Header Ads



யார் இந்த லதீப்...?

முப்படைகளையும் எல்லையற்ற அரசியல் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருந்த கோட்டா மீதான அச்சத்தை விட , ஒரேயொரு போலிஸ் அதிரடி பிரிவை மட்டுமே தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்கும் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதை ஒழிப்புக்கு பொறுப்பான சிரேஷ்ட DIG லத்தீப் மீது பாதாள உலக குழுக்களுக்கு அதிக அச்சமிருந்திருக்கிறது.

எந்தவொரு அரசாங்கத்தின் காலத்திலும் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாதவர் என்று அறியப்பட்டவர். இதனால் பல சந்தர்பங்களில் அமைச்சர்மார்களின் நெருக்கடியை சந்தித்து இருக்கிறார். கிழக்கு, ஊவா, மற்றும் தென் மாகாணங்களில் அதிக காலம் சேவையாற்றிருக்கிறார்.
80களின் நடுப்பகுதியில் கொக்கட்டிச்சோலை போலிஸ் பகுதிக்கு பொறுப்பாக இருந்த காலத்திலிருந்து புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் நேரடியாக தொடர்புபட்டவர். சுனாமிக்கு பின்னர் ஆரம்பித்த யுத்தத்தில் அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும் திருக்கோவில் பகுதிகளில் இருந்து புலிகளுக்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்தும் நோக்கிலும் கஞ்சிக்குடிச்சாறு காட்டுபகுதியில் இருந்த புலிகளின் முகாம்களை முற்றாக அழிக்கும் “நியத்தய் ஜய” என்ற இராணுவ முன்னெடுப்புக்கு தலைமை தாங்கி வெற்றிபெற்றவர்.

யுத்தத்தின் பின்னர் கஞ்சா உற்பத்தி மற்றும் சில சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்கில் ஊவா மாகாணத்திற்கு மாற்றப்பட்டார். அந்த நேரம் மொனராகலை பகுதியில் பலமிக்கவராக அறியப்பட்ட அமைச்சர் சுமேதா ஜயசேனவின் சகோதரன் கும்புக்கன் ஓயாவில் செய்துவந்த சட்டவிரோத மண் அகழ்வினை கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்த லத்தீப் அவரது சகோதரனை பிடித்து ஜெயிலில் போட்டதும் அதற்கு எதிராக சுமோதா ஜயசிங்க போர் கொடி தூக்கினார். தனது ஆதவாளர்கள் மற்றும் சில தேரர்களை கொண்டு இனவாத நோக்கில் அவர் மீது பல போலி பிரச்சாரங்களை அவிழ்த்து விட்டிருந்தார்கள். எனினும் SDIG லத்தீபுக்கு ஆதரவாகவும் மொனராகலையில் பல தேரர்கள் வீதியில் இறங்கியது இந்த சம்பவத்தை நாடு முழுவதும் பிரபலமாகியது.

பாதாள உலக டான் மாகந்துற மதூஷ் அபுதாபி நட்சத்திர ஹோட்டலில் தனது மகனின் பிறந்த தினத்தை கொண்டாடும் போது பிடிபட்டதாக சொல்லப்பட்டாலும், SDIG லதீப் ஓய்வுபெரும் தினத்தையும் குறித்தே அந்த கொண்டாட்ட நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் நெட்வேர்க் வைத்திருக்கும் மதூஷுக்கு தலையிடியாக லத்தீப் இருந்திருக்கிறார் என்பது இதிலிருந்து புரிகிறது. அதுமட்டுமல்ல, ஜனாதிபதியையும் கோட்டாவையும் கொலை செய்வதற்கு முயற்சி செய்யப்பட்டதாக நாமல் குமார குமார சொல்லியவைகளின் உண்மைத்தன்மை இன்னும் அறியப்படவில்லை என்றாலும், கொலை செய்யப்படும் லிஸ்டில் ஜனாதிபதி, கோட்டாவுக்கு மேலதிகமாக SDIG லத்தீப்பின் பெயரும் இருந்தது. இவரின் பெயரும் இருந்ததால், இதன் பின்னணியில் மாகந்துற மதூஸ் இருந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில் மதூஷ் பிடிபடுவதற்கு முன்னரும் பின்பும் தொடர்ந்தும் கோடிக்கணக்காண ரூபாய் பெறுமதியான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டு வருவதையும் பல பாதாள உலக தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருவதுவதையும் அவதானிக்கும் போது, இலங்கையில் இந்த நெட்வேர்க்குக்கு ஒரு வழி பண்ணுவது என்ற முடிவில் லத்தீப் இருக்கிறார் போல தெரிகிறது.

நாட்டுக்காக நேர்மையாக வேலை செய்வதற்கு ஏராளமான அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். Political Will இல்லாமை பலரின் கைகளை கட்டிப்போட்டிருக்கிறது. நேர்மையான அதிகாரிகளை அரசியல ரீதியில் ஓரங்கட்டும் அல்லது இடமாற்றும் நடைமுறை இருக்குவரை இந்த நாட்டுக்கு விமோசனம் இருக்கப்போவதில்லை.

தற்போதைய போதை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா முழு மூச்சாக ஆதரவளித்து வருகிறார். அதனால் லத்தீப் போன்றோர் சுதந்திரமாக இயங்க முடிகிறது. “போதை ஒழிப்பு, கடத்தல் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளை நிறைவுக்கு கொண்டுவந்த ஜனாதிபதி “ என்ற பெயர் பெரும் அரசியல் நோக்கம் மைத்திரிபால சிறிசேனவுக்கு இருக்கிறது. ஒரு அரசியல்வாதியாக அவரின் எண்ணத்தில் பிழை இல்லை. ஏனெனில் தொடரும் முயற்சிகள் வெற்றி பெரும் பட்சத்தில் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையாகவே முடியும்.

Dilshan Mohamed

No comments

Powered by Blogger.