Header Ads



அவுஸ்திரேலிய வீரர் என்னை, ஒசாமா என்றழைத்தார் - மொயின் அலி வேதனை


அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மோசமாக நடந்துகொண்டதாக, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தான் எழுதி வரும் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரரான மொயீன் அலி, தற்போது தன்னுடைய சுயசரிதையை எழுதி வருகிறார். அதன் சில பாகங்கள் பத்திரிகையில் வெளிவருகின்றன.

இந்நிலையில், மொயீன் அலி அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், ‘நான் விளையாடிய அணிகளில் மிகவும் வெறுப்பது அவுஸ்திரேலிய அணியைத்தான். அவர்கள் பழைய எதிரி என்பதற்காக கூறவில்லை.

அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தாலும் மக்களையும், வீரர்களையும் அவமரியாதையாக நடத்துவதாலும் தான். நான் அவர்களிடம் தொடர்ந்து விளையாடும்போது தான் அவர்களின் மோசமான நடத்தையை முழுவதுமாக உணர்ந்தேன்.

2015 ஆஷஸ் தொடரில் இன்னும் மோசமாக நடந்துகொண்டார்கள். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர்கள் நல்லவிதமாக பழகுவார்கள். ஓர் அணி சிரமங்களை மேற்கொள்ளும்போது, அவர்கள் மீது பரிதாபம் ஏற்படும்.

ஆனால், தென் ஆப்பிரிக்காவில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தின் போது அவுஸ்திரேலிய அணி மீது பரிதாபமே ஏற்படவில்லை’ என தெரிவித்துள்ளார்.

தனது சுயசரிதையில் இனப்பாகுபாடு சம்பவம் ஒன்றை மொயீன் அலி தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், 2015ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில், அவுஸ்திரேலிய வீரர்கள் என்னிடம் மோசமாக நடந்துகொண்டார்கள். ஒரு சம்பவம் என்னை பாதித்தது. மைதானத்தில் ஒரு அவுஸ்திரேலிய வீரர் என்னைப் பார்த்து ஒசாமா என அழைத்தார்.

அவர் என்னிடம் அப்படிக் கூறியதை என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு மிகவும் கோபம் வந்தது. மைதானத்தில் ஒருபோதும் நான் கோபமாக இருந்ததில்லை. அணி வீரர்களிடம் இதுகுறித்துக் கூறினேன்.

இதை அவுஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லேமனிடம் எடுத்துச் சென்றார் இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் பேலிஸ். அந்த வீரரிடம் டேரன் லேமன் கேட்டார், மொயீன் அலியை ஒசாமா என அழைத்தாயா? என்று. ஆனால் அந்த வீரர் தான் அவ்வாறு கூறவில்லை என்று தெரிவித்துவிட்டார்.

பகுதிநேர பந்துவீச்சாளர் என்றுதான் கூறினேன் என்றார். எனக்கு இது ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும் அவர் சொல்வதை ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும். எனினும் அந்தப் போட்டியில் நான் கோபமாகவே இருந்தேன்.

3-2 என ஆஷஸ் தொடரை நாங்கள் வென்ற பிறகும் அந்த வீரரிடம் இதுகுறித்துக் கேட்டேன். அப்போதும் அதை மறுத்தவர், தனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் இருப்பதாகக் கூறினார் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.