ஞானசாரரின் விடுதலை பற்றி ஜனாதிபதி அக்கறை கொள்ளாதுவிடின், பிக்குகளை இணைத்துக்கொண்டு போராட்டங்களை முன்னெடுப்போம்
நாட்டை பயங்கரவாதத்திலிருந்தும் மீட்டெடுத்த இராணுவ வீரர்களுக்காகவே ஞானசார தேரர் ஹோமாகம நீதிமன்றில் குரல் கொடுத்தார். சட்டம் அவருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்திருந்தாலும் ஜனாதிபதியினால் அவருக்குப் பொது மன்னிப்பு வழங்க முடியும். பொது மன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்காக நாட்டிலுள்ள அனைத்து பௌத்த குருமார்களும் அழுத்தங்களைப் பிரயோகிப்போம் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
ராஜகிரியவிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவ்வமைப்பின் பேச்சாளர் கலங்கம சுதினாநந்த தேரர் கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
“ஞானசார தேரரின் விடுதலைக்காக நாம் நியாயமான முறைகளையே கையாள்வோம். நியாயமான போராட்டங்களையே நடாத்துவோம். இவ்விடயம் தொடர்பில் நாம் ஜனாதிபதியைச் சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளோம். ஜனாதிபதியும் பாராளுமன்றத்திலுள்ள ஏனைய அமைச்சர்களைப் போன்று ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் அக்கறை கொள்ளாதுவிடின் அனைத்து பௌத்த மத குருமார்களையும் இணைத்துக்கொண்டு போராட்டங்களை முன்னெடுப்போம்.
கடந்த காலங்களில் நீதிமன்றுக்குக் கல் எறிந்த அமைச்சருக்கெதிராக இந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அவர் தொடர்ந்தும் சுதந்திரமாக அமைச்சுப் பதவியை வகித்து வருகிறார். ஆனால் இராணுவத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது எமது நாட்டின் பௌத்த மத கோட்பாடுகளுக்கு முரணானதாகும்.
இன்று தேசிய அரசாங்கத்தின் ஆட்சியில் பௌத்த மதம் அழியும் நிலைக்குள்ளாகியுள்ளது. வட பிராந்தியத்திற்கு ஒரு சட்ட ஒழுங்கும் தெற்கிற்கு வேறு வகையான சட்ட ஒழுங்கும் அமுல் நடாத்தப்பட்டு வருகிறது. வடக்கில் பௌத்த மரபுரிமைகள், தொல்பொருட்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் பாதுகாப்புக்காகவும் இராணுவ வீரர்களின் உரிமைகளுக்காகவும் குரல் எழுப்பிய ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். ஜனாதிபதி இது தொடர்பில் தாமதியாது செயற்பட வேண்டும் என்றார்.
-Vidivelli

SLTJ you make protection.. Also including some MONK to keep this terror BBS Monk inside BARS.. This terror BBS Monk deserve punishment.
ReplyDelete