Header Ads



5 பேருடன் தப்பிச்செல்ல முயற்சித்த பிரபாகரன், பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லை

இறுதி யுத்தத்தின் போது பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுள்ளனர் என முன்னாள் இராணுவ தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொட்டு அம்மான் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“2009 மே மாதம் 19ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் வைத்து போர்முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பிரபாகரன், சூசை உள்ளிட்ட தலைவர்களின் சடலங்கள் அங்கிருந்தே மீட்கப்பட்டன.

எனினும், பொட்டு அம்மானின் சடலம் அங்கிருந்து மீட்கப்படவில்லை. அவரின் மனைவியின் சடலமே அங்கிருந்து மீட்கப்பட்டது.

மே 19ஆம் திகதி காலை நத்திக்கடலில் கிழக்கு பகுதியில் பிரபாகரனின் மகன் சார்ள்ஸின் படையணியுடனேயே மோதல் இடம்பெற்றது.

வடக்கு கடற்கரைக்குசென்று ஐந்துபேருடன் தப்பிச் செல்வதற்கு பிரபாரகன் முயற்சித்தார். அங்கு பொட்டுஅம்மானும் இருந்துள்ளார்.

இந்த நேரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பொட்டு அம்மான் தற்கொலை குண்டை வெடிக்கவைத்து இறந்துள்ளார். இந்த தகவலை கே.பி. வெளியிட்டார்.

போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரனுடனேயே பொட்டு அம்மான் இருந்தார். அவர் நோர்வேயிக்கு தப்பி ஓடவில்லை. அவர் உயிரிழந்துவிட்டார் என நம்புகின்றோம்.

இதேவேளை, யுத்தம் இடம்பெற்ற கால்பகுதியில் கருணாவை இராணுவப் பாதுகாப்புடன் கொழும்பில் தங்கவைத்திருந்தோம்.

போர்முடிவடைந்த பின்னர் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை அடையாளம் காட்டுவதற்காகவே அவரை நந்திக்கடல் பகுதிக்கு அழைத்துச்சென்றோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.