Header Adsஒவ்வொரு லைக்குக்கும் ஒரு விலை - ஒரே நாளில் உலகின் வில்லனான பேஸ்புக்

-மு.ராஜேஷ்-

மனிதன் ஒரு சமூகமாக சேர்ந்து வாழத்தொடங்கியபோது உருவாகியிருக்கலாம், நாடோடியாக நிலங்களைக் கடந்து திரிந்தபோது உருவாகியிருக்கலாம். எப்போதாக இருந்தாலும் அரசியல் என்பது என்றைக்கோ உருவாகி இன்றைக்கு ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்திருக்கிறது. அரசியலைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை என்பது முக்கியமானது. ஒரு தரப்பிடம் இருக்கும் பெரும்பான்மையைப் பொறுத்துதான் அரசியலில் காய்களை நகர்த்த முடியும். அந்த வகையில் அரசியலில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஆயுதங்களாகக் காலம் காலமாக அதிகாரம், அன்பு, பொருள், நிலம் எனப் பலவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு அந்த ஆயுதம் கண்ணுக்கே தெரியாத ஒன்றாக அதே வேளையில் பலம் பொருந்திய ஒன்றாக மாறியிருக்கிறது. காலத்துக்குத் தகுந்தவாறு மாற்றமடைந்திருக்கும் அந்த ஆயுதத்தின் பெயர் 'டேட்டா'.

சிலர் நம்பலாம், சிலரால் நம்ப முடியாமல் போகலாம்; ஆனால், இன்றைய காலகட்டத்தில் யார் கையில் அரசியல், ஆட்சி, அதிகாரம் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் டேட்டாவின் பங்கு என்பது ஒருவர் நினைத்துப் பார்ப்பதை விடவும் அதிகம். சமீப காலங்களாகவே இந்த விஷயம் உலக அளவில் விவாதிக்கப்பட்டு வந்தாலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சேனல் 4 வெளியிட்ட செய்தி அதனை மற்றொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல்தான் இந்த சர்ச்சைகளின் தொடக்கப்புள்ளி. அந்த தேர்தலில்  ட்ரம்ப் ஜெயித்ததைப் பார்த்து உலகமே சற்று ஆச்சர்யப்படத்தான் செய்தது. ஏனென்றால் தேர்தலுக்கு முன்னரான காலத்தில் ட்ரம்ப் செய்த கூத்துக்களை உலகம் பார்த்துக்கொண்டிருந்த அதே  வேளையில் அமெரிக்கர்கள் அவரை தங்களது தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். அன்றைக்கு தொடங்கிய சர்ச்சைகள் இன்று வரை ஓயவில்லை. அவரின் வெற்றிக்கு பின்னால் ரஷ்யா இருக்கிறது என்பது தொடங்கி போலி செய்திகள் வரை ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சர்ச்சைகள் எழுந்துகொண்டிருந்தாலும் அவைகளுக்கு வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அந்த வகையில் தற்பொழுது சேனல் 4 வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ முக்கியமானதாக கருதப்படுகிறது.

கேம்பிரிட்ஜ் அனலிடிகா (Cambridge Analytica):
'கேம்பிரிட்ஜ் அனலிடிகா' என்ற பிரிட்டிஷ் நிறுவனம் ஃபேஸ்புக் தகவல்களை ட்ரம்பை தேர்தலில் வெற்றிபெற வைப்பதற்கு பயன்படுத்தியதாக தெரிவித்திருக்கிறது. கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திடம் இருந்து  இது தொடர்பாக தகவல்களைப் பெறுவதற்கு பல்வேறு கட்டங்களாக 'ஸ்டிங் ஆபரேஷன்' ஒன்றை நடத்தியிருக்கிறது சேனல் 4. கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டேட்டா தொடர்பான சேவைகளை உலகம் முழுவதும் இருக்கும் பல்வேறு தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சிகளுக்கு அளித்து வந்தன. இந்நிலையில் வாடிக்கையாளர் போல கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தை அணுகிய  சேனல் 4-ஐச் சேர்ந்த ஒருவர், அவருக்கு அந்த நிறுவனத்தின் சேவை தேவைப்படுவதாகவும் எனவே அது தொடர்பாக தகவல்களை அளிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறார்.  அப்படி தங்களது 'பழைய' சேவைகளைப் பற்றி கூறியிருக்கிறார்  கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸாண்டெர் நிக்ஸ் ( Alexander Nix).அலெக்ஸாண்டெர் நிக்ஸ்

தங்களது நிறுவனம் அதற்கு முன்னர் உலகம் முழுவதிலும் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு அவர்களது செல்வாக்கை அதிகரிப்பதற்கு உதவியதாகவும், குறிப்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெற்றி பெற சுமார்  50 மில்லியன் வாக்காளர்களின் ஃபேஸ்புக் தகவல்கள் பயன்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த விஷயம் அப்படியே ஃபேஸ்புக்கின் பக்கம் திரும்பியது. ஃபேஸ்புக் தனிநபர்களின் தகவல்களை அவர்களுக்கே தெரியாமல் சேகரித்து திருட்டுத்தனமாக விற்பனை செய்கிறதா என்ற கேள்வியை எழுப்பினார்கள் நெட்டிசன்கள். வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அலெக்ஸாண்டெர் நிக்ஸ்-ஐ தற்காலிகமாக நிறுவன பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கிறது அந்நிறுவனம். அதே வேளையில்  தன் மீது வைக்கப்படும் ஒட்டுமொத்த குற்றச்சாட்டுகளையும் மறுத்திருக்கிறது கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம். 

ஃபேஸ்புக்கை டெலிட் செய்வதற்கான நேரம்

இந்த செய்தி வெளியானதால் கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது  ஃபேஸ்புக் நிறுவனம். பலரின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் கண்டன. இரண்டு நாட்களில் மட்டும் சுமார்  60 பில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கின் நிலைப்பாட்டை தங்களிடம் தெரிவிக்குமாறு பிரிட்டிஷ் பாராளுமன்ற ஊடக குழு மார்க்கிற்கு உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைகள் எழுந்தைதைத் தொடர்ந்து #DeleteFacebook என்ற ஹேஷ்டேக் இணையம் முழுவதும் பரவத்தொடங்கியது. உச்சபட்சமாக வாட்ஸ்அப்பின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன் ,"ஃபேஸ்புக்கை டெலிட் செய்வதற்கான நேரம் இது" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டுதான் வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் கைப்பற்றியது. 

இந்தியாவிலும் எதிரொலித்த ஃபேஸ்புக் சர்ச்சை

சேனல் 4 வெளியிட்டிருக்கும் வீடியோவில் இந்தியாவிலும் தங்களது சேவைகளை அளித்திருப்பதாக கேம்பிரிட்ஜ் அனலிடிகா தெரிவித்திருந்தது. எனவே அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. இந்தியாவில் Ovleno Business Intelligence என்ற நிறுவனத்தோடு கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் தாய் நிறுவனம் ஒப்பந்தம் செய்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் வாடிக்கையாளர்களாக பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளும் இருக்கின்றன. எனவே இது தொடர்பாக ஒருவரை ஒருவர் தங்களுக்குள்ளாக குற்றம்சாட்டிக் கொண்டிருந்தார்கள்.  இந்நிலையில் ஃபேஸ்புக் மூலம் தகவல்கள் திருடப்பட்டது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத். 

சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பெரும்பாலான மக்களுக்கு இதன் பின்னால் இருக்கும் முழு விவரங்களும் தெரிவதில்லை. நாம் இங்கு ஃபேஸ்புக்கில் மீம்ஸ்களை தமிழனாய் நினைத்து ஷேர் செய்து கொண்டிருக்கையில், நம் தரவுகளை நமக்கே தெரியாமல் ஷேர் செய்து விளையாடியிருக்கிறது ஃபேஸ்புக். நம் டேட்டா நம்மை விடவும் இன்னொருவருக்கு முக்கியமெனில் அது எவ்வளவு பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும்? ஆனால், உலகில் ஒருசில நாடுகளைத் தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் டேட்டாவை முறையாக பராமரிப்பதற்கான வலுவான சட்டங்கள் இல்லை. அந்த ஓட்டையை தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா சம்பவம். இன்னும்கூட அரசுகள் விழித்துக்கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் நாமெல்லாம் ஃபேஸ்புக்கை விட்டுப் போவதைத் தவிர வேறு வழியே இல்லை!

No comments

Powered by Blogger.