Header Ads'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)

மஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித் வீரசிங்கவை தற்போது அரசாங்கம் மேலும் சிலருடன் சேர்த்து கைது செய்துள்ளது.

அமித் வீரசிங்க கடந்த சில வருடங்களுக்குள் இந்த நாட்டுக்கு ஏற்படுத்தியிருக்கிற ஆபத்தும், அழிவுகளும் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல தான்.

ஹலாலுக்கு எதிராக, முஸ்லிம்களின் வியாபரத்துக்கு எதிராக, முஸ்லிம்களின் ஜனத்தொகைக்கு எதிராக, ரோஹிங்கியா அகதிகளுக்கு எதிராக, ஹிஜாப் அணிவதற்கு எதிராக, என்று அடுக்கிக் கொண்டு போகலாம்.

ஜாதிக ஹெல உறுமய சித்தாந்த தளத்திலும், களத்திலும் பெரும் பங்கை 90 களிலிருந்து இரு தசாப்த காலம் பங்கை ஆற்றிய பின்னர் அவர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்குடன் தேர்தல் அரசியலில் களமிறங்கினார்கள். தேர்தல் அரசியலுக்காக தந்திரோபாய ரீதியில் நேரடி இனவாதத்தை பிரயோகிப்பதை தவிர்த்தார்கள். அவர்கள் அதுவரை மேற்கொண்ட பணியை அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சக்திகள் புதிய அமைப்புகளை உருவாக்கி அடுத்த கட்டத்திற்கு முன்னகர்த்தத் தொடங்கினார்கள் அந்த வரிசையில் முதன்மையான அமைப்பாக பொதுபல சேனா இயக்கம் தோன்றி ஆக்ரோஷமாக இயங்கத் தொடங்கியது.

ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருந்த அமைப்புகளைவிட புதிதாக “சிங்கள தேசிய முன்னணி”, “சிஹல ராவய” “சிங்களே இயக்கம்”,  “இராவணா பலய” போன்ற பல அமைப்புகள் முளைத்தன. அதன் நீட்சி தான் “மஹாசொன் பலகாய” இயக்கம்.
ஏனைய அமைப்புகள் பிக்குகளை, சேர்த்துக் கொண்ட சற்று முதிர்ச்சி மிகுந்தவர்களைக் கொண்ட அமைப்பாக இயங்கியது. பெரும்பாலும் கூட்டங்கள் நடத்துவது, ஊடக மாநாடுகளை நடத்துவது, குறித்த ஒரு விடயத்துக்காக கூட்டணி அமைப்பது போன்றவற்றை மேற்கொள்வார்கள். ஆனால் “மஹாசொன்” அமைப்பு ‘“சிங்களே” அமைப்பை சேர்த்துக்கொண்டு இளம் இனவாத சக்திகளை அணிதிரட்டியது.


சித்தாந்த உருவாக்கத்துக்கு ஒரு அணி, கூட்டங்கள் நடத்துவதற்கும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் வேறு அணி இயங்கிய நிலையில், களத்தில் சண்டித்தனம் செய்வதற்கு இந்த இளைஞர்களைக் கொண்ட “மஹாசொன்”, “சிங்களே” போன்ற அமைப்புகள் களம் இறக்கப்பட்டன. அந்தந்த அரசியல் கள நிலவரத்துக்கு ஏற்றாற்போல அரசியல்வாதிகளும் இவர்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.

குறுகிய காலத்தில் பல சிங்கள பிரதேசங்களில் கிளைகளை அமைத்தது. அந்தக் கிளைகளுக்கு முகநூல் பக்கங்களும் உருவாகின. தமக்கிடையிலான தொடர்பு வலைப்பின்னலைப் பேணுவதற்கு மட்டுமல்ல, தமது இனவாத பிரச்சாரங்களையும், வதந்திகளையும் கட்டற்று பரப்புவதற்கும், தமது கள நடவடிக்கைகளின் போது அந்தந்த இடங்களில் ஆட்களை உடனடியாக திரட்டுவதற்கும் தான். அதனை இனவாத சம்பவங்களின் போது காணவும் முடிந்தது.

இனவாத பிரச்சாரத்துக்காக இவர்களால் உருவாகப்பட்ட போலி, பினாமி இணையத்தளங்களும், முகநூல் பக்கங்களும் ஆயிரக்கணக்கானவை. “மஹாசொன் பலகாய”வின் முகநூல் பக்கத்தின் பிரதான வாசகம் இப்படி கூறுகிறது. “நாங்கள் பௌத்த சாசனத்தைக் காக்க வந்த அரக்கர் சேனை”.  ஒரே இடத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட முகநூல் பக்கங்களை இயக்கியமையும் கண்டுபிடிக்கப்பட்டது  என்று சமீபத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடக மாநாட்டில் கூறினார்.
கண்டியிலும் அதனைச் சூழ உள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த வன்முறைகளில் அமித் வீரசிங்க போன்றோர் எப்படி பல பிரதேசங்களில் இருந்தும் சண்டியர்களை பஸ் வண்டிகளில் இறக்கினார்கள், அவர்களுக்கு அனுசரணையாக இருந்த பிக்குமார் யார் என்பவை பற்றிய வீடியோ ஆதாரங்கள் போதுமான அளவு வெளிவந்து விட்டன. வீடியோவில் கிடைக்காத திட்டங்கள், தயாரிப்புகள் என்பன எவ்வாறெல்லாம் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கவும் முடியவில்லை. அதேவேளை கண்டி , குண்டசாலை பகுதியில் இருந்த அவர்களின் அலுவலகத்தில் பொலிசார் 13 அன்று நடத்திய திடீர் சோதனையின் போது இனவாதத்தையும், இனவெறுப்புணர்ச்சியையும் உண்டுபண்ணும் பிரச்சார சுவரொட்டிகள், பேனர்கள், துண்டுப் பிரசுரங்கள் மட்டுமன்றி பெட்ரோல் குண்டு தயாரிப்பதற்கான போத்தல்கள், இன்னும் பல உபகரணங்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் என்பவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அமித் வீரசிங்க இதற்கு முன் முஸ்லிம் பிரதேசங்களைத் தாக்குவதற்காக திட்டமிடும் வீடியோக்கள் யூடியுபில் பகிரங்கமாகவே இருக்கின்றன.

இவர்களுக்கான நிதி உதவிகளை கொரியா, ஜப்பான், மத்தியகிழக்கு போன்ற நாடுகளில் பணிபுரியும் சிங்கள பௌத்தர்கள் அனுப்பினார்கள். அவர்களின் உதவியின் பேரில் தான் பல புதிய சிறிய பௌத்த விகாரைகள் கட்டப்பட்டன. பௌத்தர்கள் செறிவாக வாழாத பகுதிகளில் புத்தர் சிலைகளை கொண்டுபோய் நிறுவுதற்கான நிதி வளங்கலும் வெளிநாடுகளில் இருந்து தான் இவர்களுக்கு கிடைத்தன.

இவர்களுக்கான சித்தாந்த வழிகாட்டல், நிறுவன ரீதியிலான வழிகாட்டல் மேலிருந்து கிடைத்தன. அவர்களின் பணிகளுக்கு பாதுகாப்பாக சில பிக்குமார் கூட இருப்பார்கள். அவர்களின் காவிச் சீருடை தேவையான இடங்களில் இந்த இளைஞர்களைப் பாதுகாக்கும்.

சட்டச் சிக்கல் வந்தால் மேலிருக்கும் அணியினர் அகப்படுவதில்லை. இவர்கள் பலிக்கடாக்களாக ஆக்கப்படுவார்கள். ஆகவே தான் சமீப காலமாக சாலிய ரணவக்க, டான் பிரசாத் போன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். இறுதியில் ஒட்டுமொத்த பழியும் இப்போது அமித் வீரசிங்க, சுரேத சுரவீர போன்றோர் மீது போட்டுவிட்டு பேரினவாத கட்டமைப்பு தப்பித்துக்கொள்ளும். இந்தப் பலிக்கடாக்கள் வெளியில் வந்த பின்னர் ஒன்றில் இரகசிய தலைமறைவு / செயற்பாட்டுக்கு செல்வார்கள். அவர்களின் இடத்திக்கு புதிய பலிக்கடாக்கள் நிரப்பப்படுவார்கள். இது காலாகாலமாக நிழலும் சுழற்சி செயற்பாடு தான்.

ஆக, பேரினவாத சித்தாந்தமும், அந்த கட்டமைப்பும் நிலைகுலையாமல் உறுதியாக, பலமாக திரைமறைவில் இருந்துகொண்டு தமது நிகழ்ச்சிநிரலை ஓயாமல் கொண்டுசெல்லும்.
மொத்த குற்றச்சாட்டுக்களையும் இவர்களிடம் போட்டு விட்டு குற்றவாளியை பிடித்துவிட்டோம் என்று ஆட்சியில் இருப்பவர்களும் தப்பித்துவிடுவார்கள். அமித் வீரசிங்கவை உருவாக்கிய சக்திகளும், அதன் பின்னால் வழிநடத்தும் சித்தாந்தமும் அரசின் கண்களுக்கு படப்போவதில்லை. அப்படி கண்களில் பட்டாலும் அதையிட்டு நடவடிக்கை எடுக்கப் போவதுமில்லை, அதற்கான திராணியும், சக்தியும், தைரியமும் கூட அரசுக்கு கிடையாது.

இன்று ஒரு மஹாசொன் பேயைப் போல நாளை வேறு பெயர்களில் பேய்கள் அவதரிப்பதை தடுப்பதற்கு இந்த நாட்டில் எந்த மலட்டு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதுவரை சிறுபான்மை மக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும், எதிர்காலத்துக்கும் எந்தவித  பாதுகாப்புக்கும் உத்தரவாதமும் கிடையாது என்பது மட்டும் நிதர்சனம்.

மகாவம்சம் சொல்வது...
“மஹாசொன்” (Mahason Demon) என்பது பற்றி மகாவம்சத்தில் சில குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. “மஹா சோன யக்கா” என்பார்கள் சிங்களத்தில். கரடியின் முகமும், கரு நாயின் உடலையும் கொண்டது அது. உடலால் சிறுத்தும், தலையால் பெருத்தும் இருக்கும். பெரும் உடல் பலத்தையும் கொண்ட இந்த அரக்கன் மனிதர்களைக் கொல்ல கையை விரித்து நடு முதுகில் தாக்கினால் கொல்லப்பட்டவரின் உடலில் நீலம் பூத்த கை அடையாளம் பதிந்திருக்கும் என்பது ஐதீகம்.

துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில் இடம்பெற்ற சரித்திரப் போரில் துட்டகைமுனுவுக்காக அரக்கர் சேனைக்கு தலைமை தாங்கிய பேரரக்கனாக “மஹாசொன்” (இன்னொரு பெயர் ரிட்டிகல ஜயசேன) அரக்கனை குறிப்பிடுகிறது மகாவம்சம். துட்டகைமுனுவின் வெற்றிக்கு பங்களித்த முக்கிய தளபதிகளாக இருந்த 10 அசுரர்களில்  (“தச மஹா யோதயோ”) ஒருவர் “கோட்டயிம்பர” என்கிற அசுரன். அவ்வசுரனின் நெருங்கிய நண்பனாக இந்த அரக்கனைக் குறிப்பிடுகிறது மகாவம்சக் கதை.

மகாவம்சத்தின் உப கதைகளைக் கொண்ட  விரிவாக்க இதிகாச நூல்கள் சிங்களத்தில் உள்ளன. அவற்றில் “சஹஸ்சவத்தூபகரணய”, “ரசவாகினி சத்தர்மாலாங்கார” போன்ற நூல்களில் இந்த மஹாசொன் பற்றிய விரிவான கதைகள் உண்டு. அதன்படி துட்டகைமுனு விஜிதபுர சமரில் கண்ட வெற்றியைக் கொண்டாதுவதற்கு ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தான். அதன் போது அரக்கர்களுடன் வந்து சேர்ந்த “மஹாசொன்” கோட்டயிம்பரவின் மனைவியை அடைய முயற்சி செய்ததாகவும் அதனால் ஆத்திரம் கொண்ட “கோட்டயிம்பர” தன்னுடன் சண்டைக்கு “மஹாசொன்”னை அழைத்ததாகவும் அந்தச் சண்டையில் “மஹாசொன்”  அரக்கனின் தலை துண்டாடப்படுவதாகவும். துண்டாடப்பட்டத் தலைக்குப் பதிலாக ஒரு கரடியில் தலையை இந்த அரக்கனுக்கு பொருத்தப்பட்டதாகக் கூறுகிறது.

இந்த அரக்கனை சுடுகாட்டுத் தெய்வமாகவும் அழைப்பார்கள். இரவு நேரங்களில் தான் இதன் எதிர்பாராத திடீர் தாக்குதல் நடக்கும். இரவில் பேயடிக்கும் என்பார்களே அது தான். “மஹாசொன்” பேய் ஏறிய உடலில் இருந்து  அதனை விரட்டுவதற்கென்றே இன்றும் சிங்களகிராமங்களில் “மஹாசொன்” பேய் விரட்டும் (“பேய் பிடித்தவர்களுக்கு”) தொவில் ஆட்ட சடங்கு நடப்பதுண்டு. மஹா சொஹொன் உருவத் தலையைப் போட்டுக்கொண்டு ஆடுவது சிங்கள சம்பிரதாய தொவில் ஆட்ட வடிவங்களில் ஒன்று. “மஹாசொன்”னுக்காக மிருகங்கள் பலி கொடுத்து, பாட்டுபாடி, “பெர” வாத்திய தாளத்துடன் “மகாசொன்”னை குறிப்பிட்ட உடலை விட்டு வெளியேற்றும் சடங்கும் நிகழும்.

சுருக்கமாகசக் சொன்னால் சிங்கள பௌத்தர்களின் புனித நூலாக கருதப்படும் மகாவம்சம் பிரேரிக்கின்ற இரவில் மறைந்திருந்து இரகசியமாக திடீர் தாக்குதல் நடத்தி கொலை செய்யும் ஒரு குறியீடாக “மஹாசொன்” பாத்திரத்தை முன்னிறுத்துகின்றன சிங்கள பௌத்த சக்திகள்.

No comments

Powered by Blogger.