ரணில் ஜனாதிபதியாக வேண்டும் - இதுவே தனது விருப்பம் என்கிறார் சஜித்
ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியதும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கதான் பிரதமராகப் பதவியேற்பார். இது ஐக்கிய தேசிய முன்னணியின் ஏகமானதான தீர்மானமாகும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் ரணிலே வேட்பாளராகக் களமிறங்கி வெற்றிவாகை சூட வேண்டும். இது எனது தனிப்பட்ட விருப்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
என்னை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறும் பிரதமராகப் பதவியேற்குமாறும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குமாறும் பலர் எனக்கு அழுத்தம் கொடுத்தமை உண்மைதான்.
ஏன் இப்போதும் அந்த அழுத்தங்கள் தொடர்கின்றன. எனினும், நான் தற்போது கட்சியின் தலைமைப் பொறுப்பையோ அல்லது பிரதமர், ஜனாதிபதி பதவிகளையோ ஏற்பதற்குத் தயாரில்லை.
மைத்திரி - மஹிந்த கூட்டணியின் அரசியல் சதி நடவடிக்கைக்கு எதிராக நாட்டு மக்களின் நலன் கருதி எம்மை அரவணைத்து ஜனநாயக வழியில் ஓயாமல் போராடி வரும் எமது தலைவர் ரணில் விக்ரமசிங்கதான் ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியதும் பிரதமராகப் பதவியேற்பார்.
இது ஐக்கிய தேசிய முன்னணியின் ஏகமானதான தீர்மானமாகும். அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் ரணிலே வேட்பாளராகக் களமிறங்கி வெற்றிவாகை சூட வேண்டும். இது எனது தனிப்பட்ட விருப்பமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment