இலங்கை வரலாற்றில் தீர்மானமிக்க, வழக்கு விசாரணை ஆரம்பம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு 7 நீதிபதிகளுடன் இன்று மீள் பரிசீலனை செய்யப்படவுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது உயர் நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் நளின் பெரேரா, புவனெக அழுவிஹாரே, சிசிர, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித்த மலல்கொட மற்றும் முதுர் பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழுவினர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துத் கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கு மீதான விசாரணை தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு இடம்பெற்றும் ஏழாம் திகதி இறுதித் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் தீர்மானமிக்க வழக்கு விசாரணை இது கருதப்படுகிறது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து உள்நாட்டு அரசியல் மட்டத்தினர் மட்டுமன்றி, உலக நாடுகளும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.
கடந்த 13ம் திகதி வழக்கு விசாரணை முதன்முறையாக விசாரிக்கப்பட்ட போது, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட 13 கட்சிகளினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment