"மைத்திரியுடன் இருந்தவர்கள், அனாதரவான நிலையில்"
போக்கிரித்தமான அரசியலுக்கு எதிராக பல அணியினர் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமல்லாது அவருடன் இருந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அநாதரவான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் ஒழுக்கத்தை ஒதுக்கி வைத்து விட்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைவதா அல்லது போக்கிரித்தனமான அரசியலுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை எடுப்பதா என்பதை இவர்கள் முடிவு செய்ய வேண்டும்.
அத்துடன் மகிந்த ராஜபக்சவின் புதிய அரசாங்கத்தில் இணைந்து மீண்டும் அங்கிருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
பணத்தை கொடுத்து மீண்டும் அவர்களை தம் பக்கம் இழுக்க மகிந்த ராஜபக்ச அணியினர் முயற்சித்து வருகின்றனர். 113 உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட முடியாத காரணத்தினால், அவர்கள் பண சூதாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தற்போது மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு விலை பேரம் பேசப்படுகிறது.
எவ்வாறாயினும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்கனவே பெரும்பான்மை பலம் இருப்பதால், பணத்தை கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் தேவையில்லை எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment