Header Ads



திஹாரிய பள்ளிவாசலில் இருந்து, தேனாகத் தித்திக்கும் முன்மாதிரி

இளைய சமுதாயம் அதிகமாக புத்தகங்களை வாசிக்க வேண்டும் என மலேசியாவின் புதிய அதிபராகப் பதவியேற்ற மஹாதிர் முஹம்மத் கூறியிருக்கிறார். மலேசியா அதிகமான பல்கலைக்கழகங்களைக் கொண்டுள்ள ஒரு நாடு. வெளிநாடுகளில் இருந்தெல்லாம் இங்கு வந்து கற்கின்ற மாணவர்கள் அதிகம். இலங்கையில் இருந்தும் மலேசியா சென்று கற்கும் மாணவர்கள் 6000 பேர் இருப்பதாகவும் ஒரு தகவல். இந்தளவுக்கு முஸ்லிம்கள் வாழும் மலேசியா அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது எப்படி ?

அங்கு வாழும் ஒரு சகோதரர் அண்மையில் பகிர்ந்து கொண்டதொரு சம்பவம் இந்தக் கேள்விக்கு விடையாக அமைந்தது. ஜும்ஆ தினத்தில் ஒரு மணி நேரம் முன்னதாக ஜும்ஆவுக்குச் சென்ற அவருக்கு அங்கு திரண்டிருந்த கூட்டம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு ஒரு புத்தக வெளியீட்டு விழா நடந்து கொண்டிருந்தது. ஏராளமான மக்கள் வருகை தந்திருந்தனர். விழா முடிய அனைவரும் தொடர்ந்து ஜும்ஆவில் கலந்து கொள்கின்றனர்.

இங்குள்ள பள்ளிவாசல்களின் நிலை என்ன ? பல பள்ளிவாசல்களில் தமிழ் வேதநூலாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு சில புத்தகங்களை வாசிப்பதற்கு மட்டுமே அனுமதி இருக்கிறது. ஏனைய இஸ்லாமியப் புத்தகங்களைக் கூட பள்ளிவாசலில் கண்ணுக்குத் தெரிகின்ற விதமாக வைத்திருக்கவும் அனுமதிக்க மாட்டார்கள். பத்திரிகைகள் பற்றிக் கேட்கவும் வேண்டாம். இன்னும் சில பள்ளிவாசல்கள் தமது கொள்கை பற்றிய புத்தகங்களைத் தவிர வேறு எதனையும் கைகளில் அகப்படுவதற்கு வைக்க மாட்டார்கள். மாற்றுக் கொள்கைகளைப் பற்றி அறிந்து கொண்டால் தாங்கள் விதைக்கின்ற கொள்கைகளில் இருந்து மாறிச் சென்றுவிடுவார்கள் என்றொரு பயம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

இப்படியான இடங்களில் இருந்து தான் பல்கலைக்கழகம் செல்வதைத் தடுக்கின்ற போதனைகளும், பெண் கல்வியை மறுக்கின்ற வழிகாட்டல்களும் முன்வைக்கப்படுகின்றன. பள்ளிவாசல்களில் புத்தகங்கள் வைப்பது எப்படிப் போனாலும் புத்தகங்களை வாசிக்கின்றவர்களே உருவாகி விடக் கூடாது என்று செயற்படும் பள்ளிவாசல்கள் நமக்குள்ளால் அனந்தம் இருக்கின்றன.

இந்த நிலையில் தான் கடந்த வாரம் திஹாரிய இப்ராஹிமிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் இரண்டு புத்தக வெளியீடுகளுக்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கும் செய்தி தேனாகத் தித்தித்தது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நோன்பில் அதிகம் பேசப்படும் ஸகாத் பற்றிய ஒரு புத்தக வெளியீடு நடைபெற்றுள்ளது. அடுத்த நாள் திங்கட்கிழமை, மீள்பார்வை வெளியீடான அழைப்புப் பாதையில் ஒரு பயணம் என்ற நூலின் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

பள்ளிவாசல்களை அலங்கரித்தல் என்பதனூடாக பள்ளிவாசல் நிர்வாகங்கள் விளங்கி வைத்திருக்கின்ற, காபட் போடுதல், முன்றிலுக்கு சீமெந்துக் கல் பதித்தல், அலங்கார விளக்குகள் பொருத்துதல் போன்ற விடயங்களுக்கு அப்பால், சமூகத்தை பண்பாடுகளால் அலங்கரிக்கின்ற பணிகள் பள்ளிவாசல்களால் செய்யப்பட வேண்டியிருக்கின்றன என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. பள்ளிவாசல்கள் செய்ய வேண்டிய பணியும் இதுதான். ஒரு இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒரு புத்தகமும் நூற்றுக் கணக்கான பயான்களும் மட்டும் போதுமானதாக இருக்கப் போவதில்லை. எந்த வகையில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியுமோ அந்த வகைகளில் எல்லாம் செயற்படுவதற்குத் தயாரான நிலையில் தான் பள்ளிவாசல்கள் இருக்க வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் பண்பாடு, கல்வி போன்றவற்றிலான பின்னடைவுகள் இன்று இலங்கையின் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் முஸ்லிம்களை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சருகுகளாக மாற்றியிருக்கின்றன. அதிலிருந்து சமூகத்தைத் தூக்கியெடுக்கும் பணியை அல்லாஹ்வின் இல்லமான பள்ளிவாசல்கள் தான் செய்ய வேண்டும். இவை எதனையும் செய்வதற்கு எங்களது பள்ளிவாசலில் இடம் கொடுக்க மாட்டோம் என்று அடம் பிடிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கம் இந்தப் பூமியில் கண்ணியம் பெறக் கூடாது என்ற கொள்கையிலேயே இருக்கிறார்கள். இவர்களிடமிருந்து பள்ளிவாசல்களைக் காப்பாற்றியாவது பள்ளிவாசல்களை மார்க்கத்தின் கண்ணியத்துக்காக உழைக்கின்ற மத்தியத்தலங்களாக மாற்ற வேண்டியிருக்கிறது.

அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் முன்மாதிரியாகச் செயற்படுகின்ற இவ்வாறான பள்ளிவாசல்கள் இனங்காணப்பட்டு சமூகத்துக்கு அடையாளப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் அடுத்த தலைமுறையிலாவது பள்ளிவாசல்கள் தம் பணியைச் செய்யக் கூடியதாக இருக்கும்.

 – அபூ ஷாமில் –

No comments

Powered by Blogger.