Header Ads



முஸ்லிம் புத்திஜீவிகளை கொன்றொழிக்கும் புலிகளின் திட்டத்தில், முதலில் ஷஹீதாக்கப்பட்ட அரச அதிபர் MM. மக்பூல்

- பரீட் இக்பால் -

யாழ்ப்பாணம் சோனகத் தெருவில் ஒரு சாதாரன குடும்பமான மீரான் மொஹிதீன் செய்த்தூன் தம்பதியினருக்கு 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி மக்பூல் பிறந்தார். மக்பூல் தனது இளமைக் கல்வியையாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியில் கற்றார். குடும்பக் கஷ்டம் காரணமாக ஆசிரியர் தொழில் கிடைத்தால் போதும் என்று கல்வியைத் தொடராமல் இடை நடுவில் பாடசாலைக்குச் செல்வதைமக்பூல் நிறுத்திவிட்டார். 

இதனை அறிந்த வைத்தீஸ்வரா கல்லூரி ஆசிரியரும் மீரானியா கல்லூரி அதிபருமான மீரானியா ஆலிம்ஷா என்றழைக்கப்பட்ட மௌலவி ஓ.எம். அப்துல் றஸ்ஸாக் (ஜமாலி) அவர்கள் மக்பூலைச் சந்தித்து கல்வியைத் தொடர முயற்சி எடுத்தார். மீரானியா ஆலிம்ஷா தனது ஜுப்பா தைப்பது அந்தக் காலத்தில் கே.கே.எஸ். வீதியில் முட்டாஸ் கடைச் சந்தியில்தான். மக்பூலின் தாய் மாமனான மொஹமட் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் கடையில்தான் மீரானியாஆலிம்ஷா,மொஹமெட் சுல்தான் அப்துல் காதரை தையல் கடையில் சந்தித்து உங்கள் மருமகன் மக்பூல் பாடசாலைக்கு வருவதை ஏன் நிறுத்திவிட்டான்? என்று கேட்டார். அப்போது மொஹமெட் சுல்த்தான் அப்துல் காதர் மீரானியா ஆலிம்ஷாவை நோக்கிப் படித்து முடித்துவிட்டேன் ஆசிரியர் தொழில் கிடைக்கும் என்று கூறினான் என்று பதிலளித்தார். உடனே ஆலிம்ஷா மொஹமெட் சுல்த்தான் அப்துல் காதரிடம் மக்பூலை ஒரு முறை தன்னை வந்து சந்திக்கும் படி கூறினார். மக்பூல் மீரானியா ஆலிம்ஷாவை மீரானியா கல்லூரியில் சந்தித்தார்.

படித்து முடித்துவிட்டேன் என்று உனது வீட்டில் சொன்னதாக மாமா மூலம் கேள்விப்பட்டேன் உண்மையா? என்று ஆலிம்ஷா மக்பூலிடம் கேட்டார். அதற்கு மக்பூல் வெட்கமடைந்து தலைகுனிந்து தனது குடும்பம் சரியான கஷ்டத்தில் இருக்கின்றது அதனால் தான் ஆசிரியர்த் தொழில் கிடைக்கும் வரை ஏதாவது தொழில் செய்து உம்மா, வாப்பாவுக்கு உதவியாக இருப்போம் என்றுதான் அப்படிக் கூறினேன் என்றார். மக்பூலின் குடும்ப நிலையை அறிந்து ஆலிம்ஷா கண்கலங்கி மக்பூலின் தோளைத் தடவி சரி நாளைக்கு வைத்தீஸ்வரா கல்லூரிக்கு வா என்றார். 

அடுத்த நாள் மக்பூல் கல்லூரிக்கு வந்ததும் அதிபரும் ஆலிம்ஷாவும் கூடிக் கதைத்து உயர்படிப்பு படிக்க ஆரம்பிக்க வேண்டிய அறிவுரை வழங்கப்பட்டதையடுத்து மக்பூல் மீண்டும் வைத்தீஸ்வராக் கல்லூரிக்குச் சென்று கல்வியைத் தொடர்ந்தார். ஆலிம்ஷா மக்பூலின் தாய் மாமனான மொஹமெட் சுல்த்தான் அப்துல் காதரிடம் சென்று மக்பூல் தொடர்ந்து படிக்க ஊக்கமளிக்க வேண்டும். நானும் உதவுவேன் என்றார். இந்த விடயத்தை மீரானியா ஆலிம்ஷா யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் நடைபெற்ற மக்பூலின் இரங்கல் கூட்டத்தில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

வைத்தீஸ்வராக் கல்லூரியிலிருந்து மக்பூல் 1960 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பட்டப் படிப்பிற்காகச் சென்றார். 1963 இல் மக்பூல் பட்டதாரியாக வெளியேறி, கலகெதர ஜப்பார் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராக தன் கடமையை ஆரம்பித்தார். மக்பூல் ஆசிரியராக இருக்கும் போது அரச நிர்வாக பரீட்டைக்குத் தோற்றி சித்தியடைந்தார். பின்னர் மக்பூல் இலங்கை வங்கியின் பதவி நிலை உத்தியோகத்தராகவும் சிறிதுகாலம் கடமையாற்றினார். மக்பூல் அரச நிர்வாகப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து தெரிவானதால் சம்மாந்துறையில் பிரிவுக் காணி அதிகாரியாக மூன்று வருடங்களாக பணியாற்றினார். பின்னர்மக்பூல் கிளிநொச்சிக்கு காணி அதிகாரியாக இடமாற்றம் பெற்று எட்டு வருடங்கள் கடமையாற்றினார். கிளிநொச்சி விவசாயிகளின் விவசாய அபிவருத்திக்கும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபட்டார் என்றால் மிகையாகாது. இன மத வேறுபாடின்றி மக்பூலின் சேவைகள் நிமித்தம் தமிழ் மக்களால் பாராட்டப்பட்டார்.

கிளிநொச்சியில் மக்பூல் அளப்பரிய சேவையைச் செய்து கிளிநொச்சி தமிழ் மக்களின் மனதை வென்றார். எங்களில் ஒருவர் என்றார்கள். அந்தளவுக்கு பாராட்டினார்கள்.

மக்பூல் ஒஸ்மானியா கல்லூரி, அதிபர் ஏ. எச். ஹாமீம் (ஏ.எச். ஹாமீம் அதிபர் மக்பூலின் சகோதரியான மன்சூராவை திருமணம் செய்திருந்தார். இவ்வாறான திருமணங்களை "குண்டு மாற்றுக் கல்யானம்" என்பார்கள். அவ்வாறான கல்யானம் தற்போது நடைபெறுவது மிகவும் அரிது.) அவர்களின் சகோதரியான சம்ஷுன் நிஹார் அவர்களுடன் 22-08-1971 இல் திருமணபந்தத்தில் இணைந்து கொண்டார். இவர்கள் ஜெனிபர், றிஸ்வினா, ஆஷிர் ஆகிய மூன்று முத்தான செல்வங்களைப் பெற்றெடுத்தனர்.

மக்பூல் யாழ்பான முஸ்லிம்களின் கல்வியிலும் விளையாட்டிலும் கூடிய அக்கரை கொண்டார். கல்வி, விளையாட்டு சம்பந்தமான சங்கங்களில் முக்கிய பதவிகளை பொறுப்பெடுத்து அழகான முறையில் திறம்பட வழிநடாத்தினார். மேலும் யாழ். ஒஸ்மானியா கல்லூரி அதிபர் ஏ.எச். ஹாமீம் அவர்களுக்கு கல்லூரியின் நிர்வாக விடயங்களை அவ்வப்போது ஆலோசனை கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மக்பூல் கிளிநொச்சியில் காணி அதிகாரியாகக் கடமையாற்றும் போது காணியற்ற முஸ்லிம்களுக்கு 55 ஆம் கட்டை, விஸ்வமடு ஆகிய இடங்களில் காணிகள் வழங்கியமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

கிளிநொச்சியைத் தொடர்ந்து மக்பூல் காணி பரிபாலணத்தில் பெற்ற நிபுணத்துவம், அனுபவம் காரணமாக பிரதிகாணி ஆணையாளராக பதவி உயர்வு  பெற்று கொழும்பு தலைமைப் பீடத்திற்கு மாற்றலாகிச் சென்றார்.

இக்காலகட்டத்தில் மக்பூல் நெதர்லாந்துக்கு புலமைப்பரசில் பெற்றுச் சென்று, உயர்பட்டம் பெற்று நாடு திரும்பினார். பின்னர் சிறிதுகாலம் அம்பாறையில் மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். 1981 இல் மக்பூல் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். 1984 இல் மக்பூல் இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் வகுப்புக்கு பதவி உயர்வு பெற்றார். 1985 இல் மக்பூல் மன்னார் மாவட்டத்திற்கு அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். மக்பூல் மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபராக திறம்படக் கடமையாற்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

முஸ்லிம் சமூகத்தின் நிர்வாகப் பதவியில் இருப்போரை, முஸ்லிம் புத்திஜீவிகளை கொன்றொழிக்கும் புலிகளின் திட்டத்தில் முதலாவதாக ஷஹீதாக்கப்பட்டவர் எம்.எம். மக்பூல் ஆவார்.

மக்பூல் மன்னாரில் விடுதலைப் புலிகளினால் 22.01.1988 இல் 45 ஆவதுவயதில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மக்பூலின் இதயத்திலும், அவரது தலையிலும் துளைத்து வீழ்த்திய துயரம் இன்றும் மக்கள் மனதில் அழியாத வடுக்கலாகி விட்டது என்றால் மிகையாகாது. நிர்வாகத்துறையில் சிறந்து விளங்கிய மக்பூலின் இழப்பானது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் முழு நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாரை அல்லாஹ் 'ஜென்னத்துல் பிர்தௌஸ்'எனும் உயர்ந்த சுவர்க்கத்தில் நுழைவதற்கு அருள்புரிவானாக.

ஆமீன்....

No comments

Powered by Blogger.