Header Ads



அமைச்சுப் பதவிகள் இப்பொழுது, சங்கீத கதிரைகளாக மாறிவிட்டன - ஹக்கீம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் என்று நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்கான தொழிநுட்ப பிரிவின் புதிய கட்டடத்தையும், அதனுடன் இணைந்த கணனி ஆய்வு கூடத்தையும்  திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

வவுனியா வளாகம் தனியானதொரு பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்பது வன்னிமாவட்ட அரசியல் வாதிகளினதும், பொதுவாக வடமாகாண அரசியல் வாதிகளினதும், கல்விச் சமூகத்தினதும் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த வளாகத்தை தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை தயாரிக்குமாறு எனது அமைச்சின் செயலாளருக்கும், மேலதிக செயலாளருக்கும் பணிப்புரை விடுக்கவுள்ளேன் என்றும் அமைச்சர் கூறினார். 

அண்மையில் என்னைச் சந்தித்த யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரும், அதன் கீழுள்ள சில வளாகங்களின் முதல்வர்களும் இந்த வளாகத்தை தரமுயர்த்தவேண்டியதன் தேவையை என்னிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் ,1991 ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைந்த கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு, 1997 ஆம் ஆண்டிலிருந்து அதனொரு வளாகமாக இது செயல்பட்டு வருகிறது. இருபத்தேழு வருட காலமாக இவ்வாறு இயங்கி வரும் நிலையில், இதனைத் தனியானதொரு பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான சந்தர்ப்பம் எனது பதவிக் காலத்தில் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தெரிவித்தார். 

கடந்த நான்கு வருடங்களில் நான்காவது உயர்கல்வி அமைச்சராக நான் பதவி வகிக்கிறேன். அமைச்சுப் பதவிகள் இப்பொழுது சங்கீத கதிரைகளாக மாறிவிட்டன. எவ்வாறாயினும் இந்த விடயத்தில் அவசரமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன். வவுனியா வளாகமானது முழுமையான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும்போது தொழிநுட்ப பீடம் முதலான ஏனைய முக்கிய பீடங்கள் இங்கு உருவாக்கப்படும் என்றும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார். 

வவுனியா வளாக முதல்வர் கலாநிதி மங்களீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் பேராசிரியர் குணரத்ன, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசியர் இரத்தினம் விக்னேஸ்வரன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா ஆகியோர் உட்பட பல்கலைக்கழக மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். 

1 comment:

  1. "நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். "
    (அல்குர்ஆன் : 4:58)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.