Header Ads



இது ஜனாதிபதி அவர்களுக்கு, நீங்களே மிகமோசமான அரசியல் தலைவராக கருதப்படுவீர்கள்..!

பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் இலங்கையர்களாகிய நாம் இலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து எமது கவலையை வெளிப்படுத்துகிறோம்.பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களை பதவியிலிருந்து உடனடியாக அகற்றி,  அவரிற்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களைப் பிரதமராக நியமித்தமை அரசியல் அமைப்புச் சதி எனக் கருதுகிறோம்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசிலிருந்து விலகியதும், பாராளுமன்ற நம்பிக்கையையும், பலத்தையுமுடைய கட்சியை வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்திருந்தால் அம் முடிவை நியாயமாகக் கொள்ளலாம். பதிலாக நீங்கள் புதிய மந்திரி சபையை நியமித்ததோடு தன்னிச்சையாகவே பாராளுமன்றச் செயற்பாடுகளையும் ஒத்திப் போட்டதுடன் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸ போதுமான பாராளுமன்றப் பலத்தைத் திரட்டும் வகையில் கால அவகாசத்தையும் வழங்கியுள்ளீர்கள். இதன் காரணமாக இரண்டு பிரதமர்கள் போட்டியிடும் அதிகார மையங்கள் உருவாக இடமளித்துள்ளீர்கள். இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி  இதனால்  ஏற்பட்டுள்ளது.

புதிய பிரதமர் நிதி அமைச்சினைப் பொறுப்பேற்ற வேளையில் நீங்கள் சட்டம் ஒழுங்கு, ஊடகம், அரச அச்சகம் என்பவற்றை உங்கள் பொறுப்பில் எடுத்ததுடன் பொலீஸ், ஊடகம் ஆகியவற்றின் மீதும் கட்டுப்பாட்டினை மேற்கொண்டுள்ளீர்கள். இதன் காரணமாக அரச இயந்திரம் யாவற்றையும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கடத்த முயற்சித்துள்ளீர்கள்.பாராளுமன்றத்தைக் கூட்டும்படி விடுத்த வேண்டுகோள் அனைத்தையும் நீங்கள் அலட்சியப்படுத்தியதோடு அரசியல் அமைப்பிற்கும், ஜனநாயத்திற்கும் விரோதமாக பாராளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலை நடத்தத் தீர்மானித்தமையும் உங்கள் திட்டங்களை நிறைவேற்ற பாராளுமன்றப் பெரும்பான்மை உங்களிடம்  இருக்கவில்லை என்பது வெளிப்படையாக  நிருபணமாகியது.

திரும்பத் திரும்ப உங்கள் வரைமுறைகளை மீறி நிறைவேற்று அதிகாரத்தினைத் துஷ்பிரயோகம் செய்வதும், மக்கள் ஆணையை மீறுவதும் மிகவும் வெளிப்படையாகவே நீங்கள்  அரசியல் யாப்பினை மீறுவது சட்டம் மற்றும் ஜனநாயக நெறியினை மீறுவதாகவே  கருதப்பட வேண்டி உள்ளது.இவ்வாறான ஜனநாயக விரோத, யாப்பு விதிகளை மீறிச் செயற்படுவதை நாம் மிகவும் வன்மையாக  கண்டிக்கிறோம். நிலைமைகள் மேலும்  மோசமடைந்து  நெருக்கடியை  நோக்கிச்செல்லும் போக்கினைத் தடுக்கும் விதத்தில் , அக்டோபர் 26ம் திகதிக்கு முன்னதான நிலமைகளுக்கு எடுத்துச் செல்ல உதவுமாறு வேண்டுகிறோம்.

பிரதமர் ரணில் விக்கரமசிங்க அவர்கள் இப் பிரச்சனைகளின் பங்காளியாக உள்ள நிலையில் அவரது எதிர்காலம் என்பதை விட எமது கவலைகள்  நாட்டின் ஜனநாயகத்தினதும், மக்களினதும் எதிர்காலம் குறித்தே கவலை கொள்கிறோம். இலங்கையின் ஜனநாயகக் கட்டுமானம் என்பது ஆசியாவில் மிகவும் பழமை வாய்ந்தது என்பதுடன் அவ்வப்போது இடையூறுகள் நேர்ந்த போதிலும் அதிகார மாற்றம் என்பது எப்போதும் அமைதியாகவே கைமாறப்பட்டது என்பதை ஞாபகமூட்ட விரும்புகிறோம். இந் நிலையில்  இதேபோல் நாட்டின் அரசியல் யாப்பினை மிகவும் அப்பட்டமாகவே அவமதிக்கும் நிலை இதுவென  சுட்டிக் காட்ட விரும்புகிறோம்..

தற்போதைய நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட நீங்கள் உதவவில்லை எனில் இலங்கையின் அரசியல் வரலாற்றின் மிக மோசமான தலைவராகவே  நீங்கள் கருதப்படும்  நிலை உள்ளது. இந்த அவமானகரமான நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த உதவும் ஜனநாயக சக்திகளோடு நாமும் இணைந்து செயற்படுவோம்  என்பதனையும்  வலியுறுத்துகிறோம்.
---------------------------------------------------------

ஐக்கியத்திற்கான சுயாதீன சிவில் சமூகம்

No comments

Powered by Blogger.