ஐதேகவின் போர்க்கொடியால், கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரை வெளியேற்ற வேண்டும் என்று ஐதேக போர்க்கொடி உயர்த்தியுள்ளதால், கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பில், மலிக் சமரவிக்ரம, அகில விராஜ் காரியவசம் ,சரத் பொன்சேகா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பின் போதே, கூட்டு எதிரணியினர் பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்து வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்றும், அவர்களை அமைச்சர் பதவிகளில் இருந்து வெளியேற்றுமாறும், ஐதேகவினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இதற்கு உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும் இன்று நடக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் இதுபற்றி முடிவு செய்வதாகவும் சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், ஏற்கனவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள் மற்றும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப் பெற்று விட்டு, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளித்த 16 சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வருவமாறு சிறிலங்கா பிரதமர் கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, வரும் சனிக்கிழமைக்கு முன்னர் சிறிலங்கா அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று ஐதேகவின் பிரதி பொதுச்செயலரும், கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்னர், அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்.
இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வாக்களித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கு பதவிகள் வழங்கப்படாது. என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment