Header Ads



பாராளுமன்றத்தில் பிமல் ரத்னாயக்கா, ஆற்றிய முழுஉரையின் தொகுப்பு

2009ஆம் ஆண்டுவரை முஸ்லிம் மக்களுக்கு தமது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்குரிய சுதந்திரம் முழுமையாக இருந்தது. 2010ஆம் ஆண்டிலிருந்து அந்த மக்களுக்கு எதிராக திட்டமிட்ட அடிப்படையில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

‘ஹலாலில்’ ஆரம்பமான பிரச்சினை கண்டியில் வன்முறை வெடிக்குமளவுக்கு வியாபித்துள்ளது. இதற்கு அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வணிகக் கப்பல் தொழில் சட்டத்தின்கீழ் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதம் தலைதூக்கியுள்ளது. நாட்டுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையும் வீழ்ச்சி காணத் தொடங்கியுள்ளது. போரால் 30 ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்பு, கடந்த சில நாள்களில் ஏற்பட்டு விட்டதுபோல் ஓர் உணர்வு.

நாட்டை நல்லதொரு நிலைக்குக் கொண்டு வருவதற்காக கடந்த 13 ஆண்டுகளில் மக்களால் ஆட்சி நடத்திய அரசுகளுக்கு மூன்று வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. 2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது முதல் வாய்ப்பு வழங்கப்பட்டது. சுனாமியால் நாட்டுக்குப் அழிவு ஏற்பட்டிருந்தாலும் நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கு சகலரும் இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றிணைந்து அரசுக்கு வழி ஏற்படுத்தியிருந்தனர்.

2009ஆம் ஆண்டு இரண்டாம் வாய்ப்புக் கிடைத்தது. போர் முடிவடைந்த பின்னர் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பு உதயமானது. அதை மகிந்த செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிகார மோகத்தால் அந்தச் சந்தர்ப்பத்தை அவர் தவறவிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி மூன்றாவது வாய்ப்பு வழங்கப்பட்டது. அரசியல் மாற்றமொன்றையே மக்கள் சக்தி ஏற்படுத்தியது. மூன்று தலைவர்களும் உதயமான வாய்ப்புகளை வெற்றிகரமாக மாற்றியமைப்பதில் தோல்வி கண்டுள்ளனர்.

நாடு பிளவுபடப் போகிறது, விடுதலைப் புலிகள் மீண்டும் மீட்சி பெறப் போகின்றனர், சிங்கள இனம் குறைந்து செல்கிறது, பௌத்த மதத் தலங்கள் நாசமாக்கப்படுகின்றன போன்ற உளரீதியான அச்சமொன்று சிங்கள மக்களின் மூளைகளுக்குள் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக சிங்கள இனவாதிகள் எனக் கூறுபவர்களுக்கும் அப்பால், சாதாரண சிங்கள மக்களின் மூளைகளிலும் நாடு முடிந்துவிட்டது என்ற அச்சம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் அச்சமடைவது போன்று எந்தவொரு சம்பவங்களும் இடம்பெறவில்லை. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனவாதங்கள் இருக்கின்ற போதும், உறுதியான காரணங்கள் எதுவும் இவற்றுக்கு இல்லை.

2009ஆம் ஆண்டு போர் முடிவடையும் வரையும் முஸ்லிம்கள் தமது கடமைகளைச் செய்து கொண்டே இருந்தனர். போர் நிறைவடைந்த பின்னர் அரசியல்வாதிகளுக்கு விற்பனை செய்வதற்கு எதுவும் இருக்கவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகளை முன்னெடுக்கத் தொடங்கினர்.

2010ஆம் ஆண்டு தேர்தல் முடிவுக்குப் பின்னரே நாட்டில் முன்னர் இருந்திராத ஹலால் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இனமுறுகல் ஏற்படுத்தப்பட்டது.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் கலாசார ரீதியில் மாற்றங்கள் இருக்கின்றன. இந்த வேறுபாடுகளை அரசியலுக்காகப் பிரச்சினையாக்கியுள்ளனர்.

2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் அரசியல் தலைமைத்துவத்தின் உதவியுடன் சில அடிப்படைவாத பௌத்த அமைப்புக்கள் ஹலால் பிரச்சினையை உருவாக்கின என்பதே உண்மை.

அதிலிருந்தே 2011ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தோற்றுவிக்கப்பட்டது. மறுபக்கத்தில் முஸ்லிம் அடிப்படைவாதமும் உள்ளது. முஸ்லிம் அடிப்படைவாதத்தினால் பாதிக்கப்படுவது முஸ்லிம் சமூகமாகும்.

எமது நாட்டில் முஸ்லிம் மக்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இளவயதில் திருமணம் முடிக்கும் முஸ்லிம்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க எந்தவொரு முஸ்லிம் தலைவர்களும் இல்லை.

இலங்கையில் இஸ்லாம் மதத்துடன் அராபிய கலாசாரமும் கொண்டுவரப்பட்டுள்ளது. முஸ்லிம் அடிப்படைவாதம் முஸ்லிம் சமூகத்தையே இலங்கையில் அதிகமாகப் பாதித்துள்ளது.

இருந்த போதும் முஸ்லிம் அடிப்படைவாதம் சிங்களவர்களுக்கோ அல்லது தமிழர்களுக்கோ ஏற்படுத்திய இடையூறுகள் மிகவும் குறைவானவையே.

முஸ்லிம் சமூகத்துக்குக் எதிராக கட்டியெழுப்பப்பட்டுள்ள இனவாதம் சிங்கள மக்களின் மனங்களிலிருந்து தானாக ஏற்பட்டதல்ல. சிங்களவர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டதொன்றாகும்.

அம்பாறையில் தொல்பொருள் திணைக்களத்தினால் பௌத்த விகாரையொன்று உடைக்கப்படும்போது மௌனமாக இருந்த சிங்கள அடிப்படைவாதிகள், தற்போது மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மாத்திரையைப் பெரிய விடயமாக்கியுள்ளனர்.

அம்பள எனப்படும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியிலேயே திகனவில் பெரிய வன்முறை வெடித்தது.

பெப்ரவரி 22ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர், மார்ச் மாதம் 2ஆம் திகதியே உயிரிழந்துள்ளார்.

எட்டு நாட்களில் அம்பள கிராமத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக எந்தவொரு தாக்குதலோ அல்லது வன்முறைச் சம்பவமோ முன்னெடுக்கப்படவில்லை. இன்றும் கூட அங்கு எதுவும் இடம்பெறவில்லை.

உயிரிழந்த இளைஞர் திகன பகுதியைச் சேர்ந்தவர் அல்லர். அம்பள என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இரு இடங்களுக்கும் இடையில் 20 கிலோ மீற்றர் தூரம். இன்றுவரை அம்பள கிராமத்தில் எந்தவொரு இளைஞரும் இனவாத வன்முறைக்காக கைது செய்யப்படவில்லை என்றார் பிமல் ரத்னாயக்க.

3 comments:

  1. இவரது உரையில் 100% சரியானதே ஒரு விடய ம் மற்றும் இஸ்லாத்தின் விளக்கம் இல்லாததால் அவர் முகம் மூடுவது சர்ச்சைகளுக்கு காரணம் எனக் குறிப்பிட்டார்.

    ReplyDelete
  2. தற்பொழுது நாட்டிலுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு முகத்தை மூடுபவர்கள்பொதுஇடங்களில் மூடாமளிருப்பது நல்லது. முகத்தை மூடுவது பர்ள் இல்லை. மூடவிட்டால் பாவமுமில்லை. எனவே நடுநிலைமையை கையாள்வது சிறந்தது.

    ReplyDelete
  3. A Y Skills முகம் மூடுவதில் குறிப்பிட்ட பெண்ணுக்கு சுதந்திரமாக எல்லோரையும் பார்க்கும் இலாபம் இருக்கிறது
    பார்வையை தாழ்த்துவது ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவானது மூடாது இருக்கும் போது (மூடும் எண்ணம் கொண்ட பக்குவமான) பெண் பார்வையை தாழ்த்திக்கொள்வாள் என்பது எனது தாழ்மையான கருத்து

    ReplyDelete

Powered by Blogger.