித்துள்ளார் என பொலிஸாரிடம் அறிக்கை வழங்கியுள்ளதாக பிரேத பரிசோதனையின் பின் சட்ட வைத்திய அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

எனவே எனது மகனின் உயிரிழப்பு தொடர்பில் தகுந்த நியாயம் வழங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இதேவேளை சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.