Header Ads



இலங்கையில் செயற்கை மழை எங்கு பெய்யும்..? எப்படி பெய்யும் தெரியுமா..??


இலங்கையில் பல பகுதிகளில் வறட்சி பதிவாகியுள்ள நிலையில் வரும் மாதங்களில் இங்கு தாய்லாந்து நிறுவனம் ஒன்றின் உதவியுடன் செயற்கை மழை பெய்விக்கப்படவிருப்பதாக சக்தி மற்றும் வலு அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் சுரேன் பத்தகொட இந்தத் தகவலை செய்தியாளர்களிடன் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் பீரோ ஒவ் றோயல் றெயின் மேக்கிங் அண்ட் அக்கிரிகட்சரல் ஏவியேசன் நிறுவனத்தின் தொழில் நுட்ப உதவியுடன் இந்த மழையை பெய்விக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்காக இலங்கை வந்த அந்த நிறுவனத்தின் நிபுணர்கள் சக்தி வலு அமைச்சுடனும், இலங்கை மின்சார சபையுடனும் பேச்சு நடத்தியுள்ளனர்.

இலங்கையில் மழைவீழ்ச்சி குறைவதனால் ஏற்படும் வரட்சிக்கு நிரந்தர தீர்வாக இந்த செயற்கை மழைத் திட்டம் உதவலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

முதலில் முன்னோடி திட்டமாக இந்த செயற்கை மழை பெய்விக்கும் முயற்சிகள் இலங்கையின் முக்கிய நீர்த் தேக்கப் பகுதிகளான காசல்ட்றீ, விக்டோரியா, கொத்மலை மற்றும் மஸ்கெலியா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும்.

பருவ மழை தப்பியதால் இலங்கையில் 6 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியால் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்துக்கான சுற்றாடல் தாக்கம் குறித்த கணிப்பீடுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்த ஆய்வுகளுக்காக இலங்கை அதிகாரிகள் விரைவில் தாய்லாந்து செல்லவும் உள்ளனர்.

இலங்கையை பொறுத்தவரை, அது, சக்திக்காக நீர் மின்சக்தியை மிகவும் நம்பியிருக்கும் ஒரு நாடாகும். ஆனால், மழைவீழ்ச்சி குறைந்த காரணத்தால் தற்போது மொத்த மின்சார தேவையில் 40 வீதத்தை மாத்திரமே இலங்கை நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் பெறுகின்றது. மிகுதி மின்சாரம் செலவுமிக்க தனியார் நிலக்கரி மின் உற்பத்தி மூலமே கிடைக்கிறது. இதனால் மின்வெட்டுகளும் இங்கு அடிக்கடி இடம்பெறுகின்றன.

இந்த நிலையிலேயே செயற்கை மழையை நீரேந்து பகுதிகளில் பெய்வித்து, மின் உற்பத்தியையும், நீர்த் தேவையையும் பூர்த்தி செய்ய அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள்.

செயற்கை மழை

விமானத்தின் மூலமோ அல்லது தரையில் இருக்கும் ஒரு பிறப்பாக்கி மூலமோ சில்வர் அயடைட்டு என்னும் வேதியல் பொருள் மேகங்களை இலக்கு வைத்து தூவப்படும். மேகக்கூட்டத்தில் இந்த சில்வர் அயடைட்டு, பனித்துகள்களை உருவாக்கும். அந்த ஐஸ் துகள்கள் பாரம் தாங்க முடியாமல், நிலத்தை நோக்கி வீழத்தொடங்கும். கீழே வரும் போது அவை கரைந்து மழையாக பொழியும். இந்த அடிப்படையிலேயே செயற்கை மழை பெய்விக்கப்படவுள்ளது.

இலங்கையை பொறுத்தவரை ஒரு பகுதியில் மழை பொய்த்த அதேவேளை மறுபுறத்தில் எல்லினோ காலநிலை செயற்பாடு காரணமாக பருவம் தப்பி பெய்த மழையால் பெரும் வெள்ளமும் ஏற்படுவதுண்டு.

அவ்வாறு இலங்கையின் கிழக்கு பகுதியில் அண்மையில் நெல் அறுவடைக் காலத்தில் காலந்தப்பி பெய்த மழையால் நெற்பயிருக்கு சிறு அழிவு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. காலந்தப்பி பெய்யும் மழையை சரியாக சேமித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் இங்கு கிடையாது என்ற குற்றச்சாட்டும் விவசாயிகளால் முன்வைக்கப்படுகின்றது.

1 comment:

  1. இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழை நீரைப் போன்றது; (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளாகின்றன; முடிவில் பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தை பெற்று கவர்ச்சியடைந்த பொழுது அதன் சொந்தக்காரர்கள்: (கதிரை அறுவடை செய்து கொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்; அச்சமயம் இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம்
    (அல்குர்ஆன் : 10:24)
    www.jaffnamuslim.com

    ReplyDelete

Powered by Blogger.