Header Ads



யாழ் மேயராக ஆர்னோல்ட் தெரிவு - வாக்களிப்பில் நடந்த சுவாரசியங்கள்

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட், தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தடவையாக  இரகசிய வாக்கெடுப்புக்கு தெரிவு செய்யப்பட்ட, ஈபிடிபி வேட்பாளர் முடியப்பு ரெமீடியஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து,  யாழ். மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட், தெரிவானார்.

முன்னதாக, இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான யாழ். மாநகரசபையின் முதலாவது அமர்வில், முதல்வரைத் தெரிவு செயவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து, மாநகர முதல்வர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்மானுவல் ஆர்னோல்டின் பெயரை முன்மொழிந்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,வி. மணிவண்ணனின் பெயரை முன்மொழிந்தது. ஈபிடிபி முடியப்பு ரெமீடியசின் பெயரை முன்மொழிந்தது.

இதையடுத்து இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு,  வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இரகசிய வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்திய ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்றார்.

ஈபிடிபி நிறுத்திய ரெமீடியசும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிறுத்திய வி. மணிவண்ணனும், தலா 13 வாக்குகளைப் பெற்றனர்.

இதனால், இறுதி வாக்கெடுப்புக்காக- சம வாக்குகளைப் பெற்ற ரெமீடியஸ் மற்றும் மணிவண்ணன் ஆகியவர்களில் ஒருவரை திருவுளச்சீட்டுமூலம் தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, திருவுளச்சீட்டில் இவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு. அவற்றில் ஒன்று எடுக்கப்பட்டது. அதில் ரெமீடியசின் பெயர் தெரிவானது.

இதையடுத்து, மணிவண்ணன் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இரண்டாவது இரகசிய வாக்கெடுப்பில் ஆர்னோல்டும், ரெமீடியசும் மோதுவர் என்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.