Header Ads



இரண்டாகப் பிரிந்தது சு.க.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இரு அணிகள் உருவாகியுள்ளன.

பிரேரணைக்கு ஆதரவாக உருவாகியுள்ள அணி அதற்கு கையொப்பத்தை வைக்கவேண்டுமென வலியுறுத்தும் அதேசமயம், பிரேரணையில் கையொப்பமிடக் கூடாதென வலியுறுத்தும் அணி தேசிய அரசின் ஸ்திரத்தன்மை குறித்து கவலையை முன்வைத்திருப்பதாக அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில்,

பிரதமருக்கு எதிராக உருவாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அணியைச் சார்ந்த மூத்த அமைச்சர்கள் சிலர் நேற்றுமுன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நீண்டநேரம் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதில் கையொப்பமிடாத பட்சத்தில் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவளிப்பதாக அமையும் என்று அமைச்சர்கள் பலர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேசமயம், இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்படுவதற்கு எதிரான எம்.பிக்கள் அதற்கான காரணத்தையும் ஜனாதிபதியிடம் விளக்கியுள்ளனர். இப்போதுள்ள சூழ்நிலையில் பிரதமரைப் பதவியிலிருந்து நீக்கினால் அது கூட்டு எதிர்க்கட்சிக்கு அரசியல் ரீதியான நன்மைகளைக் கொடுக்கும் எனவும், அது கொழும்பு அரசியலில் ஸ்திரத்தன்மையற்ற நிலையை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இவ்வாறு இரண்டுபட்டுள்ள அதேசமயம், இந்த இரு தரப்பையும் சமாளித்து ஒருமித்த முடிவொன்றை எடுப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிரம் காட்டி வருகின்றார் என அறியமுடிந்தது - என்றுள்ளது.

No comments

Powered by Blogger.