மைத்திரி பச்சைத் துரோகியாகிவிட்டார் - சஜித் பிரேமதாஸ
“ரணில் விக்ரமசிங்க சிலரின் வதந்திக் கருத்துக்களால் தமிழ் மக்களுக்கு எதிரியாக இருக்கலாம் ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்கள் உள்ளங்களில் பச்சைத் துரோகியாக பதிவாகியுள்ளார்” என சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையில்,
“கடந்த 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் அதன் பிரதித் தலைவராக இருந்த கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரனுக்குமிடையில் ஏற்பட்ட விரிசலுக்கு பின்னாள் ரணில் விக்ரமசிங்க இருப்பதாக வெளிவந்த கதைகள் வெறும் கட்டுக் கதைகளாகும். இதனால் தமிழ் மக்கள் ரணிலை எதிரயாக பார்க்கலாம்.
கருணா அம்மானை ஐக்கிய தேசிய கட்சி காப்பாற்றி வைத்திருக்கவில்லை மாறாக கருணாவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரதி அமைச்சப் பதவி சுகபோக வாழ்க்கையை வழங்கியது மஹிந்தவும் அவரது அரசுமே வழங்கியது.
கிழக்கில் மஹிந்தவின் சர்வாதிகார ஆட்சியில் கருணாவின் அட்டூழியங்ளால் மக்கள் பெரிதும் துன்பத்திற்குள்ளானர். அத்தகைய மஹிந்த தரப்பினருடன் தான் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைகோர்த்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றியடைவதற்கு வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகள் பெரிதும் உதவி புரிந்தன. ஆனால் தற்போது ஜனாதிபதி அவற்றை மறந்து தான் தோன்றித்தனமாக செயற்படுகிறார். இதனால் தமிழ் மக்கள் மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பச்சை துரோகியாகிவிட்டார்.
1993ஆம் ஆண்டு மே தினத்தன்று கொழும்பில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் அப்போதைய ஜனாதிபதியாகவிருந்த என்னுடைய தந்தை ரணசிங்க பிரேமதாஸ கொல்லப்பட்டார்.
அதற்காக விடுதலைப் புலிகளை ஆதரித்த வடக்கு கிழக்கு மக்களை நான் வெறுக்கவில்லை. மாறாக யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களை எனது சகோதரர்களாகவே பாரக்கிறேன்.
ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் ஆட்சி பீடம் ஏறும். ஏறியதும் தமிழ் மக்களுக்கு அரசில் தீர்வை வழங்கியே தீரும். அத் தீர்வானது இலங்கையிலுள்ள சகல இனத்தவர்களும் ஏற்கும் தீர்வாக அமையும்” என தெரிவித்தார்.

Post a Comment