Header Ads



ரணில் மேடையில் உரையாற்றியபோது, கீழே நின்று சைகை காட்டிய ஜனாதிபதி -

“இந்து சமுத்திரம் - எமது எதிர்காலத்தை வரையறுத்தல்” எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மாநாடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது தலைமையில், நேற்று (11), அலரி மாளிகையில் ஆரம்பமானது.

இதன்போது, மாநாட்டின் பிரதான உரையை ஆற்றவிருந்த ஜனாதிபதி, அதற்கான வாய்ப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கிவிட்டு, பிரதமர் தனதுரையை ஆற்றிக்கொண்டிருக்கும் போதே, இடைநடுவில் எழுந்துசென்ற சம்பவமொன்று இடம்பெற்றது.

பிரதமரின் தலையீட்டில், இந்தச் சர்வதேச மாநாடு இடம்பெற்று வருகின்ற நிலையில், இதில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி நேற்றுச் சென்றிருந்த போதிலும், பிரதான மேடையில் அமர்வதற்கு மறுப்புத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு தொடர்பான அறிவித்தல்களை வழங்கிக் கொண்டிருந்த அறிவிப்பாளர், விசேடப் பணியொன்றுக்காக, ஜனாதிபதி சற்று நேரத்தில், மாநாட்டு மண்டபத்திலிருந்து வெளியேறவுள்ளார் என்ப​தை அறிவித்ததோடு, ஜனாதிபதிக்காக பிரதான மேடையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் வந்தமரு​மாறு, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்தார்.

சம்பந்தனும் அந்த ஆசனத்தில் அமராமையால் மன்னிப்புக் கோரிக்கொண்ட அறிவிப்பாளர், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு, அதற்கான அழைப்பை விடுத்தார். இந்நிலையில், லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தின் தலைவர் கணேசன் விக்னராஜா மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரது வரவேற்புரை மற்றும் மாநாட்டின் நோக்கம் தொடர்பான விளக்கவுரைகளை அடுத்து, பிரதமரின் பிரதான உரை இடம்பெற்றது.

இந்நிலையில், பிரதமர் தனதுரையை ஆற்றிக்கொண்டிருந்த போது, இடைநடுவே எழுந்த ஜனாதிபதி, உரையாற்றிக்கொண்டிருந்த பிரதமரைப் பார்த்து, தான் புறப்படப்போவதான சைகையைக் காண்பித்தார். இதன்போது, தனது உரையை உடனடியாக நிறுத்திக்கொண்ட பிரதமர், ஜனாதிபதிக்கு பதிலளிக்கும் வகையில், தலையை அசைத்து அனுமதி வழங்கினார். இதனையடுத்து, மண்டபத்தை விட்டு, ஜனாதிபதி புறப்பட்டுச் சென்றார்.

மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வா, மாநாட்டு மண்டபத்துக்குள் அங்கும் இங்குமாக அழைந்துத் திரிந்து, மாநாட்டுக்குத் தேவையான விடயங்கள் குறித்துக் கவனித்துக் கொண்டிருந்தார்.

எவ்வாறாயினும், இந்த மாநாடு தொடர்பான அழைப்பிதழில், மாநாட்டின் ஆரம்ப நாள் நிகழ்வின் பிரதான உரையை, ஜனாதிபதி ஆற்றுவாரெனத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.